மேலும்

சிறிலங்கா படையினரைத் தண்டிக்கக் கூடாது – ஒரேகுரலில் சிங்களக் கட்சிகள்

APC4ஐ.நாவுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு அமைய நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்க்கட்சிகளும், சிறிலங்கா படையினரைத் தண்டிக்கக் கூடாது என்று சிங்களக் கட்சிகளும், நேற்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தின.

ஜெனிவா தீர்மானம் குறித்து ஆராய, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்றுமாலை இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில், கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்ட கருத்துக்களின் சுருக்கம் வருமாறு-

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் –

R.sampanthanநாம் ஐ.நா தீர்மானத்தை முழுமையாக வரவேற்கிறோம். ஐக்கிய இலங்கைக்குள் நிரந்தரமான தீர்வொன்றையே விரும்புகிறோம்.

அதனை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனை அனைத்து தரப்பினரும் உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த காலத்தில் மிதவாதத் தலைவர்களின் கோரிக்கைகளை பெரும்பான்மையின தலைமைகள் நிறைவேற்றதன் காரணமாகவே மாறுபட்ட சூழல் ஏற்பட்டது.

1977இல் பிரிவினைவாதக் கருத்துக்களால் தனிநாட்டுக் கோரிக்கைகள் எழுந்தன. தற்போது போர் முடிவடைந்துள்ளது. தமிழீழக் கோரிக்கைகளும் இல்லை.

ஆகவே அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு அரசியல் தீர்வொன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.

டக்ளஸ் தேவானந்தா (ஈ.பி.டி.பி) –

Douglas_Devanandaஇங்கு இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக நீதியான விசாரணை தேவை. அவை பக்கச்சார்பற்றவையாக இருக்க வேண்டும்.

தற்போதைய நிலைமைகளை வைத்துப் பார்க்கையில் ஒரு சாராரை பழிவாங்கும் வகையில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது போன்று காணப்படுகின்றது.

அவ்வாறில்லாது நியாயமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும். கடந்த காலங்களில் பல்வேறு விடயங்களுக்காக கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டங்கள் வெறுமனே காலம் கடத்தும் வகையிலே செயற்பட்டன.

தற்போதும் அவ்வாறான நிலைமைக்குச் செல்லாது ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டும்.

அத்துடன் 1983ஆம் ஆண்டிலிருந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

டியூ. குணசேகர (கம்னியுஸ்ட் கட்சி)

dew gunasekaraதற்போது நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பின் இறையாண்மையின் அடிப்படையில் அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி வழங்கப்பட்டு தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்

 

சுரேஸ் பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எப்)-

Suresh-Premachandranவிசாரணை ஆணைக்குழு பெறுமதிமிக்கதாக, நம்பகத்தன்மையுடையதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தீர்மானத்தில் முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

சிறிலங்காவின் சகல அரசாங்கங்களின மீதும் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்திருக்கின்ற சூழலில், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால், இந்த விசாரணை ஆணைக்குழுவில் பெரும்பான்மையோர் வெளிநாட்டைச் சேர்ந்த நீதிபதிகளாகவும் விசாரணையாளர்களும் இருக்க வேண்டும்.

இந்த விசாரணையில் சாட்சியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்பதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்கள் சாட்சியளிக்க வேண்டுமாயின், அதற்கான சுமூகமான ஒரு சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதனூடாகவே அத்தகைய சுமுக சூழலை ஏற்படுத்த முடியும்.

புலம் பெயர் தமிழர்கள் மற்றும் சிறிலங்காவில் பணியாற்றிய அனைத்துலக தொண்டு நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்களின் சாட்சிகளினூடாகவே ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டது.

ஆகவே அவர்கள் மீண்டும் சாட்சியம் அளிப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் இங்கில்லை. அவ்வாறானவர்கள் சாட்சியமளிக்கக்கூடிய வகையில் ஐரோப்பாவிலும் ஆணைக்குழுவின் ஒரு பிரிவு அமைக்கப்படவேண்டும்.

இவ்வாறான நிகழ்வுகள் மீளவும் நடக்காமல் இருப்பதற்கு தமிழ் மக்களுக்கு ஒரு முழுமையானதும் நீடித்து நிலைக்கக்கூடியதுமான அரசியல் தீர்வை தேவை.

நாடாளுமன்றத்தை ஒரு அரசியலமைப்பு சபையாக மாற்றுவதற்கு முன்பாக அரசாங்கம் தமிழர் தரப்புடன் பேச்சு நடத்தி இனப்பிரச்சினைக்கு ஒரு முழுமையான தீர்வைக் காண முன்வரவேண்டும்.

ரில்வின் சில்வா (ஜே.வி.பி)-

tilvin-silvaஜெனிவா தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாம் அரசாங்கத்திற்கு 14 யோசனைகளை முன்வைத்து ஆவணமொன்றை சமர்ப்பித்துள்ளோம். அது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் உரிய பதிலளிக்கவில்லை. அவ்விடயங்கள் குறித்து அரசாங்கம் தனது பதிலை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

அதேநேரம் அனைத்துலகத்தின் தலையீடுகளுக்கு ஒருபோதும் நாம் இடமளிக்க முடியாது. மனித உரிமை விடயங்கள், பொறுப்புக் கூறல் ஆகியன தொடர்பாக நடவடிக்கைகள் அனைத்தும் உள்ளகப் பொறிமுறையொன்றின் ஊடாகவே மேற்கொள்ள வேண்டும்.

இராணுவத்தினர் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

கபீர் ஹசீம் (ஐ.தே.க) –

kabir hashimமுன்னாள் அதிபரும், ஐ.நா செயலாளர் நாயகமும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளார்கள். அதுவே இவ்வாறான நிலைமைக்குள் கொண்டு வந்துள்ளது.

எனினும் நல்லாட்சியில் பல்வேறு விடயங்களை நாம் முன்னெடுத்துள்ளோம். அவ்வாறிருக்கையில் பரிந்துரை செய்யப்பட்ட விடயங்கள் குறித்து அரசியல் அமைப்புக்குள்ளேயே அனைத்து விடயங்களும் முன்னெடுக்கப்படவேண்டும். நாட்டின் இறைமை மிக முக்கியமானது.

சரத் பொன்சேகா  ஜனநாயக கட்சி)-

sarath-fonsekaஇராணுவத் தளபதியாக கடமையாற்றியவர் என்ற வகையில் இராணுவத்தினரை விசாரணைக்குட்படுத்தும் போது அதில் சிவில் சமுகத்தைச் சார்ந்தவரை  நியமிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இராணுவத்தினர் எதற்காக யுத்தம் செய்தனர், எவ்வாறான சூழலில் செயற்பட்டனர், அவர்களின் மனநிலை எவ்வாறிருந்திருக்கும் என்பது தொடர்பாக அறிந்திருக்க வல்ல இராணுவத்துடன் தொடர்புடைய ஒருவரே விசாரணை  அதிகாரியாக நியமிக்கப்பட வேண்டும்.

நிமால் சிறிபால (சிறிலங்கா சுதந்திரக் கட்சி)-

nimal siripala de silvaஅனைத்துலக சமூகம் கூறும் அனைத்து விடயங்களுக்கும் நாம் தலையாட்டி பொம்மைகளாக இருக்க முடியாது. எமது மக்களுக்கும் நாட்டுக்கும் பங்கம் ஏற்படாத வரையில் அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். அவை அரசியல் அமைப்புக்கு உட்பட்டிருக்க வேண்டியது மிகமிக முக்கியமானதாகும்.

 

 

மங்கள சமரவீர ( வெளிவிவகார அமைச்சர்)-

mangala-samaraweeraஇந்த விடயத்துடன் நேரடியாக நான் தொடர்புபட்டவொருவனாக காணப்படுகின்றேன். இங்கு பலர் அமெரிக்கா தான் இந்த தீர்மானத்தை கொண்டு வந்ததாக கூறுகின்றனர். அது தவறான விடயமாகும்.

சிறிலங்கா இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளதை பல நாடுகள் வரவேற்றுள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, ரஷ்யா, சீனா, தென்னாபிரிக்கா, ஜப்பான் உட்பட பல நாடுகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தியிருந்தன.

அவற்றின் பங்களிப்புடனேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றார்.

இராணுவத்தினரை தண்டிக்க கூடாது

dinesh-vasu-udaya-wimal

அதேநேரம் தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாயணக்கார, உதய கம்மன்பில, தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிநிதி ஜெயந்த சமரவீர உள்ளிட்டவர்கள், இராணுவத்தினர் தண்டிக்கப்படக் கூடாது என வலியுறுத்தியதுடன் வெளிநாட்டு தரப்புக்களின் தலையீடுகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *