மேலும்

வெளியே போகிறார் கமலேஷ் சர்மா – கொமன்வெல்த் புதிய செயலராகிறார் பற்றீசியா

Patricia-Scotland-Baronessகொமன்வெல்த் அமைப்பின் புதிய பொதுச்செயலராக, பரோனெஸ் பற்றீசியா ஸ்கொட்லன்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கொமன்வெல்த் அமைப்பின் பொதுச் செயலர் பதவியை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் நாள் பொறுப்பேற்கவுள்ளார்.

மோல்டாவில் நடைபெறும் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில் இது தொடர்பாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டொமினிக்காவில் பிறந்து, பிரித்தானியாவில் குடியேறிய, பரோனெஸ் பற்றீசியா ஒரு சட்டநிபுணராவார்.

இவர் கோடன் பிறவுண் அரசாங்கத்தில் சட்டமா அதிபர் பதவியை வகித்தவர் என்பதுடன், சட்டத்துறை சார்ந்த முக்கிய பதவிகள் பலவற்றையும் பிரித்தானியாவில் வகித்துள்ளார்.

கொமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலராக பொறுப்பேற்கவுள்ள முதல் பெண் இவர் என்பதும், முதலாவது பிரித்தானியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Baroness Patricia -kamalesh

இந்திய இராஜதந்திரியான கமலேஷ் சர்மாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையிலேயே, பரோனஸ் பற்றீசியா இந்தப் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொமன்வெல்த் செயலர் பதவிக்கு, பரோனெஸ் பற்றீசியாவுடன், பொட்ஸ்வானா மற்றும் கயானா நாடுகளைச் சேர்ந்த இருவர் போட்டியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொமன்வெல்த் செயலராக தற்போது பதவி வகிக்கும், கமலேஷ் சர்மா, சிறிலங்காவில் முன்னர் ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமாக இருந்தவர் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது.

2013இல் சிறிலங்காவில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்த கடும் எதிர்ப்புக் கிளம்பியபோது. அதனை முறியடித்து, கொழும்பில் அந்த மாநாட்டை நடத்துவதில், கமலேஷ் சர்மா தீவிர ஆர்வம் காட்டியிருந்தார்.

இவர், 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் நாள் கொமன்வெல்த் பொதுச்செயலர் பதவியை ஏற்றிருந்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரிக்க, கொமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு நீதுிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குத்தொடுனர்களின் பங்களிப்புடன் விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

எனினும், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான கமலேஷ் சர்மா கொமன்வெல்த் செயலராக இருப்பதால், அவருக்கு சார்பானவர்கள் இந்தப் பொறிமுறைக்கு நியமிக்கப்படலாம் என்றும் கருதப்பட்டது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் நாள், கொமன்வெல்த் பொதுச்செயலர் பதவி பிரித்தானியாவைச் சேர்ந்த சட்டநிபுணரான பரோனஸ் பற்றீசியாவுக்கு கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *