மேலும்

திருகோணமலைக் கடலில் கடற்படை, விமானப்படை தொடர்ந்து தேடுதல்

y-12திருகோணமலைக் கடலில் மோசமான காலநிலைக்கும் மத்தியில் சிறிலங்கா கடற்படையும், விமானப்படையும் சடலங்களைத் தேடும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

திருகோணமலையில் இருந்து 20 கடல் மைல் தொலைவில், ஆறு சடலங்கள் மிதப்பதைக் கண்டதாக, மீனவர்கள் தகவல் கொடுத்ததையடுத்து, நேற்றுமுன்தினம் மாலையில் சிறிலங்கா கடற்படையினர் தேடுதலில் இறங்கினர்.

இரண்டு அதிவேகத் தாக்குதல் படகுகளில் சென்ற கடற்படையினர், நள்ளிரவு வரை தேடுதலில் ஈடுபட்டனர்.

கடுமையான கடற்கொந்தளிப்பு மற்றும் வெளிச்சமின்மை போன்ற மோசமான காலநிலையால் கடற்படையினரால் சடலங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, நேற்று மூன்று அதிவேகத் தாக்குதல் படகுகளும், சிறிலங்கா விமானப்படையின் வை -12 விமானம் ஒன்றும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

எனினும், சடலங்கள் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.

”தற்போதைய கடல் கொந்தளிப்பு காரணமாக சென்னை வெள்ளத்தில் சிக்கியவர்களின் சடலங்கள் ஆழ்கடலுக்கு இழுத்து வரப்படுவதற்குச் சாத்தியங்கள் உள்ளன.

சடலங்கள் கரையொதுங்க வாய்ப்புள்ளதால், கடலோரப் பகுதி மக்களுக்கும் மீனவர்களுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, திருகோணமலை- நிலாவெளி கடற்கரையில் நேற்று முன்தினம் கரையொதுங்கிய உடலை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சடலத்துடன் சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த பூமி துரை என்ற வாடகைக் கார் சாரதியினுடைய அடையாள அட்டை கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து, இந்தியத் தூதரகம் மூலம் தமிழ்நாடு காவல்துறைக்கு தகவல் தரப்பட்டது.

தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பூமி துரை என்ற சாரதி கோவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனால் அவரது அடையாள அட்ilயை வேறு எவரேனும் பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதுடன் அவரை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *