மேலும்

சிறிலங்கா மீதான அனைத்துலக அழுத்தங்களுக்கு கூட்டமைப்பே காரணம் – வாசுதேவ குற்றச்சாட்டு

vasudeva-nanayakkaraசிறிலங்காவுக்கு எதிரான அனைத்துலக அழுத்தங்கள் வலுப்பெற்றதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, போர்க்குற்ற விவகாரத்தை கூட்டமைப்பு அனைத்துலக மயபப்படுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டியவில் உள்ள அபேராம விகாரையில், மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியினர் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு கருத்து வெளியிட்ட, வாசுதேவ நாணயக்கார,

“சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவின் நாய்க்குட்டி போன்று செயற்படுகின்றது. அவர்கள் தூக்கிப்போடும் எலும்புத்துண்டுகளை கவ்விக்கொண்டு நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக் கொண்டுக்கும் வேலையை மட்டுமே இந்த அரசாங்கம் மேற்கொள்கின்றது.

இப்போது சிறிலங்காவுக்கு எதிரான அனைத்துலக அழுத்தங்கள் பலமடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முதல் காரணம். போர்க்குற்றச்சாட்டுக்களை கூட்டமைப்பு  அனைத்துலக மட்டத்துக்கு கொண்டு சென்று விட்டது.

ஐ.நாவைத் தூண்டிவிடும் வகையில் அமெரிக்காவிடம் சென்று முறையிட்டதும், மனித உரிமை மீறல்கள் என்ற கதையை நாட்டுக்கு வெளியில் கொண்டு சென்றதும் கூட்டமைப்புத் தான்.

அதனால் தான் நாட்டில் ஏற்படவிருந்த நல்லிணக்கமும் தடைப்பட்டது.

எமது ஆட்சியில் தமிழ் மக்களின் உரிமைகளைக் கவனத்தில் கொண்டு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம்.

இந்த நாட்டில் சிங்கள மக்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஆகவே அவர்களை சார்ந்தே நாம் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும்.

அரசியல் பிரச்சினைக்கான தீர்வு காண்பதில் ஒரு கட்டம் வரையில் தான் எம்மால் செயற்பட முடியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பத்தில் வலியுறுத்திய விடயங்கள் எமது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் இவர்கள் எம்மை பயன்படுத்தி நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தவே முயற்சித்தனர்.

நாம் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதை தெரிந்து கொண்டே கூட்டமைப்பு மாகாண சபை அதிகாரத்தையும் தாண்டிய அதிகார எல்லைக்கு பயணித்தனர்.

ஆகவே இந்த போர்க்குற்றச்சாட்டுகள் அனைத்தின் பின்னணியில் அதிகாரப் பகிர்வே உள்ளது.

இப்போதும் கூட்டமைப்பின் இலக்கு வெற்றிகரமாக அமையவில்லை. எமது அரசாங்கத்தில் வழங்கிய எதையும் இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை.

அதேபோல அனைத்துலக சக்திகளும் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள அரசாங்கத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பயன்படுத்துகின்றன.

இந்த அரசாங்கத்திலும் இனப்பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு எட்டப்படாது என்பதை எம்மால் உறுதியாக கூறமுடியும்.

ஒரு அளவு வரைக்குமே இவர்களின் செயற்பாடுகளும் அமையும்” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *