மேலும்

உடனடியாகத் தொடங்காதாம் போர்க்குற்ற விசாரணை – காலஅவகாசம் கேட்கிறது சிறிலங்கா

rajitha senaratneபோர்க்குற்ற விசாரணையை, உடனடியாக மேற்கொள்ள முடியாது என்றும், இதனை ஆரம்பிக்க ஒரு ஆண்டு காலஅவகாசமேனும் தேவை என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடில், அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டைஅறிவித்தார்,  அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன.

”ஜெனிவா விவகாரம் தொடர்பில் இனியும் நாம் பேசிக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஆனால் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் இந்த விடயம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்த விவகாரம் அனைத்தையும் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாகச் சிந்தித்து செயற்பட வேண்டும். அது மட்டுமே இப்போது எமக்கு இருக்கும் சவாலா கும்.

இப்போது வலியுறுத்தப்பட்டிருக்கும் கலப்பு நீதிமன்ற முறைமை முழுமையான உள்ளக பொறிமுறையையே குறிப்பிடுகிறது. இதில் எந்தவித அனைத்துலக விசாரணைத் தலையீடும் இல்லை.

இந்த கலப்பு நீதிமன்ற முறையில் அனைத்துலகப்  பிரதிநிதிகள் தமது ஆலோசனைகளை வழங்கவும் சிறிலங்கா மேற்கொள்ளும் விசாரணைக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முழுமையாக சிறிலங்காவின் சட்ட திட்டங்களுக்கு அமையவே, எமது நீதி கட்டமைப்பின் கீழேயே நடைபெறும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே, இந்த விசாரணையை அனைத்துலக விசாரணை என ஒருபோதும் கூற முடியாது.

போர்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டபோது முன்னைய அரசாங்கத்தினால் அது புறக்கணிக்கப்பட்டது.

அப்போது  நேரடியானஅனைத்துலக விசாரணையே வலியுறுத்தப்பட்டது. ஆனால் இப்போது அவ்வாறான ஒரு நிலைமை இல்லை.

இன்று சிறிலங்காவின் உள்ளக செயற்பாடுகள் மீது அனைத்துலக மட்டத்தில் நல்ல நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. முழுமையான தேசிய செயற்பாடுகளுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கலப்பு நீதிமன்ற முறைமையின் போது அனைத்துலக செயற்பாடுகள் தொடர்பில் வலியுறுத்தப்பட்ட போதிலும் எமது உள்ளக விசாரணைக்கு எவ்வாறான அனைத்துலக உதவிகளை அல்லது அனைத்துலகத்துக்கு எவ்வாறான சந்தர்ப்பத்தை வழங்குவது என்பது தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை அரசாங்கமே மேற்கொள்ளும்.

எமக்கு தேவையான வகையிலேயே அனைத்துலக உதவிகளையும் பெற முடியும்.

அதேபோல் ஒரு சிலரின் வலியுறுத்தலுக்கு அமைய உடனடியாக எவ்விதமான விசாரணைகளையும் மேற்கொள்ள முடியாது.

சிறிலங்காவி நடைபெற்ற தாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சரியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதற்கு  குறைந்தது ஒரு ஆண்டாவது தேவைப்படும். கால அவகாசம் வழங்கினால் மாத்திரமே மிகச்சரியான விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை கண்ட றிய முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *