மேலும்

பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய 4 இராணுவ அதிகாரிகளுக்கு ஒரு மாத தடுப்புக்காவல் உத்தரவு

Prageeth Ekneligodaஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளையும், மேலும் ஒரு மாதம் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு, பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்துள்ளது.

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளான லெப்.கேணல் குமார ரத்நாயக்க, லெப்.கேணல் சிறிவர்த்தன, சார்ஜன்ட் ராஜபக்ச, கோப்ரல் ஜெயலத் ஆகிய நால்வரையுமே, மேலும் ஒரு மாதம் தடுத்து வைத்து விசாரிக்க குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களைத் தடுத்து வைத்து விசாரிக்க பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சு வழங்கியிருந்த அனுமதி நேற்றுடன் காலாவதியாகியிருந்தது.

இந்த நிலையில், இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும், தடுப்புகாவல் உத்தரவை நீடிக்குமாறும் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு கோரிக்கை விடுத்திருந்தது.

இதற்கமையவே, மேலும் ஒரு மாதம் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்துள்ளது.