மேலும்

சிறிலங்காவுக்கு போர் விமானங்களை விற்க பாகிஸ்தானுடன் போட்டியில் இறங்கியது இந்தியா

Jf-17 Thunder Block 2சிறிலங்காவுக்குப் போர் விமானங்களை விற்பதற்கான போட்டியில், இந்தியாவும் இணைந்து கொண்டிருப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர்வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கள பாகிஸ்தானுக்கு இந்த வாரம் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, அவர், சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான். தயாரித்த, ஜே.எவ்-17 போர் விமானங்களை சிறிலங்கா விமானப்படைக்கு கொள்வனவு செய்வது குறித்த உடன்பாட்டில் கையெழுத்திடுவார் என்று கடந்தவாரம் பாகிஸ்தான் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால், சிறிலங்கா விமானப்படை இதனை நிராகரித்திருந்தது.

பாகிஸ்தான் பயணத்தின் போது, சிறிலங்கா விமானப்படைத் தளபதி இந்த விமானங்களைப் பார்வையிடுவார் என்றும், ஆனால் அதனை வாங்குவது குறித்து முடிவு செய்யப்படவில்லை என்றும் சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், பாகிஸ்தான் விமானங்களை சிறிலங்கா விமானப்படை கொள்வனவு செய்வது குறித்து ஆராயவுள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து, சிறிலங்கா விமானப்படைக்கான விமானங்களை வழங்கத் தயாராக இருப்பதாக, கொழும்பிடம் புதுடெல்லி அணுகியுள்ளதாக சிறிலங்கா விமானப்படைய உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்தியா எத்தகைய போர் விமானங்களை சிறிலங்கா விமானப்படைக்கு விற்க முன்வந்துள்ளது என்ற தகவலை சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் வெளியிடவில்லை.

சிறிலங்கா விமானப்படை தன்னிடமுள்ள, பழமையான இஸ்ரேலியத் தயாரிப்பு கிபிர் போர் விமானங்கள் மற்றும் சீனத் தயாரிப்பு எவ்-7 போர் விமானங்களுக்குப் பதிலாக புதிய போர் விமானங்களை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா விமானப்படை வட்டாரங்கள், மிகச் சிறந்த  போர் விமானங்களை வாங்குவதற்காக நாம் சுற்றியுள்ள எல்லாவற்றையும் பார்க்கிறோம்.” என்று தெரிவித்துள்ளன.

அதேவேளை, சீனாவினால் வடிவமைக்கப்பட்டு, பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறைப் போர் விமானமான, ஜேஎவ்-17 போர் விமானம், கொடுக்கும் பணத்துக்குப் பெறுமதி வாய்ந்தது என்றும், சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *