மேலும்

மோல்டாவில் சிறிலங்காவுடன் விவாதிக்க பிரித்தானியா திட்டம்

ukமோல்டாவில் நாளை ஆரம்பமாகவுள்ள, மூன்று நாள் கொமன்வெல்த் உச்சி மாநாட்டு நிகழ்ச்சி நிரலில், சிறிலங்கா விவகாரம் இடம்பெறாவிட்டாலும், ஜெனிவா தீர்மானம் குறித்து சிறிலங்காவுடன் விவாதிக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.

ஜெனிவாவில் கடந்த செப்ரெம்பர் மாதம் நடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், போரில் இடம்பெற்ற மீறல்களுக்கு பொறுப்புக்கூறப்பட வேண்டும் எனக் கோரியிருந்தது.

அத்துடன், போர்க்குற்ற விசாரணைகளில் கொமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குத் தொடுனர்கள் இடம்பெற வேண்டும் என்றும் அந்த தீர்மானம் கோரியிருந்தது.

இந்தநிலையில், மோல்டாவில் நாளை ஆரம்பமாகும், கொமன்வெல்த் உச்சிமாநாட்டில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் ஜெனிவா தீர்மானத்துக்குப் பின்னர் சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விவாதிப்பது பற்றிய எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரக பேச்சாளர், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் விவகாரங்களுக்குப் பதிலளிப்பதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சிறிலங்கா அளித்துள்ள வாக்குறுதியை பிரித்தானியா வரவேற்கிறது.

இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவது முக்கியம். கொமன்வெல்த் தலைவர்களின் உச்சிமாநாட்டு நிகழ்ச்சி நிரலில் இது இடம்பெறவில்லை.

ஆனால்,சிறிலங்கா குழுவுடன், ஜெனிவா தீர்மானத்துக்குப் பிந்திய நிலவரங்கள் குறித்து கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானத்தின் முக்கிய அம்சமான போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதற்கான அடிப்படை முயற்சிகளில் சிறிலங்கா இன்னமும் இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *