மேலும்

சந்திரிகாவுக்கும் இலஞ்சம் கொடுக்க முயன்ற அவன்ட் கார்ட் நிறுவனம்

chandrikaஅவன்ட் கார்ட் நிறுவனம் தனக்கும் இலஞ்சம் தர முன்வந்ததாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் நேற்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்க உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,

“அவன்ட் கார்ட் நிறுவனத்தைப் பாதுகாப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்னை அணுகினார்.

இது தொடர்பாக ஏனையவர்களைத் தாம் இணங்க வைத்து விட்டதாகவும், நான் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் அவர் என்னிடம் கூறினார். அவரது பேரத்துக்கு இணங்க நான் மறுத்து விட்டேன்.

அமைச்சரவையில் அவன்ட் கார்ட் விவகாரம் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அமைச்சர்கள் பலரையும் தொடர்பு கொண்டார்.

இந்த வழக்கை விசாரிக்கும் உதவி காவல்துறை கண்காணிப்பாளரையும் தொடர்பு கொண்டு 100 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்க முன்வந்தார்.

அதனை அந்த காவல்துறை அதிகாரி நிராகரித்து விட்டார். அதனை நிராகரித்தமைக்காக, உதவி காவல்துறை கண்காணிப்பாளரை தேசிய வீரராக கௌரவிக்க வேண்டும்.

முன்னைய ஆட்சியில் கோத்தாபய ராடிஜபக்சவும், முன்னர் சட்டமா அதிபராக இருந்த மொகான் பீரிசும் சட்டத்துக்கு விரோதமான முறையில் பெருமளவு பணத்தைக் கொள்ளையிடுவதற்காக உருவாக்கியதே இந்த அவன்ட் கார்ட் நிறுவனம்.

சுதந்திரக் கட்சி அமைச்சர் ஒருவரின் சகோதரருக்கு, மத்திய வங்கியில் இருந்து 7 பில்லியன் ரூபா மாற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத செயற்பாடுகள் பற்றிய சில தகவல்கள் தான் கண்டறியப்பட்டுள்ளன. ஏனையவையும் விரைவில் கண்டறியப்படும்.

அம்பாந்தோட்டையில்,கப்பல்களுக்கு எண்ணெய் நிரப்பும் கட்டுமான வசதிகளை ஏற்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவே எனது அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

அதிபர் தேர்தலுக்குப் பின்னர், ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்ச அந்த திட்டத்தையே ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டார்.

அது நாட்டின் பொருளாதாரத்துக்குப் பெரும் சுமையாக மாறிவிட்டது.

கொழும்பில் ஒரு துறைமுகம் இருக்கும் போது, சிறிலங்கா போன்ற தீவில், இன்னொரு துறைமுகம் தேவையற்றது.

அவசியமில்லாத திட்டங்களில், பில்லியன் கணக்கான ரூபாக்கள் செலவிடப்பட்டுள்ளன.

முன்னைய அரசாங்கம் வெறுமையான திறைசேரியை விட்டுச் சென்றுள்ளதால், இப்போதைய அரசாங்கம் நெருக்கடியை எதிர்கொள்கிறது.

ஜனநாயக அரசாங்கம் ஒன்று சட்ட செயல்முறைகளில் வேகமாக பயணிப்பது சாத்தியமற்றது.

காவல்துறை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள எல்லா அதிகாரிகளும் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல.

சட்டமா அதிபர் வரும் ஜனவரி மாதம் ஓய்வு பெறவுள்ள நிலையில், அவரது மேசையில் 19 கோப்புகள் நிலுவையில் இருக்கின்றன.

எனது ஆட்சிக்காலத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வர மில்லியன் கணக்கில் செலவிடப்பட்டது. அதன் மூலம்  கிட்டத்தட்ட 80 வீதமான பிரதேசம் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

நான் ஆட்சியை விட்டு போகும் போது, முல்லைத்தீவும், கிளிநொச்சியும் மாத்திரமே விடுவிக்கப்பட வேண்டியிருந்தது.

எனது ஆட்சிக்காலத்தில் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களினால் தான், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் போரில் வெற்றியைப் பெற முடிந்ததாக, முக்கிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராஜபக்ச மீதான பயத்தினால் கடந்த ஒன்பது ஆண்டுகளாக சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் எவரும் என்னுடன் பேசுவதில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *