மேலும்

8 புலம்பெயர் அமைப்புகள், 269 தனிநபர்கள் மீதான தடையை நீக்கியது சிறிலங்கா

ltte-ban-gazetteஎட்டு புலம்பெயர் அமைப்புகள் மற்றும், 269 தனிநபர்கள் மீதான தடைகளை சிறிலங்கா அரசாங்கம் நீக்கியுள்ளது. இது தொடர்பான திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியினால் வெளியிடப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவியில் இருந்த போது, 16 புலம்பெயர் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களை பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் என்று வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்திருந்தது.

ஐ.நா பொதுச்சபைத் தீர்மானத்துக்கமைய 2014ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் நாள் இந்த வர்த்தமானி அறிவித்தலை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச வெளியிட்டிருந்தார்.

புதிய அரசாங்கம் இந்த பட்டியலில் திருத்தம் செய்து, 8 புலம்பெயர் அமைப்புகள் மற்றும், 269 தனிநபர்களின் பெயர்களை நீக்கியுள்ளது.

இதற்கமைய, தற்போது  தடை செய்யப்பட்டுள்ள 8 அமைப்புகள் மற்றும் 155 தனிநபர்களின் பெயர்களை உள்ளடக்கிய சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு நேற்று சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியினால் வெளியிடப்பட்டுள்ளது.

ltte-ban-gazette

உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை, தமிழ் இளையோர் அமைப்பு, உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, கனேடியத் தமிழ் காங்கிரஸ், அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ், தமிழ், தேசிய அவை ஆகிய அமைப்புகள் மீதான தடையே நீக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உலகத் தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ மக்களவை, உலகத் தமிழர் நிவாரண நிதியம், தலைமைச் செயலக குழு ஆகிய எட்டு அமைப்புகள் மீதான தடை நீடிப்பதாக வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, தடை செய்யப்பட்டுள்ள 155 பேரில், அதிகபட்சமாக 22 பேர் கனடாவில் வசிக்கின்றனர். மேலும், டென்மார்க் -17, சிறிலங்கா -14, பிரித்தானியா-12, நெதர்லாந்து-12, பிரான்ஸ்-11, ஜேர்மனி-08, இந்தியா-07, இத்தாலி-04, மலேசியா-03, நோர்வே-02, அமெரிக்கா-01, தாய்லாந்து-1 என தடை செய்யப்பட்வர்கள் வசிப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் 26 பேருக்கு எதிராக அனைத்துலக காவல்துறையின் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இரு சிங்களவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இனப்படுகொலை தொடர்பான நிபுணரும், ஒபாமாவின் ஆலோசகரும், ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவருமான சமந்தா பவர் சிறிலங்காவுக்கு வருவதற்கு முன்னர், இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *