மேலும்

படை உயர்அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் ரணில் நடத்திய கூட்டம்

Ranilஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக, அலரி மாளிகையில், சிறிலங்காவின் முப்படைகளினதும், காவல்துறையினதும் உயர்மட்ட அதிகாரிகளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலுக்கு, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் பதவிக்கும் மேற்பட்ட, கடற்படையின், ரியர் அட்மிரல் பதவிக்கு மேற்பட்ட, விமானப்படையின் எயர் வைஸ் மார்ஷல் பதவிக்கு மேற்பட்ட, காவல்துறையின்  பிரதிக் காவல்துறைமா அதிபபர் பதவிக்கு மேற்பட்ட அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு, தீர்மானத்தின் ஆங்கில மூலப் பிரதியும், அதன் சிங்கள மொழியாக்கப் பிரதியும் வழங்கப்பட்டது.

கடந்த முதலாம் திகதி ஜெனிவாவில் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக, படையினருடன் இந்த கலந்துரையாடல்களை சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பித்திருந்தது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க படை அதிகாரிகள் மத்தியில் 40 நிமிடங்கள் உரையாற்றிய பின்னர்,  அவர்களின் சந்தேகங்கள் குறித்த கேள்விகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ஜெனிவா தீர்மானம் மற்றும் அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணைகள் குறித்து, இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற படை அதிகாரிகள், ஏனைய படையினர் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில், விளக்கங்களை அளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *