மேலும்

இந்திய வீடமைப்புத் திட்டத்துக்கு பாலியல் இலஞ்சம் கோரிய விவகாரம் – விசாரணைகள் நிறைவு

indian-Housingகிளிநொச்சி, முழங்காவில் பகுதியில், இந்திய வீடமைப்புத் திட்ட உதவிக்கு பாலியல் இலஞ்சம் கோரியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இந்தியத் தூதரகமும், சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து நடத்திய விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

முழங்காவில் பகுதியில், இந்திய வீடமைப்புத் திட்ட உதவியைப் பெறுவதற்கு, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பங்காளி அமைப்பான சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் பாலியல் இலஞ்சம் கோரியதாக, கணவனை இழந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து இந்தக் கூட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

இதுபோன்ற மேலும் பல முறைப்பாடுகள், சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்துக்கு கிடைத்திருப்பதாக, கிளிநொச்சி கிளையின் தலைவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக, இந்தியத் தூதரகத்துடன் இணைந்து நடத்திய விசாரணை நிறைவடைந்துள்ளதாகவும், இந்த விசாரணையின் கண்டறிவுகள் தொடர்பாக நாளை கொழும்பில் நடக்கவுள்ள உயர்மட்டக் கூட்டத்தில் ஆராயப்படும் என்றும், சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தின் தொடர்பாடல் மற்றும் மனிதாபிமான இராஜதந்திரப் பிரிவின் மூத்த முகாமையாளர் மகேஸ் ஜொன்னி தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தின் பின்னரே, முகாமைத்துவம் ஒரு முடிவை எடுக்கும், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இந்தக் கூட்டத்தின் பின்னரே தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கிளிநொச்சிப் பகுதியில் பணியாற்றிய அதிகாரி ஒருவர், இன்னமும் விசாரணையில் இருப்பதாகவும், அவரும் கூட, இந்தவாரம் நடக்கவுள்ள  மாதாந்த முன்னேற்றக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாகவும், தம்மை வெளிப்படுத்த விரும்பாத வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட, சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர், குற்றச்சாட்டை எதிர்கொண்டதில் இருந்து குறிப்பிட்ட அதிகாரி பணியில் இருந்து தன்னார்வ அடிப்படையில் விடுமுறையில் சென்றிருப்பதாக குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *