மேலும்

மின்சார நாற்காலிக்கும் கலப்பு விசாரணைக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டோம் – சிறிலங்கா அதிபர்

maithripala-srisenaமின்சாரக் நாற்காலிக்கும் கலப்பு விசாரணைக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும், ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடங்கியுள்ள  உள்ளக விசாரணைப்  பொறிமுறை தொடர்பாக விரைவில் அனைத்துக் கட்சி மாநாட்டை கூட்டி கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில்  பங்கேற்று விட்டு நேற்று பிற்பகல் நாடு திரும்பிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அதிபர் மாளிகையில் நேற்றிரவு நடத்திய சிறப்பு செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு 7.15 மணியளவில் ஆரம்பித்து சுமார் ஒரு மணிநேரம் நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“ஐ.நா. விசாரணை அறிக்கை மற்றும் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் தீர்மானம் மற்றும் உள்ளக விசாரணை என்பன தொடர்பாக தனித்து எந்த தீர்மானத்தையும் நான் எடுக்கமாட்டேன்.

பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் பேச்சு நடத்தியே தீர்மானம் எடுப்பேன்.

அடுத்து சில நாட்களில் அனைத்துக்கட்சி மாநாட்டைக் கூட்டி எல்லாக்  கட்சிகளுடனும் பேச்சு நடத்தி இந்த விடயங்கள் குறித்து ஆலோசனைகளை பெற்றுக் கொள்வேன்.

விரைவில் பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் என அனைத்து மதத்தினரையும் சார்ந்த மாநாட்டை நடத்துவுள்ளதுடன் அவர்களது ஆலேசனைகளை பெற்றுக் கொள்வேன்.

நாட்டுக்குள்ளும் வெளிநாடுகளிலும் வாழும் சிறிலங்காவின் கல்விமான்களை அழைத்து கலந்துரையாடல்களை நடத்தவும், ஆலோசனைகளை பெறவும் உத்தேசித்துள்ளேன்.

சில அடிப்படைவாதிகளும், இனவாதிகளும், பெய்யான தேசப்பற்றாளர்களும் அரசியல் தலைவர்கள் சிலர் மின்சாரக் நாற்காலிக்கு போக நேரிடும் என்றும் நான் அமெரிக்காவின் பகடைக்காய் என்றும், இந்த ஆட்சி அமெரிக்காவின் சூழ்ச்சியால் அதிகாரத்தை பிடித்த ஆட்சி என்றும் பிரச்சாரம் செய்தனர்.

ஆனால் நாம் யார் என்ற உண்மையை வெகுவிரைவில் வெளிப்படுத்துவோம்.

ஐ.நா. அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட கலப்பு நீதிமன்ற விசாரணையை இறுதிக்கட்ட ஜெனிவா தீர்மானத்தில் நாங்கள் இல்லாமல் செய்தோம்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் விசாரணைகளில் அனைத்துலகத் தலையீடு இருக்கப் போவதில்லை.

சிறிலங்காவின் அரசியல் அமைப்பு மற்றும் சட்டவரையரைக்குள் நாட்டினதும் மக்களினதும் இறையாண்மை மீறப்படாத வகையில் விசாரணைகள் நடத்தப்படும்.

அனைத்து செயற்பாடுகளும் சிறிலங்காவின் சட்டவரையறைக்குட்பட்டதாகவே இருக்கும்.

போர் முடிந்த பின்னர் கடந்த ஐந்து ஆண்டுகளாக அனைத்துலகம் எமக்கெதிராகவே செயற்பாடுகளை முன்னெடுத்தது.

சிறிலங்காவுக்கு ஐ.நா.விலோ, அனைத்துலக ரீதியிலோ ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

பிரபாகரனையும், விடுதலைப்புலிகள் அமைப்பையும் ஒழிப்பதற்கும், போரை வெற்றி கொள்ளவும், இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகள் எமக்கு உதவி செய்தன.

போர் முடிந்த பின்னர் இந்த நாடுகள் எமக்கெதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களையும், போர்க்குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தன.

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் புலிகள் அமைப்பினர் இதற்கான கடும் அழுத்தங்களை பிரயோகித்தனர்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அனைத்துலகத்துடன் நட்புறவு இருக்கவில்லை. அனைவருடனும் முரண்பட்ட நிலைமையே காணப்பட்டது. உலக நாடுகள் எமக்கு ஆதரவு வழங்கவில்லை.

இவ்வாறானதோர் சூழ்நிலையில் எமக்கெதிராக ஐ.நா.வில் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.

உலகம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை என்பன எமது நாட்டுப் பிரச்சினை தொடர்பில் இரண்டுபட்ட நிலைப்பாட்டிலேயே காணப்பட்டன.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பொருளாதார தடை விதிக்கப்படும் ஆபத்தும் காணப்பட்டது.

அதற்கு முன் ஏற்பாடாகவே ஜி.எஸ்.பி. வரிச்சலுகை நீக்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் இறக்குமதி தடை போன்றன விதிக்கப்பட்டன.

இவ்வாறானதோர் சூழ்நிலையிலேயே நான் அதிபர் தேர்தலில் களமிறங்கினேன். இதன்போது எதிர்தரப்பினர்,  நான் போரை  முடித்த தலைவர்களையும, படையினரையும், மின்சாரக் நாற்காலியில் அமர வைக்கப்போகின்றேன் என குற்றம் சாட்டினார்கள்.

ஆனால் மக்கள் இந்த குற்றச்சாட்டை நிராகரித்து என்னை அதிபராக்கினர்.

அதன்பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சியமைத்து இந்த நிலைமையை மாற்றுவதற்கான பயணத்தை ஆரம்பித்தோம்.

முதற்படியாக 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றி எனக்குள்ள நிறைவேற்று அதிகாரங்கள் சிலவற்றை குறைத்தேன். சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தேன்.

நாட்டில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாத்தோம். காணாமல் போதல், கொலைகள், மோதல்கள், தாக்குதல்கள் இல்லாத ஜனாநாயத்துடனான நல்லாட்சியை உருவாக்கினோம். ஜனவரி 8 ஆம் நாள் இந்த புரட்சியினை உருவாக்கினோம்.

அதன்பின்னர் ஓகஸ்ட் 17 ஆம் நாளுக்குப்  பின்னர் தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி அரசியல் இணக்கப்பாட்டை நிறுவினோம்.

இதன்மூலம் அனைத்துலக ஆதரவு கிடைத்தது. எமது நடவடிக்கையை அனைத்துலகம் வரவேற்றது.

மின்சாரக் நாற்காலி என்ற பேச்சுக்கே இனி நாட்டில் இடமில்லை. இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால் பயங்கரமான நிலைமைகளை சந்திக்க நேர்ந்திருக்கும்.

போரில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள் உட்பட அனைவருக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.

தருஸ்மண் அறிக்கை, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை, உடலகம, பரணகம ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து உள்ளக விசாரணைகள் மேற்கொள்வோம்.

ஜெனிவா தீர்மானம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் போது எமது மக்கள் நெருக்கடிகளை சந்திப்பார்களானால் அது தொடர்பில் மக்களுக்கு சார்பான நிலைமைகளை முன்னெடுப்போம்.

நியாயமான , நீதியான தீர்வை பெற்றுக் கொடுப்போம். நாட்டு மக்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் எவ்விதமான பிரச்சினையுமின்றி சுமூகமான நிலைமையை உருவாக்குவோம்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *