மேலும்

ஜெனிவா தீர்மானம் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் – யோசனைகளை சமர்ப்பிக்க காலஅவகாசம்

APCஜெனிவா தீர்மானம் குறித்து ஆராய்வதற்காக நேற்று நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனைகளைச் சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெனிவா தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயும், அனைத்துக் கட்சிக் கூட்டம் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்றுமாலை இடம்பெற்றது.

சிறிலங்கா அதிபர் தலைமையில், மாலை 5.20 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டம் இரவு 7.30 மணிவரை தொடர்ந்தது.

சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் ஒஸ்ரின் பெர்னான்டோவின் வரவேற்புரையுடன் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஜெனிவா தீர்மானத்தை நிராகரிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

அதேவேளை இந்த தீர்மானத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பான யோசனைகளை அரசியல் கட்சிகள் இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கலாம் என்றும், தேவைப்பட்டால் இதுபற்றித் தீர்மானிக்க உபகுழுவொன்றை அமைக்கத் தயாராக இருப்பதாகவும் சிறிலங்கா அதிபர் தெரிவித்தார்.

APC (1)APC (2)APC (3)

APC (4)

அதேவேளை, எத்தகைய முடிவும் சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்றும், நாட்டுக்கோ மக்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்காது என்றும்  அவர் அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்களிடம் உறுதியளித்தார்.

இந்தக் கூட்டத்தில், அனைத்துப் பிரதான அரசியல் கட்சிகளினதும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும் இந்தக் கட்சியின் சார்பில் தேசிய அமைப்பாளர் ஜெயந்த சமரவீர பங்கேற்றிருந்தார்.

அதேவேளை, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் மூன்று வாரங்களின் பின்னர் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *