மேலும்

14 ஆண்டுகளுக்குப் பின் ஊர்காவற்றுறை தாக்குதல் வழக்கு – 2 ஈபிடிபியினருக்கு விளக்கமறியல்

gavel2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக தீவகத்துக்குச் சென்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு, 14 ஆண்டுகளுக்குப் பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களான 2 ஈபிடிபியினரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக, 2001 ஆம் ஆண்டு நொவம்பர் 28 ஆம் நாள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான மாவை சேனாதிராசா, எம்.கே. சிவாஜிலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன்,  நடராஜா ரவிராஜ் மற்றும் தொண்டர்கள்,காவற்றுறைக்குச் சென்ற போது, தம்பாட்டி என்ற இடத்தில் வைத்து  ஈபிடிபியினரால் தாக்கப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் யாழ். பல்கலைக்கழக ஊழியர் ஏரம்பு பேரம்பலம், ரெலோ ஆதரவாளர் யோகசிங்கம் கமல்ஸ்ரோன் ஆகியோர் உயிரிழந்தனர்.

மாவை சேனாதிராசாவுக்கு தலையிலும் கையிலும் மற்றும்  காயங்கள் ஏற்பட்டன. சிவாஜிலிங்கத்தின் காலில் அலவாங்கினால் குத்தப்பட்டு படுகாயம் ஏற்பட்டது. மேலும் ரவிராஜ் உள்ளிட்ட 22 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக, அப்போது ஈபிடிபியில் முக்கிய தலைவர்களாக இருந்த, நெப்போலியன் என்று அழைக்கப்படும் எஸ். ரமேஸ், மதன் என்று அழைக்கப்படும் மதனராசா, ஜீவன் என்று அழைக்கப்படும் அன்ரன் ஜீவராஜ், நமசிவாயம் கருணாகரமூர்த்தி ஆகிய நால்வரையும் கைது செய்தனர்.

இவர்கள் நால்வருக்கும் பின்னர் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்ட நிலையில், முதலாம், இரண்டாம் சந்தேக நபர்களான நெப்போலியன் மற்றும் மதனராசா ஆகியோர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று, 14 ஆண்டுகளுக்குப் பின்னர் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி டி.சசி மகேஸ்வரன் முன்னிலையில் இடம் பெற்றது.

இதன் போது, மூன்றாம் நான்காம் சந்தேகநபர்களான ஜீவன் மற்றும் கருணாகரமூர்த்தி ஆகியோர் மட்டும் முன்னிலையாகினர். அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, ஏனைய சந்தேக நபர்களையும் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவிட்டார்.

சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகாத நிலையில் வழக்கு  விசாரணை வரும் நவம்பர் 17, 18 ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *