மேலும்

“அவர்களுக்குச் சொந்தமான அனைத்தையும் அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்”

refugees_srilankaசிறிலங்காவின் வடக்கிலுள்ள யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமது சிறிய நிலத்தில் மிகவும் மகிழ்வுடன் வாழ்ந்த நாட்களை லக்ஸ்மணன் தர்மராஜினி நினைவுகூருகிறார். ‘நாங்கள் மிகவும் மேன்மையான வாழ்வை வாழமுடிந்தது. ஆனால் இன்று எமது சந்தோசமான வாழ்வு எம்மை விட்டுச் சென்றுவிட்டது’ என தர்மராஜினி தெரிவித்தார்.

கணவன்மாரை இழந்து வாழும் ஆயிரக்கணக்கான பெண்களில் தர்மராஜினியும் ஒருவராவார். தமது கணவன்மார் மற்றும் உறவுகள் உயிருடன் உள்ளனரா அல்லது இல்லையா என்பது கூடத் தெரியாது இவர்கள் தமது வாழ்நாளைக் கழிக்கின்றனர். கணவன்மாரைப் போரில் பறிகொடுத்த பெண்கள் இன்று எவ்வித தொழில்வாய்ப்புக்களோ, உதவிகளோ மற்றும் நிலமோ இன்றி பெரிதும் துன்பப்படுவதாகவும் தர்மராஜினி தெரிவித்தார்.

26 ஆண்டுகால யுத்தமானது 2009 மேயில் முடிவடைந்ததன் பின்னர், இந்தப் பெண்கள் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து ஒரு நிரந்தரமற்ற வாழ்வை வாழ்கின்றனர். சிறிலங்கா இராணுவத்தால் தற்போது கையகப்படுத்தப்பட்டுள்ள சிறுபான்மைத் தமிழ் மக்களின் நிலங்களை மீட்டுத்தருமாறு கோரி செப்ரெம்பர் 07 அன்று கொழும்பில் இடம்பெற்ற ஒன்றுகூடலில் போரின் போது கணவன்மாரை இழந்த பெண்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் பங்குபற்றியிருந்தனர். இதில் தர்மராஜினியும் கலந்துகொண்டிருந்தார்.

சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களுள் 19,000 ஹெக்ரேயர் தற்போது சிறிலங்கா இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலங்களில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினர் தமது முகாம்களை அங்கிருந்து அகற்றி அவற்றை மக்களிடம் மீண்டும் ஒப்படைக்க மறுப்பதாக சிறிலங்காவின் மதிப்பு மிக்க மனித உரிமைச் செயற்பாட்டாளரும் தேசிய மீன்பிடி ஒற்றுமை அமைப்பின் தலைவருமான ஹேர்மன் குமார தெரிவித்துள்ளார்.

‘பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கடந்த 25 ஆண்டுகளாகத் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாது தவிக்கின்றனர். இவர்களது வாழ்க்கை நிச்சயமற்றதாகவே உள்ளது’ என குமார தெரிவித்தார்.

‘மதிப்புடன் வாழ்ந்த மக்கள் தமது சொந்த நாட்டிற்குள்ளேயே அகதிகளாக வாழ்கின்ற அவலநிலை தொடர்கிறது’ என குமார மேலும் தெரிவித்தார்.

‘போரின் போது மேற்கொள்ளப்பட்ட செறிவான எறிகணைத் தாக்குதல்களால் நாங்கள் எமது கிராமத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டோம். நாங்கள் எமக்குச் சொந்தமான அனைத்து ஆவணங்களையும் குறிப்பாக எமது குடும்பத்திற்குச் சொந்தமான நில உறுதிப்பத்திரத்தையும் எம்முடன் எடுத்துச் செல்லவில்லை. எம்மைப் போன்றதொரு சூழ்நிலையிலேயே பல பத்தாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்’ என 40 வயதான ஜனிசா ரேவதி தெரிவித்தார்.

‘எமது நிலங்களுக்குத் திரும்பிச் செல்வதற்குச் சாத்தியமான அனைத்து ஆதரவுகளையும் நாங்கள் எதிர்பார்த்து நிற்கிறோம்’ என ரேவதி மேலும் தெரிவித்தார்.

தமிழ் மக்களிடம் சிறிலங்கா அரசாங்கம் அவர்களுக்குச் சொந்தமான நிலங்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என ‘நீதி, சமாதானம் மற்றும் ஒற்றுமை’ போன்றவற்றுக்கான மையத்தின் உறுப்பினரும் கத்தோலிக்க அருட்சகோதரியுமான தீபா பெர்னான்டோ தெரிவித்தார்.

‘இந்த நிலங்கள் அரசியல்வாதிகளுக்குச் சொந்தமானதல்ல. இவை வறுமையில் வாடும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள். ஆகவே மிகவிரைவாக இந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்ற அனுமதிக்க வேண்டும்’ என அருட்சகோதரி மேலும் சுட்டிக்காட்டினார்.

மாரி காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இடம்பெயர்ந்து தற்காலிக கொட்டகைகளில் வாழும் மக்களுக்கு 10,000 கூரைவிரிப்புக்களை சிறிலங்கா அரசாங்கம் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதி மாவட்டச் செயலர் எஸ்.முரளிதரன் செப்ரெம்பர் 07 அன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். ஆனாலும் பதில் அரசாங்க அதிபர் மீள்குடியேற்றம் எப்போது இடம்பெறும் என்பது தொடர்பான எவ்வித காலக்கெடுவையும் குறிப்பிடவில்லை.

போரின் போது தமது கணவன்மாரை இழந்து வாழும் பெண்களின் நிலங்களை அவர்களிடம் திருப்பிக் கொடுத்து அவர்களது வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கு வழிவகுக்க வேண்டிய பொறுப்பு சிறிலங்கா அதிபரையும் நாடாளுமன்றத்தையும் சாரும் என அனைத்து வடிவிலான பாரபட்சங்கள் மற்றும் இனவாதத்திற்கு எதிரான அனைத்துலக அமைப்பின் தலைவரான நிமால்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

‘உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு தொழிற்பயிற்சிகளை மட்டும் சிறிலங்கா அரசாங்கம் வழங்குவது போதுமானதல்ல. அவர்களுக்குச் சொந்தமான கடல், நிலம் மற்றும் காடு போன்ற அனைத்தையும் அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். அத்துடன் அவர்களது வாழ்வாதாரத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கு வழிவகுக்க வேண்டும். இது பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமையாகும்’ என நிமால்க பெர்னாண்டோ மேலும் சுட்டிக்காட்டினார்.

வழிமூலம்  – UCANEWS
ஆங்கிலத்தில்  -Quintus Colombage
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *