மேலும்

தூதரகங்களில் மீண்டும் அரசியல் நியமனங்கள் – நியாயப்படுத்துகிறது சிறிலங்கா

sri-lanka-emblemசிறிலங்கா அரசாங்கத்தினால் புதிதாக நியமிக்கப்பட்ட 13 புதிய தூதுவர்களில் எட்டுப் பேர் துறைசார் இராஜதந்திரிகள் அல்ல என்றும், அரசியல் ரீதுியாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஒஸ்ரியா, சீனா, இந்தோனேசியா, இத்தாலி, ஜோர்தான், மியான்மார், பாலஸ்தீனம், சவூதி அரேபியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவுக்கான தூதுவராக முன்னாள் அமைச்சர் கருணாசேன கொடிதுவக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, சீனாவில் சங்காயில் சிறிலங்கா துணைத் தூதுவராக வடிவேல் கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சினால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 13 தூதுவர்களில் எட்டுப் பேர் அரசியல் செல்வாக்கில் நியமனம் பெற்றுள்ளனர்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், வெளிநாடுகளில் அரசியல் செல்வாக்குடன் நியமிக்கப்பட்ட தூதுவர்கள் அனைவரையும் திருப்பி அழைத்த, தற்போதைய அரசாங்கம், அரசியல் செல்வாக்கில் அதிகளவு புதிய தூதுவர்களை நியமித்திருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னேயிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்

அதற்கு அவர், “ அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட தூதுவர்களை தற்போதைய அரசாங்கம் திருப்பி அழைத்திருந்தாலும், எதிர்காலத்தில் அரசியல் நியமனங்கள் வழங்கப்படாது என்று கூறவில்லை.

வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களுக்கு  பொருத்தமான மூத்த அதிகாரிகளை நியமிக்க வேண்டியுள்ளது.

ஆனால் வெளிநாடுகளில் பணியாற்ற போதியளவு அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சில் இல்லை.

அதற்கு காலம் தேவைப்படுகிறது. எனவே அந்த வெற்றிடத்தை சமப்படுத்த வேண்டும்.

வெளிவிவகாரச் சேவையில் இல்லாதவர்களை தூதுவர்களாக நியமிப்பது புதிய விடயமோ, சிறிலங்காவில் மட்டும்  உள்ள விடயமோ அல்ல.

அமெரிக்காவிலும் கூட அவ்வாறு நியமனங்கள் செய்யப்படுகின்றன” என்று பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *