மேலும்

திருமலையில் இருப்பது பிரித்தானியர் கால பதுங்குகுழியாம் – கதைவிடுகிறார் அட்மிரல் கரன்னகொட

wasantha karannagodaதிருகோணமலை கடற்படைத் தளத்தில் இரகசிய வதை முகாம் இருந்ததாக, ஐ.நா நிபுணர் குழு தெரிவித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, அது இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிரித்தானியர்களால் கட்டப்பட்ட பதுங்குகுழி என்றும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்குப் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டிருந்த, காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழு, கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் நிலத்தடி இரகசிய தடுப்பு முகாமை கண்டுபிடித்ததாக தெரிவித்திருந்தது.

2010 ஆம் ஆண்டு இந்த இரகசியத் தடுப்பு முகாமில் ஆட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாகவும் அந்தக் குழுவினர் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், 2010ஆம் ஆண்டு காலப் பகுதியில் சிறிலங்கா கடற்படைத் தளபதியாக இருந்த, அட்மிரல் வசந்த கரன்னகொட, தனது பதவிக்காலத்தில் திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் இரகசியத் தடுப்பு முகாம் எதுவும் இருக்கவில்லை என்று கூறியுள்ளார்.

திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் அமைந்துள்ள சிறைச்சாலை என்று கூறப்பட்டது, இரண்டாம் உலகப் போர் காலத்தில் விமானத் தாக்குதலில் இருந்து பாதுகாப்புத் தேடுவதற்காக பிரித்தானியர்களால், கட்டப்பட்ட இடமேயாகும்.

அந்த இடம், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்து சிறிலங்கா படையினருடன் இணைந்து கொண்டவர்களின் வசிப்பிடமாக பயன்படுத்தப்பட்டது.

முன்னர் பயன்பாட்டில் இருக்காத கட்டடங்களை அவர்களுக்கு கொடுக்க சிறிலங்கா கடற்படையினருக்கு வழியிருக்கவில்லை.

பிரித்தானியர் காலத்து விமானத் தாக்குதல் பதுங்குமிடங்களை அதற்காக நாம் பயன்படுத்திக் கொண்டோம்.

நாம் திருகோணமலையிலோ வேறு தளங்களிலோ வதை முகாம்களை வைத்திருக்கவில்லை. அதற்கு எமக்குத் தேவை இருக்கவில்லை.

பல்வேறு தமிழ்க் குழுக்கள் பல ஆண்டுகளாகவே சிறிலங்கா இராணுவத்துடன் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளன.

இந்திய அமைதிப்படையுடன் இணைந்தும் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்டுள்ளனர்.

2004 இல் புலிகள் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டதையடுத்து, மட்டக்களப்பு- அம்பாறையை சேர்ந்த நூற்றுக்கணக்கான நன்கு பயிற்றப்பட்ட போராளிகள், சிறிலங்கா இராணுவத்தினருடன் பணியாற்றினர்.

சம்பூர் மீது விமானத் தாக்குதல் நடத்த அப்போதைய அரசாங்கம் உத்தரவிட்டிருந்த போது, சிறிலங்கா கடற்படையின் சிறப்பு  படகு அணியுடன் இணைந்து, முன்னாள் புலிகள் கூட்டாக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *