மேலும்

மூன்றாவது நாளை எட்டியது அரசியல் கைதிகளின் போராட்டம் – நான்கு பேர் மருத்துவமனையில்

Prisonerதமது விடுதலையை வலியுறுத்தி, தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்த  சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு கைதிகளின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் சிறைச்சாலை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அம்பலவன்பொக்கணையைச் சேர்ந்த 44 வயதுடைய கந்தசாமி விஜயகுமார் என்ற கைதி மயக்கமுற்ற நிலையில், சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்த ஏ.ஞானசீலன், ரி.பிரபாகரன், ஷாம் ஆகிய மூன்று கைதிகள் மயக்கமுற்று சிறைச்சாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் சோர்ந்த நிலையில் இருப்பதாகவும், உடல் பலவீனமடைந்து செல்வதால், நீராகாரத்தையேனும் அருந்துமாறு, பரிசோதனையை மேற்கொண்ட மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். எனினும் கைதிகள் அதனை நிராகரித்துள்ளனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தம்மை, பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி 14 சிறைச்சாலைகளில் உள்ள 237 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் ஆரம்பமான இந்தப் போராட்டத்தினால், நேற்று மன்னார் மற்றும் வவுனியா நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படவிருந்த கைதிகள் அங்கு அழைத்துச் செல்லப்படவில்லை.

இன்று மூன்றாவது நாளாக அரசியல் கைதிகளின் போராட்டம் தொடரவுள்ளது.

இதற்கிடையே, நேற்று நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் சிறைச்சாலைகளில் அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டுள்ளன.

இவை சிறிலங்கா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நேற்று நல்லூரில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இதில் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள், மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற, உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே, கொழும்பில் இன்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஆதரவான போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *