மேலும்

அரசியல் கைதிகள் விடுதலைக்கான போராட்டங்களை ஒருங்கிணைக்கத் தவறியது கூட்டமைப்பு

TNApressசிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், வடக்கு கிழக்குத் தழுவிய போராட்டத்தை நடத்தும் விடயத்தில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றுபடத் தவறியுள்ளன.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, வரும் வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் முழு அடைப்பு மற்றும் கவனயீர்ப்புப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதேவேளை, வவுனியா மாவட்டத்தில் பூரண புறக்கணிப்பை நடத்தவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் காந்தி பூங்கா முன்றலில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாவட்ட மட்டத்தில் முடிவுகளை எடுத்துள்ளது.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இந்தப் போராட்டங்களை வலுவான ஒன்றாக ஒன்றிணைக்கத் தவறியுள்ளதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தும் முகமாகவும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை  யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் முழுமையான இயல்புநிலை தவிர்ப்பு போராட்டத்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை மூடியும், போக்குவரத்துச் சேவைகளை நிறுத்தியும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, விடுதலை கோரி சிறைச்சாலைகளில் மீண்டும் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் வவுனியாவில் வரும் 13ஆம் நாள் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

வர்த்தக நிலையங்களையும், வங்கி உட்பட அரச மற்றும் தனியார் பணியகங்களையும் மூடி, இந்தப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரப்பட்டுள்ளதுடன் பேரூந்துகள், முச்சக்கர வண்டிகள், பொது சேவைகள் ஆகியவற்றின் சங்கங்களும் இதற்கு ஆதரவு வழங்க முன்வருமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் தலைமையில் அவரது வவுனியா அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி எதிர்வரும் வியாழக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தைமுன்னெடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் நேற்று, நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் மட்டக்களப்பு செயலகத்தில் நடத்திய கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தனித்தனியாக போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படுவதால், பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர் என்றும், இதனால் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட ஆதரவை சிறிலங்கா அரசுக்கு வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்படலாம் என்றும் பரவலாகப் பேசப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வலுவான போராட்டத்துக்கான முயற்சியை முன்னெடுக்கத் தவறியதே இந்த உதிரிகளான போராட்ட அறிவிப்புகளுக்குக் காரணமாகியிருப்பதாகவும் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் இணைந்து வடக்கு, கிழக்கில் ஒரே நேரத்தில், வலுவான போராட்டத்தை நடத்தி, சிறிலங்கா அரசுக்கு கடுமையான செய்தி ஒன்றை சொல்வதே இந்த தருணத்தில் முக்கியமானது என்றும், பரவலான கருத்து பொதுமக்களிடம் காணப்படுகிறது.

நவம்பர் 7ஆம் நாளுக்குள் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படாது போனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் போராட்ட்ங்களை நடத்தும், என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *