மேலும்

இனியும் ஏமாற முடியாது, பொறுமையின் எல்லை தாண்டிவிட்டது – சுமந்திரன் விசனம்

sumanthiranசிறிலங்கா அரசாங்கத்தின் வாக்குறுதிகளை இனியும் நம்பி நம்பி ஏமாற முடியாது, பொறுமைக்கும் எல்லையுண்டு. அந்த எல்லை தாண்டிவிட்டது என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதத்தில் வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட கடந்த காலங்களில் இரகசிய முகாம்கள் இயங்கியதாக, கூறுகிறார். ஆனால் அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறான இரகசிய முகாம்கள் இயங்கவில்லையென கூறுகிறார்.

கடந்த காலத்தில் படையினருக்கு கட்டளையிடும் அதிகாரியாக இருந்தவர் ஒருவர் இரகசிய முகாம் இருப்பதாக கூறும் போது அமைச்சர் இல்லையென்கிறார். இதனை எப்படி ஏற்றுக்கொள்வது?

பூஸா தடுப்பு முகாம், விளக்கமறியல் நிலையமாக வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பூஸா தடுப்பு முகாம் உட்பட பயங்கரவாத தடுப்பு முகாம்களிலும் பலர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் தான் இரகசிய முகாம்கள் இயங்கின. பலர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். எமது ஆட்சியில் இவ்வாறான தடுப்பு முகாம்கள் எதுவும் இல்லையென புதிய அரசு கூறுகிறது. அப்படியென்றால் அரசு அதனை உறுதிப்படுத்த வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகளை நவம்பர் 07 ஆம் திகதிக்குள் விடுதலை செய்து விடுவோம் என அரசு எமக்கு உறுதி மொழி வழங்கியது. கடும் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இன்று வரை உறுதி மொழிகள் நிறைவேற்றப்படவில்லை.

தமிழ் அரசியல் கைதிகள் மொத்தம் 217 பேர் உள்ளனர். அவர்களில் 39 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறு சிறு குற்றங்களை செய்த 21 பேர் புனர்வாழ்வு நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என உறுதி வழங்கப்பட்டது. அதில் ஒருவர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இப்போது 150 இற்கு மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 15, 20 ஆண்டுகள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம் அவசியமற்றது. இதனை கைவிட வேண்டும்.

மாவட்ட அபிவிருத்திக்குப் பொறுப்பாக எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்டது. ஆனால் அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

6 வாக்குகளால் வெற்றி பெற்ற ஐ.தே.க உறுப்பினர்களுக்கு உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுவும் அநீதியான செயற்பாடாகும்.

கடந்த ஆட்சியாளர்கள் எமக்கு உறுதிமொழிகளை வழங்கவும் இல்லை, எதனையும் நிறைவேற்றவும் இல்லை.

ஆனால் ஐதேகவின் புதிய ஆட்சியில் எமக்கும் தமிழ் மக்களுக்கும் உறுதி மொழிகள் வழங்கப்பட்டன.  நாம் அதன் மீது நம்பிக்கை வைத்து அரசின் வரவு-செலவுத் திட்டத்திற்கும் ஆதரவு வழங்கினோம்.

கடந்த காலங்களில் ஐதேக. வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்ற எண்ணம் இருந்தது. தற்போது அந்தநிலைப்பாட்டிலிருந்து மாறியிருப்பார்கள் என நினைத்து ஆதரித்தோம்.

ஆனால் இன்றும் ஐதேகவின் பழைய கொள்கைகள் மாறவில்லையென்றே தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் உறுதி மொழிகளை வழங்குகின்றீர்கள். ஆனால் அதனை நிறைவேற்றாது எம்மை ஏமாற்றுகின்றீர்கள். அனைத்து வாக்குறுதிகளும் பொய்யான வாக்குறுதிகளாகவே உள்ளன.

ஐதேக கடந்த காலங்களில் மக்கள் பிரதிநிதிகளை மக்களிடமிருந்து ஓரம்கட்டி இடைவெளியை ஏற்படுத்தக் கையாண்ட நாடகத்தையே இப்போதும் அரங்கேற்றுவதாகவே புலப்படுகிறது.

வரவுசெலவுத் திட்டத்தை ஆதரித்தீர்கள். இதனால் தமிழர்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன- எதை சாதித்தீர்கள் என்று எமது மக்கள், அரசியல் கைதிகள் எம்மிடம் கேள்வி கேட்கிறார்கள்.

இரண்டு கூட்டமைப்பு உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிக்கவில்லை. அவர்கள் எமக்கு தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி கடிதம் அனுப்பி வைத்துள்ளார்கள்.

தமிழ் அரசியல் கைதிகளை இனி எந்த முகத்தோடு நாம் போய் சந்திக்க முடியும்?

அவர்களை விடுவிப்போம் என்றோம். நீங்களும் அதற்கு உறுதிமொழி வழங்கினீர்கள். ஆனால் எதுவுமே நடக்கவில்லை.

இனியும் நம்பி நம்பி ஏமாற முடியாது பொறுமைக்கும் எல்லையுண்டு. தற்போது அந்த எல்லை தாண்டிவிட்டது.

இன்று கிழக்கை விட வடக்கில் பெருமளவிலான இராணுவத்தினர் உள்ளனர். இன்று போர் இல்லை. எனவே பெருமளவில் வடக்கில் இராணுவம் அவசியமில்லை.

எனவே 40-45 வயதுக்கு மேற்பட்ட இராணுவத்தினரை பணியில் இருந்து விடுவித்து அவர்கள் சிவில் சமூகத்துடன் இணைந்து வாழும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.

படையினரை பராமரிப்பதற்கு செலவழிப்பதற்கான அதிக பணம் இதனால் மீதமாகும். படையினரும் இதனை விரும்புவார்கள். அரசிடம் இவ்வாறான திட்டம் எதனையும் மேற்கொள்ளும் நிலைப்பாடு உள்ளதா?

அண்மையில் நீதியமைச்சில் 95 பேர் சிற்றூழியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். ஆனால் இவர்களில் ஒருவர் மட்டுமே தமிழ் பேசுபவர்.

நீதித்துறையில் வடக்கு கிழக்கில் வெற்றிடங்கள் நிலவுகின்றன. ஆனால் நியமிக்கப்பட்ட ஒருவர் மட்டுமே தமிழ் பேசுபவர் . இது அநீதியானது.

இதேபோன்று உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் உட்பட மாவட்ட நீதிமன்றங்களிலும் தமிழ் பேசும் நீதிபதிகளின் குறைபாடுகள் நிலவுகின்றன.

எனவே தமிழ் பேசும் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் மொழி பெயர்ப்பாளர்கள் அதிகளவில் நியமிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *