மேலும்

சிறிலங்கா அரசுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள அமெரிக்காவின் நகர்வு – உபுல் ஜோசப் பெர்னான்டோ

mangala-unhrcமனித உரிமைகள் பேரவைக்கு ஐ.தே.க விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்வதாகவும் இதனால் சிறிலங்கா அதிபரும் அவரது அரசாங்கமும் தர்மசங்கட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் மைத்திரிக்கு ஆதரவான குழுவினர் கருதுகின்றனர்.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

அண்மையில் ஜெனீவா மற்றும் நியூயோர்க்கில் அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலைப்பாடுகள் தொடர்பாக கொழும்பின் உயர் அரசாங்க அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட கருத்துக்களும் எண்ணங்களும் நிலவுகின்றன.

ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் அண்மையில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், அமெரிக்க மூத்த உதவி இராஜாங்கச் செயலர் நிசா பிஸ்வல் சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்தார். இவர் சிறிலங்காவில் தங்கியிருந்த நாட்களில்,  அமெரிக்கா தலைமையில் முன்வைக்கப்படும் தீர்மானமானது சிறிலங்காவுக்கு ஆதரவாகக் காணப்படும் என அறிவித்திருந்தார்.

அந்தவேளையில் நிசா பிஸ்வால் கொழும்பிற்குச் சார்பாக முன்வைத்த கருத்தானது பலராலும் பேசப்பட்டது. இதுவே சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பில் இதன் மீது கலப்பு அனைத்துலக நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் முன்வைக்கப்படுவதற்கு அழுத்தம் கொடுத்திருந்தது.

எதுஎவ்வாறெனினும், பேரவையின் அறிக்கை மற்றும் அமெரிக்காவின் தீர்மான வரைபு தொடர்பில் கொழும்பிலுள்ள சிறிலங்கா அரசாங்க உயர் மட்டம் திருப்தியடையவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

அமெரிக்காவானது பேரவையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவைத் தான் ஆதரிப்பேன் என வாக்குறுதி வழங்கிய அதேவேளையில் இதற்கு முரணாக சிறிலங்காவின் உயர் மட்ட அதிகாரி ஒருவர் உள்ளுர் ஊடகவியலாளர் ஒருவரிடம் தனது கருத்தொன்றைத் தெரிவித்திருந்தார்..

அதாவது மனித உரிமைகள் விடயத்தில் சிறிலங்காவிற்கு ஆதரவளிப்பேன் என அமெரிக்கா தெரிவித்துள்ள போதிலும், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான நிதிசார் உதவிகளை அமெரிக்கா வழங்கவில்லை என குறித்த உயர் மட்ட அதிகாரி தெரிவித்திருந்தார். ‘சிறிலங்காவின் அரசாங்கமானது மாற்றமுற்ற பின்னர் அமெரிக்கா எமக்கு உதவும் என நாம் எதிர்பார்த்த போதிலும் இதுவரை அமெரிக்காவிடமிருந்து எந்தவொரு நேர்மறையான ஆதரவுகளையும் நாம் பெறவில்லை’ என அவ் அதிகாரி சுட்டிக்காட்டியிருந்தார்.

இக்கருத்தானது அமெரிக்காவை விட சிறிலங்காவிற்கு சீனா ஆதரவளிப்பதைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

அதாவது அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் சிறிலங்காவிற்கு ஆதரவளிப்பதில் பின்நிற்கும் அதேவேளையில், இவை சிறிலங்கா மீதான மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக பேசுவதில் மட்டுமே குறியாக உள்ளன என்பதே சிறிலங்காவின் உயர் மட்டத்தின் மத்தியில் நிலவும் கருத்து எனக் கூறப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில், சிறிலங்காவின் வரவேற்பை சீனாவே பெற்றுக்கொள்ளும். இந்தச் சூழலை சீனா தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொண்டால், மகிந்தவின் கோட்பாடுகள் சரியானதே என சிறிலங்கா வாழ் மக்கள் தெரிவிப்பார்கள்.

2001ல் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமானது அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்பட்டது. இதன்மூலமே விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டன.

அத்துடன் வடக்கு கிழக்கிற்கான இடைக்கால நிர்வாகத்தை வழங்கத் திட்டமிடப்பட்டதுடன், சிறிலங்காவின் சமாதான நகர்வுகளில் மேற்குலகம் சார்பாக இதன் அனுசரணையாளராக நோர்வே செயற்பட்டது.

அந்த நேரம் மிதவாதக் கோட்பாட்டைப் பின்பற்றிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜேவிபி போன்றன இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டில் மேற்குலகிற்கு எதிராக அழுத்தத்தை வழங்கின. இதுவே ரணிலினுடைய அரசாங்கம் தனது ஆதரவை இழக்கக் காரணமாகியது.

இறுதியாக, அனைத்துலக நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நாட்டில் சமாதானத்தைக் கட்டியெழுப்பு முற்பட்ட ரணிலினுடைய அரசாங்கம் தோல்வியுற்றது. இதுவே மகிந்த ஆதரவுக் குழுக்கள் அரசாங்கத்தைக் கைப்பற்றுவதற்கு வாய்ப்பளித்தது.

இவ்வாறானதொரு சூழல் தற்போது மீண்டும் எழுவதற்கான சமிக்கைகள் தோன்றியுள்ளன. மனித உரிமைகள் பேரவையால் வெளியிடப்பட்ட அறிக்கையானது மைத்திரி-ரணில் அரசாங்கத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகிந்தவின் ஆதரவாளர்கள் கடந்த ஆகஸ்ட்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் தற்போது பேரவையின் அறிக்கையுடன் மீண்டும் தமது ஆதரவை வலுப்படுத்துவதற்கான பரப்புரையை மேற்கொள்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையிலுள்ள வரைபுகளைப் பின்பற்றி ரணில்-மைத்திரி அரசாங்கம் செயற்பட்டால், 2001ல் ரணில் அரசாங்கத்திற்கு நடந்த கதியே ஏற்படும். தற்போது சிறிலங்காவின் பொருளாதாரம் அபிவிருத்தியை எட்டவில்லை. பொருளாதார நெருக்கடிகளின் மத்தியில், பேரவையின் அறிக்கையை சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் பின்பற்றிச் செயற்பட்டால் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்குச் சமமாகி விடும்.

அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரல் என்பது தெளிவற்றதாக உள்ளது. போர்க் குற்றங்களைக் காரணங்காட்டி குறித்த நாடுகளைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதே அமெரிக்காவின் வழமை என ஆபிரிக்க நாடுகள் சுட்டிக்காட்டுகின்றன. அமெரிக்காவின் இத்தகைய மனப்பாங்கால் இந்த நாடுகள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடனான சிறிலங்காவின் தொடர்பாடல் முறைமையின் வடிவம் தொடர்பில் ஐ.தே.க மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கிடையில் பல்வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.

மனித உரிமைகள் பேரவைக்கு ஐ.தே.க விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்வதாகவும் இதனால் சிறிலங்கா அதிபரும் அவரது அரசாங்கமும் தர்மசங்கட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் மைத்திரிக்கு ஆதரவான குழுவினர் கருதுகின்றனர்.

அமெரிக்காவைப் போல ஐக்கிய தேசியக் கட்சியும் உலகத் தமிழர் பேரவை போன்ற புலம்பெயர் தமிழர் அமைப்புக்களைப் பாதுகாக்க முயற்சிப்பதாகவும் நம்பப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் இத்தகைய நிலையானது மைத்திரி அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்குத் தள்ளியள்ளதாகவும் மைத்திரி ஆதரவு சக்திகள் கருதுகின்றன.

புதிய அரசாங்கம் ஒரு நாட்டைப் பொறுப்பெடுக்கும் போது அமெரிக்காவானது அதன் நிலைப்பாட்டை மாற்றியமைக்காமல் இருக்க முடியாது என்பது உண்மை. சிறிலங்காவின் புதிய அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பெடுத்தவுடன் அதற்கு நிதிசார் ஆதரவுகளை முதலில் வழங்கிவிட்டு அதன் பின்னர் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் விடயங்களை பேசியிருந்தால் இது அறிவார்ந்தமான செயற்பாடாக அமைந்திருக்கும்.

பசியுடன் இருக்கும் மக்களுக்கு போதனைகள் வழங்கப்படக் கூடாது என்பதே புத்தர் பெருமானின் உபதேசமாகும். பசியுடன் வாழும் மக்களுக்கு உணவு வழங்கிய பின்னரே அவர்கள் போதிக்கப்பட வேண்டும் என புத்த பெருமான் உபதேசித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *