மேலும்

விவாதத்தில் இருந்து நழுவினார் மகிந்த

Mahinda-Rajapaksa-சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாகத் தொடர்ந்த, ஜெனிவா தீர்மானம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை தொடர்பான விவாதத்தில், உரையாற்ற நேரம் ஒதுக்கப்பட்ட போதிலும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அதில் பங்கேற்காமல் நழுவிக் கொண்டார்.

குருநாகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள மகிந்த ராஜபக்சவுக்கு நேற்றைய விவாதத்தில், எதிர்க்கட்சி தரப்பில் ஐந்தாவது உறுப்பினராக உரையாற்ற வாய்ப்பளிக்கப்பட்டது.

மகிந்த ராஜபக்சவுக்கு 15 நிமிடங்கள் உரையாற்ற வாய்ப்பளிக்கப்பட்ட போதிலும் நேற்று அவர் நாடாளுமன்றத்துக்கு வரவில்லை.

மகிந்த ராஜபக்ச உரையாற்ற அழைக்கப்பட்ட போது, அவரது சார்பில் எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, மகிந்த ராஜபக்ச உரையாற்ற நாடாளுமன்றம் வரமாட்டார் என்றும் அவரது நேரத்தை தமக்கு ஒதுக்கிக் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து மகிந்தவுக்கு ஒதுக்கப்பட்ட நேரம், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது.

அதேவேளை, நேற்றைய விவாதத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜெனிவா தீர்மானம் தொடர்பான தனது நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் அவர் வரவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, பிரதி அமைச்சர் அஜித் பெரேரா உரையாற்றிய போது, விவாதத்தில் உரையாற்ற மகிந்த ராஜபக்ச மறுத்தமையானது, எதிர்க்கட்சியினரின் நிலைப்பாட்டை அவர் அங்கீகரிக்கவில்லை என்பதையே காட்டுகிறது என்று குறிப்பிட்டார்.

அவருக்கு உரையாற்ற நேரம் ஒதுக்கப்பட்ட போதும், அதனை மகிந்த நிராகரித்திருக்கிறார்.

விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்த்தன ஆகியோரின் கருத்துக்களுக்கு அவர் ஆதரவளிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

இது உங்களின் தலைவரும் எம்முடன் தான் இருக்கிறார்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *