மேலும்

இந்திய இராணுவத் தளபதி சிறிலங்கா பயணம் – இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையில் மாற்றம்?

General Dalbir Singhஇந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் நாளை சிறிலங்காவுக்கு ஐந்து நாள் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது அவர், சிறிலங்காவின் பழைய போர் விமானங்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், டாங்கிகளை தரமுயர்த்துவது தொடர்பாக கலந்துரையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக புதுடெல்லியில் இருந்து வெளியாகும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் நாளிதழ் தகவல் வெளியிடுகையில், சிறிலங்காவில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கைத் தடுக்கும் புதுடெல்லியின் ஒரு முயற்சியாகவே, அவர் இதுபற்றி கொழும்பில் பேச்சு நடத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு கருவிகளை தரமுயர்த்தவும், புதுப்பிக்கவும், புதுடெல்லியிடம் கொழும்பு கோரிக்கை விடுத்தால், அது, உள்நாட்டு அழுத்தங்கள் காரணமாக, சிறிலங்காவுக்கு அழிவுகளுக்குப் பயன்படுத்தப்படும் போர்க் கருவிகளை விற்பதில்லை என்ற இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையில், கூர்மையான திருப்பம் ஒன்றை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

சிறிலங்காவுடன் பரந்தளவிலான இராணுவ ஒத்துழைப்பை விரிவாக்குவது தொடர்பான விடயம் தீவிர பரிசீலனையில் இருப்பதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சு வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டு அரசியல் காரணமாக, சிறிலங்காவின் இராணுவத் தேவைகளை இந்தியா பூர்த்தி செய்யத் தயக்கம் காண்பிப்பதால், அந்த நாடு, சீனா, பாகிஸ்தான் பக்கம் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இது புதுடெல்லியில் குழப்பமான மனநிலையை ஏற்படுத்தியுள்ளது.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம், இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையில்  அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டிருப்பதால் இந்த நிலையை மாற்ற முடியும்.

இந்த நிலையில், நாளை சிறிலங்காவுக்குச் செல்லும் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர்சிங் சுஹக், பாதுகாப்பு அமைச்சைத் தம் வசம் வைத்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தவுள்ளார்.

இந்திய அமைதிப்படையில் சிறிலங்காவுக்குச் சென்ற, ஜெனரல் தல்பீர் சிங் சுஹக்கிற்கு அது வாழ்க்கையில் மிக முக்கிமான காலகட்டமாக இருந்தது.

1987ஆம் ஆண்டு அவரது படைப்பிரிவு, சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட போது, அதன் கட்டளை அதிகாரி உள்ளிட்ட 20 பேரை இழந்தது.

அந்தக் காலகட்டத்தில் டேராடூனில் உள்ள இந்திய இராணுவ பயிற்சி அகடமிக்கு ஒரு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த, ஜெனரல் சுஹக், தமது படைப்பரிவு தாக்கப்பட்ட 24 மணிநேரத்துக்குள், தானாக முன்வந்து, தமது படையணியில் இணைந்து கொள்ள யாழ்ப்பாணத்துக்கு விரைந்தார்.

அடுத்த இரண்டு ஆண்டுகள் அவர், திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு, மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த இடமான வல்வெட்டித்துறை ஆகிய இடங்களில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.

இவர், இம்முறை சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது, சிறி ஜெயவர்த்தனபுர கோட்டேயில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அமைதிப்படையினருக்கான நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிடம் முன்னர், ஆளில்லா வேவு விமானங்கள், ஆழ ஊடுருவித் தாக்கும் குண்டுகள், ரொக்கட்டுகள், இரவுப்பார்வை சாதனங்கள், மற்றும் தமது போர் விமானங்களுக்கான உதிரிப்பாகங்களை வழங்குமாறு கொழும்பு கேட்டிருந்தது.

ஆனால் இந்தியா அதற்கு இணங்கவில்லை.

2012ஆம் ஆண்டு ஆறு குதிரைகளை வழங்குமாறு சிறிலங்கா கோரிக்கை விடுத்த போது, இந்தியா அதற்கு மெதுவாகவே பதிலளித்தது.

ஆனால் அதற்குள் உடனடியாகவே குதிரைகளை பாகிஸ்தான் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *