மேலும்

கறிவேப்பிலையாக தூக்கியெறியப்படுவாரா மகிந்த? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

mahinda-maithri‘குடும்ப இராச்சியத்தைக்’ கட்டியெழுப்புவதற்காகவே இதுவரை காலமும் மகிந்த, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பயன்படுத்தினார்.  இவர் தனது கட்சி உறுப்பினர்களை ‘கறிவேப்பிலை’ போன்று தூக்கி எறிந்தார். கறிவேப்பிலை போன்று மகிந்தவால் தூக்கி எறிந்தவர்களுள் மைத்திரி மற்றும் சுதந்திரக் கட்சியின் பல உறுப்பினர்கள் அடங்குவர்.

இவ்வாறு சிலோன் ருடே ஆங்கில நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் உபுல்ஜோசப் பெர்னான்டோ. இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி

டைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வெற்றி பெற்றால் யார் பிரதமராக அறிவிக்கப்படுவார் என்பது தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பல்வேறு ஊகங்கள் நிலவுகின்றன.

இதனை யார் தீர்மானிப்பார்கள்? இதற்கான இறுதி அதிகாரம் எவர் கையில் உள்ளது? இவ்வாறான வினாக்களுக்கு கடந்த கால வரலாறு ஒரு பதிலாக அமைந்துள்ளது.

‘சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத் தேர்தலின் பெறுபேறின் பிரகாரம் எவர் நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆதரவைப் பெறுகிறாரோ அவரை நாட்டின் பிரதமராக அறிவிக்க வேண்டும்’ ஆனாலும் மைத்திரி, மகிந்தவைப் பிரதமராக அறிவிக்கமாட்டார் என்கின்ற அறிவிப்பிற்கு எதிராக ஜி.எல்.பீரிசால் முன்வைக்கப்பட்ட சட்ட ரீதியான ஒரு விவாதமாக இது காணப்படுகிறது.

1994ல் இடம்பெற்ற தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணி 105 ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்ததால் பிரதமர் பதவியைப் பெற்றுக் கொள்வதற்கு இது எத்தகைய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது என்பது தொடர்பாக ‘ராவய’ பத்திரிகையின் ஆசிரியர் விக்ரன் ஐவன் எழுதியுள்ள ஆக்கம் ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1994 இலேயே பீரிஸ் சிறிலங்காவின் அரசியலிற்குள் நுழைந்து கொண்டார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.

1994ல் நாடாளுமன்றத் தேர்தல் பெறுபேறு அறிவிக்கப்பட்டதன் பின்னர், அப்போதைய ஐ.தே.க அமைச்சர் றொனி டீ மெல், அதிபர் டி.பி.விஜயதுங்கவைச் சந்தித்தார். இச்சந்திப்பின் போது திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவை பிரதமராக அறிவிக்க வேண்டும் எனவும் சந்திரிகா குமாரதுங்கவைப் பிரதமராக்கக் கூடாது எனவும் அமைச்சர் றொனி டீ மெல் விவாதித்தார்.

தான் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன்னர், சிறிமாவோ பண்டாரநாயக்க, நிறைவேற்று அதிபர் முறைமையை ஒழிக்கத் திட்டமிட்டுள்ளதுடன்,  சுயாதீன ஆணைக்குழுவை உருவாக்கவுள்ளார் எனவும் அமைச்சர் டீ மெல் சுட்டிக்காட்டியிருந்தார்.

றொனி டீ மெல், அதிபர் விஜயதுங்கவுடன் இவ்வாறானதொரு விவாதத்தில் ஈடுபட்டிருந்த அதேவேளையில், சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் ஆதரவைப் பெற்று அரசாங்கம் ஒன்றை அமைத்து, பிரதமராகுவதற்கான கலந்துரையாடலில் காமினி திசநாயக்க ஈடுபட்டிருந்தார்.  முஸ்லீம் காங்கிரசின் அப்போதைய தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரபின் ஆதரவைப் பெறுவதற்கான நகர்வுகளில் திசநாயக்க முழுமூச்சுடன் செயற்பட்டார்.

காமினியின் திட்டத்திற்கு காலஅவகாசத்தை வழங்கும் நோக்குடன் பிரதமரை நியமிப்பதற்கான காலத்தை விஜயதுங்க மேலும் நீடித்தார். காமினிக்கு பிரதமர் பதவி வழங்கப்படுவதை எதிர்த்த ரணில் அலரி மாளிகையை விட்டு வெளியேறினார்.

இவ்வாறான நகர்வுகள் நடந்து கொண்டிருந்த அதேவேளையில், நிருபமா ராஜபக்சவைத் திருமணம் செய்திருந்த பிரபல வர்த்தகரான திரு நடேசன், சந்திரிகாவிற்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கு விஜயதுங்கவைச் சம்மதிக்க வைப்பதற்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தனவைத் தேடிச் சென்றதாக விக்ரர் ஐவன் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

சிறிமாவோ பண்டாரநாயக்க நாட்டின் பிரதமராக்கப்பட்டால், தனது சிவில் உரிமையைப் பறித்ததற்காக தன் மீது பழிதீர்க்க சிறிமாவோ முனையலாம் என ஜே.ஆர். அச்சமுற்றார். இதனாலேயே சந்திரிகாவை பிரதமராக்க வேண்டும் என்பதில் ஜே.ஆர் குறியாக இருந்தார்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு எதிராக எவ்வித பழிவாங்கலையும் மேற்கொள்ள மாட்டேன் என சந்திரிகா உறுதியளித்திருந்தார். இதனால் சந்திரிகாவை பிரதமராக்க வேண்டும் என விஜயதுங்க மீது ஜே.ஆர். அழுத்தங் கொடுத்ததாக விக்ரர் ஐவன் தனது பத்தியில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோன்று ரணிலும் ஜே.ஆரிடம் தனது விருப்பமும் இதுதான் ஆகவே இது தொடர்பில் விஜயதுங்க மீது அழுத்தங் கொடுக்குமாறு தெரிவித்திருந்தார். அப்போதைய அதிபர் விஜயதுங்க முன்னிலையில் மண்டியிட்டதன் விளைவாக சந்திரிகா பிரதமராக அறிவிக்கப்பட்டார். இத்தேர்தலில் தோல்வியடைந்த கட்சியின் தலைவராக இருந்தவாறே அதிபர் விஜயதுங்க அரசியல் சதுரங்க ஆட்டத்தை நடத்தியிருந்தார்.

எனினும், விஜயதுங்க இருந்த அதே நிலையை தற்போது மைத்திரி தக்கவைத்துக் கொள்ளவில்லை. மைத்திரிபால சிறிசேன தற்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக உள்ளார்.

இக்கட்சியின் தலைவர் அதிபராக இருக்கும் அதேவேளையில் இக்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால், பிரதமராக யாரை நியமிப்பதென்பதை இவரே தீர்மானிக்க வேண்டும்.

சிறிலங்காவின் அடுத்த பிரதமராக நீங்கள் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என மைத்திரியிடம் ஒரு ஊடகவியலாளர் வினவினார். ‘சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒரு ஜனநாயகக் கட்சி. அதிபராக உள்ள இக்கட்சியின் தலைவரே பிரதமர் யார் என்பதைத் தெரிவு செய்வார்’ என மைத்திரி பதிலளித்துள்ளார்.

‘பிரதமர் பதவி என்பது சரியான தருணத்தில் சரியான நபருக்கு நாட்டின் அதிபரால் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான முழு உரிமையும் அதிபருக்கு உண்டு. இந்த விடயத்தில் கட்சியிலுள்ள நாங்கள் எவ்வித கருத்து வேறுபாட்டையும் கொண்டிருக்கக் கூடாது’ என நிமால் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

ஆகவே மைத்திரியும் நிமாலும் இந்த விடயத்தில் சரியான கருத்தைக் கொண்டுள்ளனர்.

1989ல், காமினி திசநாயக்க மற்றும் லலித் அத்துலத்முதலி ஆகிய இருவரும் அதிகளவான விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும், அப்போதைய அதிபர் பிறேமதாச, டி.பி.விஜயதுங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கியிருந்தார்.

1993ல், விஜயதுங்க தனது கட்சியிலுள்ள மூத்த அரசியல்வாதிகளைக் கருத்திற் கொண்டு ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கினார்.

இதேபோன்று 1995ல் சிறிமாவோ பண்டாரநாயக்கவை, அதிபர் சந்திரிகா,  பிரதமராக அறிவித்தார்.

2005 பொதுத் தேர்தலின் பின்னர், சந்திரிகா, தனது தாயாருக்கு வழங்கியிருந்த பிரதமர் பதவியை நீக்கிவிட்டு அதனை ரட்ணசிறி விக்கிரமநாயக்கவுக்கு வழங்கினார்.

2001ல், ஐ.தே.க பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்ற போது ரணில் விக்கிரமசிங்கவை சந்திரிகா பிரமராக அறிவித்தார். 2

2004ல், சந்திரிகா குமாரதுங்கவால் மகிந்த ராஜபக்ச பிரதமராக அறிவிக்கப்பட்டார். அமைச்சரவை ஒன்றுகூடுவதற்கு முன்னர் ராஜபக்சவை சந்திரிக்கா பிரதமராக்கினார். லக்ஸ்மன் கதிர்காமரை பிரதமராக்குவதாக ஜே.வி.பியிடம் சந்திரிகா உடன்படிக்கை மேற்கொண்ட போதிலும் இந்த விடயத்தில் இவர் இதனை மீறினார்.

2009ல், மைத்திரி, நிமால் சிறிபால, பசில் ராஜபக்ச ஆகியோர் பிரதமர் பதவிக்காக சிபாரிசு செய்யப்பட்ட போதிலும், மகிந்த ராஜபக்சவால் டி.எம்.ஜெயரட்ன பிரதமராக நியமிக்கப்பட்டார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் என்ற வகையிலும் நாட்டின் அதிபர்கள் என்ற வகையிலும் சந்திரிக்காவும் மகிந்தவும் தமது ஆட்சிக்காலங்களில் பிரதமராக யாரை நியமிப்பதென்பது தொடர்பில் தமது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தினார்கள் என்பதை வரலாறு சுட்டிக்காட்டுகிறது.  இதேபோன்று தற்போது மைத்திரியும் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.

ஆகஸ்ட்டில் இடம்பெறவுள்ள தேர்தலில் ஐ.தே.க வெற்றி பெற்றால் விஜயதுங்க மற்றும் சந்திரிகா ஆகியோரால் எடுக்கப்பட்ட தீர்மானம் போன்று பிரதமராக யாரை நியமிக்க வேண்டும் என்பதற்கான பொறுப்பை அக்கட்சியிடமே கொடுக்கலாம்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி இத்தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்றால், பிரதமராக எவரைத் தெரிவு செய்வதென்பதை மைத்திரி தானாகவே தீர்மானிக்க முடியும்.

கட்சியிலுள்ள ஒருவரை மைத்திரி தனது விருப்பிற்கேற்ப பிரதமராக அறிவித்தால் அதனை சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள எவரும் எதிர்க்க முடியாது. மகிந்த விசுவாசிகள் இதனை எதிர்த்தால், தனக்குச் சார்பான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடனும் ஐ.தே.கவுடனும் இணைந்து அரசாங்கத்தை அமைப்பதென்பது மைத்திரிக்கு அவ்வளவு கடினமான காரியமன்று. மகிந்த பிரதமரானால் தமது பதவிகளைத் தொடர்ந்தும் தக்க வைத்திருக்க முடியும் என சிலர் கருதுகின்றனர்.

மகிந்தவின் ஆதரவுடன் இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் கூட அமைச்சுப் பொறுப்புக்களைப் பெறவேண்டும் என்பதில் விருப்பங் கொண்டுள்ளனர். ஆகவே எவர் பிரதமராக வந்தாலும் அதனை இவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்.

மகிந்தவுக்கு மைத்திரி பிரதமர் பதவியை வழங்காவிட்டால் ஐ.தே.க மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவை மகிந்தவால் பெறமுடியாது. ‘குடும்ப இராச்சியத்தைக்’ கட்டியெழுப்புவதற்காகவே இதுவரை காலமும் மகிந்த, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பயன்படுத்தினார்.

இதன் பின்னர் இவர் தனது கட்சி உறுப்பினர்களை ‘கறிவேப்பிலை’ போன்று தூக்கி எறிந்தார். கறிவேப்பிலை போன்று மகிந்தவால் தூக்கி எறிந்தவர்களுள் மைத்திரி மற்றும் சுதந்திரக் கட்சியின் பல உறுப்பினர்கள் அடங்குவர்.

ஆகவே தற்போது மைத்திரியின் காலமாகும். இத்தேர்தலில் மகிந்தவும் கறிவேப்பிலை போன்று பயன்படுத்தப்பட்டு பின்னர் தூக்கி எறியப்படுவார் என்பதை யார் அறிவார்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *