இந்தியத் தளபதி வராததால், அமைதிப்படையினரின் நினைவிடத்தில் துணைத்தூதுவர் அஞ்சலி
இந்திய இராணுவத் தளபதியின் யாழ்ப்பாண வருகை ரத்துச் செய்யப்பட்டதால், இந்திய அமைதிப்படையினருக்கு, அஞ்சலி செலுத்த பலாலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன் மட்டும் பங்குபற்றினார்.
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் நேற்று யாழ்ப்பாணம் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
அவர் பலாலியில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் யாழ்ப்பாணத்தில் கொட்டிய கடும் மழையினால், அவரது பயணம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்திய இராணுவத் தளபதியை எதிர்பார்த்து பலாலியில் காத்திருந்த இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன் மற்றும், யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த ஆகியோர், மட்டும் இந்திய அமைதிப்படையினரின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதேவேளை, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் நேற்று முல்லைத்தீவு செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், சிறிலங்கா இராணுவத்தினரால் புதுக்குடியிருப்பு கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் அவர் அஞ்சலி செலுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதற்கான மேடைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த மழையில் அந்த மேடைகளும் வெள்ளத்தில் மூழ்கின.
இதனால் இந்தியப்படைத் தளபதியின் முல்லைத்தீவு பயணமும் ரத்துச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.