மேலும்

மைத்திரி, ரணிலுக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை

maithripala-sirisenaசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்டரீதியாக வழக்குத் தொடுக்க முடியும் என்று, அறிவித்துள்ள சிறிலங்காவின் பிரதம நீதியரசர் கே.சிறிபவன், அவர் உள்ளிட்ட 75 பேரை அடுத்தமாதம் 15ஆம் நாள் உயர் நீதிமன்றில் முன்னிலையாகவும் பணித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட  வழக்கு ஒன்றில் முன்வைக்கப்பட்ட அடிப்படை  ஆட்சேபத்தை அடுத்தே பிரதம நீதியரசர்  இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்துக்கு நிலக்கரி கொள்வனவு செய்வதில், மோசடி இடம்பெற்றதாக சிங்கப்பூரின் குளோபல் ரிஷோஸ் இன்ரநஷனல் (தனியார்) நிறுவனம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின் போது, பிரதிவாதிகளில் ஒருவராக சிறிலங்கா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளது குறித்த மனுவை நிராகரிக்குமாறு, பிரதிவாதி தரப்பால் முன் வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபத்தை அடுத்தே பிரதம நீதியரசர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வழக்கின் பிரதிவாதிகளாக லங்கா கோல் கம்பனி நிறுவனம் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை என 75 பேர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரின் குளோபல் ரிஷோஸ் இன்டர்னெஷனல் (தனியார்) நிறுவனம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், ஒரு மெற்றிக்தொன் நிலக்கரியைக் கொள்வனவு செய்ய 90 மில்லியன் அமெரிக்க டொலர் என்ற குறைந்த டென்டரை தாமே முன்வைத்ததாகவும் எனினும், ஒரு மெற்றிக்தொன் நிலக்கரியைக் கொள்வனவு செய்ய 101 மில்லியன் அமெரிக்க டொலர்களை கோரிய நிறுவனம் ஒன்றுக்கு அந்த கேள்விப்பத்திர ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும், தமது நிறுவனத்திற்கே  கேள்விப்பத்திர ஒப்பந்தத்தை வழங்க வேண்டும் என, அரச தொழில்நுட்ப மதிப்பீட்டு சபை பரிந்துரை செய்திருந்த போதிலும், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கேள்விப்பத்திர சபை பிரதிவாதிகளுக்கு அதனை வழங்கியதாகவும் குறித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனால் இந்த விடயத்தில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், இதற்கு தீர்வு பெற்றுத் தருமாறும் மனுதாரரான குளோபல் ரிஷோஸ் இன்ரநஷனல் (தனியார்) நிறுவனம் சார்பில் கோரப்பட்டிருந்தது.

இந்த கேள்விப்பத்திர நடைமுறையின் போது 2.2 பில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டும் எழுப்பப்பட்டுள்ள நிலையில், வழக்கில் சிறிலங்கா அதிபர்  மைத்திரிபால சிறிசேனவும் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டமைக்கு நேற்று மன்றில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

அரசியலமைப்பின் பிரகாரம் அதிபர் ஒருவருக்கு எதிராக வழக்கொன்றை நடத்த முடியாது எனவும் அதனால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் பிரதிவாதிகள் தரப்பில் அடிப்படை ஆட்சேபனை முன்வைக்கப்பட்டு வாதிடப்பட்டது.

எனினும் அந்த வாதத்தை பிரதம நீதியரசர் சிறிபவன் நிராகரித்த நிலையில் நாட்டின் ஒரு அமைச்சர் என்ற முறையில் சிறிலங்கா அதிபருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையை முன்னெடுக்க முடியுமென்று தெரிவித்தார்.

இதனையடுத்து முன் வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்த பிரதம நீதியர்சர் ஸ்ரீபவன் தலைமையிலான மூவர் கொன்ட நீதியரசர்கள் குழு மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வது என தீர்மானித்தது.

அத்துடன் மனுவில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட 75 பேரையும் அன்றைய தினம் உயர் நீதிமன்றில் முன்னலையாகுமாறும் நீதியரசர்கள் குழு அறிவித்தல் விடுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *