மேலும்

தமிழினி பற்றிய சிங்கள ஊடகவியலாளர்களின் பார்வை

thamilini‘தமிழினி போன்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய கடமை எமக்குண்டு. இவர்கள் தமது நிலத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே போராடினார்கள். ஆகவே அந்த நிலம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.’இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில், வாசனா சுரங்கிக விதானகே மற்றும் மாதவா கலன்சூரிய ஆகியோர் இணைந்து எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தமிழினி, புனர்வாழ்வு பெற்ற பின்னர் மீண்டும் சமூகத்துடன் இணைந்து வாழ்ந்தார். புலிகள் அமைப்பில் இருந்த போது இவர் தனது கழுத்தில் சயனைட் வில்லையை எப்போதும் அணிந்திருப்பார். அதற்காக இவர் ஒரு தற்கொலைக் குண்டுதாரி அல்ல.

புலிகள் தமது கோட்பாட்டிற்காக போராட்டத்தை மேற்கொண்டனர். போரின் போது இவர்கள் இராணுவத்தால் அழிக்கப்பட்டனர். புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலர் போரின் பின்னர் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டனர். இவர்களது ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இறுதியில், சிறிலங்கா அரசாங்கமானது மூன்று பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்தது. இந்த யுத்தத்தில் வெற்றி பெற்றவர் என எவரும் இல்லை. ஏனெனில் நீண்ட கால யுத்தத்தில் வழமையாக இடம்பெறுவது போன்றே போரில் ஈடுபட்ட இரு தரப்பினரும் பாதிப்புக்களைச் சந்தித்தனர்.

இறுதியில் சமாதானம் ஏற்பட்டது. நாட்டில் சமாதானம் ஏற்பட்ட சிறிது காலமே ஆகியுள்ளது. ஆனால் தமிழினி நோயின் பிடியில் சிக்கித் தவித்தார். இறுதியில் இவர் நோயின் தீவிரத்தால் தற்போது இறந்துவிட்டார்.

thamizhini

கலிங்க மன்னனைப் போன்று ஈழத்தை வென்றெடுப்பதற்காகப் போராடிய தமிழினி அவருடைய மக்களால் நேசிக்கப்பட்டார். ஆனால் நாங்கள் எல்லாளன் போன்ற ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துச் சண்டையிட்டு கட்டப்பட்ட நாட்டை சேர்ந்தவர்கள்.

தமிழினி போன்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய கடமை எமக்குண்டு. இவர்கள் தமது நிலத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே போராடினார்கள். ஆகவே அந்த நிலம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

தனது தலைமுறையைச் சேர்ந்த பெண்களின் விடுதலைக்காகப் போரிட்ட ஒரு பெண்மணியாக தமிழினி திகழ்கிறார். பெண்கள் பெருமளவில் நசுக்கப்பட்டுள்ளனர். தமிழ்ப் பெண்களால் எதிர்நோக்கப்பட்ட பாலியல் அடக்குமுறைக்கு முன்பாக தமிழினி எவ்விதத்திலும் தடுமாறவில்லை.

சிங்களப் பெரும்பான்மை சமூகத்தவரால் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதியைத் தடுப்பதற்காகவே தமிழினி, புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார்.

தமிழினி தெரிவு செய்த பாதை கடினமாக இருந்த போதிலும், இவர் ஒரு கொலைகாரியாக செயற்படவில்லை. இவர் பாதிக்கப்பட்ட தனது சமூகத்தின் மனிதாபிமானியாக செயற்பட்டார். இவர் தற்போது உயிருடனில்லை.

எந்தவொரு சாவும் பிறரது வாழ்விற்கு ஒரு பாடமாகும். தமிழினியின் இறப்பும் தற்போது உயிர் வாழ்வோருக்கு அறிவை வழங்கும் ஒரு பல்கலைக்கழகமாகக் காணப்படுகிறது. இந்த அறிவை அடையாளங் காண்பதற்கு ஒருவர் மீண்டும் தனது பழைய வாழ்விற்குத் திரும்பிச் செல்ல வேண்டும்.

சிவசுப்பிரமணியத்திற்கு ஐந்து பெண் பிள்ளைகள். இவர்கள் பரந்தனிலுள்ள சிவபுரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தனர். சிவகாமி சிறுமியாக இருந்த போது  சிவசுப்பிரமணியம், இறந்து விட்டார்.

இவர் இறந்ததிலிருந்து இவருடைய மனைவி தனது ஐந்து பிள்ளைகளையும் வளர்க்கும் பொறுப்பை ஏற்கவேண்டியிருந்தது. சிவகாமி 1972 மே 23 அன்று பிறந்தார். இவர் கல்வியில் மிகவும் கெட்டிக்காரி.

பல்வேறு கடினங்கள் மத்தியிலும் இவர் க.பொ.த.உயர்தரக் கற்கைநெறியை பரந்தன் இந்துக் கல்லூரியில் தொடர்ந்தார். சிவகாமிக்கு 14 வயதாக இருந்தபோது இவரது குடும்பத்தினர் பரந்தனிலிருந்து இடம்பெயர்ந்தனர்.

இவர் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளில் 1991ல் இணைந்து கொண்டு சயனைட் குப்பியை அணிந்தார். அத்துடன் தனது கைகளில் துப்பாக்கியையும் ஏந்தினார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகப் போரிட்டார். 1995ல் தமிழினியின் அமைப்பு கிளிநொச்சிக்கு நகர்ந்தது.

இவர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவின் மூலை முடுக்கெல்லாம் அறிந்து வைத்திருந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்குச் சென்ற புலிகளின் பெண்கள் அணிக்கு தமிழினி தலைமை தாங்கினார்.

இவர் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டார். இவர் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் நலன்களில் அதிகம் கவனம் செலுத்தினார்.

சிறிலங்கா இராணுவப் படைகள் ஜெயசிக்குறு நடவடிக்கையை முன்னெடுத்த காலப்பகுதியில், தமிழினி,  முல்லைத்தீவு, மல்லாவி, துணுக்காய் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களின் வேலைத்திட்டங்களைப் பொறுப்பெடுத்தார். இவர் மிகவும் கடினமாக உழைத்தார். இவரது போக்குவரத்திற்காக எம்டி 90 உந்துருளி வழங்கப்பட்டது. இக்காலப்பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து கொண்ட இவரது சகோதரிகளில் ஒருவர் போரில் மரணித்தார். இவரது மூன்று சகோதரிகள் புலிகள் அமைப்பில் இணைந்தனர்.

ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் பின்னர் தமிழினி அரசியற் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இவர் புலிகளின் அரசியற் துறை மகளிர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

புலிகளின் தத்துவாசிரியரான அன்ரன் பாலசிங்கம், இவரது மனைவி அடேல், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.

நாங்கள் போரின் நிலைப்பாட்டிலிருந்து தமிழினி தொடர்பாக எழுதவில்லை. இவர் எமது தமிழ் சகோதரிகளில் ஒருவராவார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான அனுசரணையாளர்களில் ஒருவராகச் செயற்பட்டார். போரின் இறுதிக்கட்டம் வரை இவரது மனஉறுதி மிகவும் உயர்வாகவே காணப்பட்டது.

இப்போரின் இறுதியில் அதாவது மே 18, 2008ல்  புலிகளின் பெரும்பாலான தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட போதிலும் தமிழினி உயிருடன் இருந்தார்.

இவர் தனது சீருடையைக் கழற்றி விட்டு, சாதாரண உடையுடன் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சாதாரண ஒரு பெண்ணாகச் சென்றார். எனினும், இவரால் நீண்ட நாட்கள் ஒளித்திருக்க முடியவில்லை.

ஏனெனில் புலிகளின் அரசியற்துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளராக இவர் செயற்பட்டதால் இவரை மக்கள் நன்கறிந்திருந்தனர்.

இவர் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டு சில ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவர் யூலை 2013ல் விடுவிக்கப்பட்டார்.

இவர் இதே ஆண்டு ஜெயக்குமாரனைத் திருமணம் செய்து கொண்டார். இவர் வாசிப்பதையும் எழுதுவதையும் நிறுத்தவில்லை. இவர் தமிழ் சமூகத்தின் கவனத்தை ஈர்த்தார்.

தமிழினி தனது 43வது வயதில் புற்றுநோய் காரணமாக சாவடைந்தார். இவரது உடலம் சிவபுரம், பரந்தனில் அடக்கம் செய்யப்பட்டது. மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், குருகுலராஜா, ஐங்கரநேசன், டெனீஸ்வரன், சிவாஜிலிங்கம் போன்ற பல்வேறு தமிழ் அரசியல்வாதிகள் தமிழினியின் இறுதிநிகழ்வில் கலந்து கொண்டனர்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது இரங்கல் செய்தியை அனுப்பியிருந்தார். அனைத்துலக தமிழ் அமைப்புக்கள் பலவும் தமது இரங்கல்களை வெளியிட்டிருந்தனர்.

தமிழினி தனது இறப்பின் ஊடாக எமக்கு பாடம் ஒன்றைக் கற்பித்துள்ளார். தமிழினியினுடைய விருப்பமாக இருந்த விடுதலைக்காக மூன்று பத்தாண்டு காலமாக யுத்தம் இடம்பெற்றது. ஆனால் இன்றுவரை இந்த விடுதலை பெறப்படவில்லை.

மே 17 அன்று, தமிழினி தனது முகநூலில் ‘2009ல் ஒரு இரவில் எல்லாம் முடிந்துவிட்டது. இது தொடர்பில் வார்த்தைகள் இல்லை. இதற்காக அழுவதற்கு கண்ணீரும் இல்லை. இவை இன்னமும் அடையப்படவேண்டும். இறப்பு அவற்றின் முடிகளைச் சூடியுள்ளன. இன்று போராட்டம் இன்னமும் உயிர்வாழ வேண்டியுள்ளது, இது பிழைத்திருக்க வேண்டிய தேவையுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *