கடந்தகாலத் தவறுகளை ஏற்றுக்கொண்டாலே நல்லிணக்கம் சாத்தியம் – சந்திரிகா
கடந்தகாலத் தவறுகள் மற்றும் சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஏற்றுக் கொள்ளாமல், நல்லிணக்கம் சாத்தியப்படாது என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர், கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
“உள்நாட்டுப் போரில் ஒரு இலட்சம் பேர் வரை உயிரை இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானனோர் இடம்பெயர்ந்துள்ளனர்
இராணுவ மட்டத்தில் ஒரு போரை முடிவுக்குக் கொண்டு வந்ததை விட இன்னும் பெரியளவில் செய்ய வேண்டியிருக்கிறது.
முன்னைய அரசாங்கத்தினால் போரில் வெற்றி ஈட்ட முடிந்த போதிலும், சமாதானத்தை இன்னமும் அடைய முடியவில்லை.
மோதல்களுக்கான அடிப்படைக் காரணத்தை கண்டறிந்து அதற்குத் தீர்வு காண வேண்டும்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் விரைவில் அமைக்கப்படும்.
இதன் மூலம் இராணுவத்தில் பிரதான கட்டளையிடும் நிலையில் இருந்தவர்கள் விசாரிக்கப்படுவரே தவிர படையினர் அல்ல.
சாதாரண படையினர் தமக்கு வழங்கப்பட்ட உத்தரவுகளை மாத்திரமே நிறைவேற்றினர்.
இந்த விசாரணைகளுக்கு வெளிநாட்டு தொழில்நுட்ப மற்றும் தடயவியல் ஆய்வு உதவிகள் ஏற்றுக் கொள்ளப்படும்.
மேற்குலக அழுத்தங்களினால் தான் அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை.
தற்போது உயிருடன் உள்ள விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் குற்றமிழைத்திருந்தால் அவர்களுக்கு எதிராகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.