மேலும்

கொழும்பில் பாகிஸ்தான் அமைத்துள்ள உருது மொழிப் பயிற்சி நிலையம் – ஹிந்திக்கு போட்டி?

indo-pakசிறிலங்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம், உருது மொழிப் பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பித்துள்ள நிலையில், இது இலங்கையில் ஹிந்தி மொழியை பரப்பும் இந்தியாவின் திட்டத்துக்குப் போட்டியான நடவடிக்கையாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உயர் கல்வி மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக பாகிஸ்தான் செல்லும், இலங்கையர்களுக்கு உதவுவதே, கொழும்பில் உருது மொழிப் பயிற்சி நிலையம்  ஆரம்பிக்கப்பட்டதன் வெளிப்படையான நோக்கம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

ஆனால், பொலிவூட் படங்கள் மற்றும் பாடல்கள் மூலம், சிறிலங்காவில் ஏற்கனவே பிரபலமாகியுள்ள ஹிந்தி மொழியை முறியடிப்பதே இதன் ஒரு நோக்கம் என்பதை மறுக்க முடியாது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

சிறிலங்காவில் இந்தியத் தூதரகம், தொழில்சார் அடிப்படையில் பல ஆண்டுகளாக ஹிந்தி வகுப்புகளை நடத்தி வருகிறது.

அதேவேளை, கொழும்பு மற்றும் சுற்றுப் புறங்களில் டசின் கணக்கான ஹிந்தி மொழி வகுப்புகளை நடத்தும் நிலையங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இவர்களின் பெரும்பாலானவர்கள் சிங்களவர்களாவர். ஹிந்தி திரைப்படங்கள், பாடல்களை நன்கு புரிந்து கொள்வதே இதன் நோக்கம்.

அவர்களுக்கு ஹிந்தி திரைப்பட இசை தெரியும். ஆனால் உருது தெரியாது என்பதையும், இந்தியன் எக்ஸ்பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

சிறிலங்காவில் உள்ள தொலைக்காட்சிகளில், ஹிந்தி நாடகங்கள், திரைப்படங்கள் அதிகளவில் மொழியாக்கம் செய்து ஒளிபரப்பப்படுவதால், ஹிந்தி- சிங்கள மொழிபெயர்ப்பாளர்களுக்கு அதிக தேவை உள்ளதாகவும், ஆனால், அந்தளவுக்கு உருது மொழி கற்போருக்கு வாய்ப்புகள் இல்லை என்பதையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *