மேலும்

தேர்தலால் இரு கட்டங்களாக உயர்தரத் தேர்வு – ஆசிரியர் சங்கங்கள் கடும் அதிருப்தி

examசிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால்,  க.பொ.த உயர்தரத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளதாக சிறிலங்காவின் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து, கல்வி அமைச்சும் பரீட்சைத் திணைக்களமும் இந்த முடிவை எடுத்துள்ளன.

இதன்படி ஏற்கனவே திட்டமிட்டபடி, ஓகஸ்ட் 04 ஆம் நாள் க.பொ.த உயர்தரத் தேர்வு ஆரம்பமாகும்.

முதற்கட்டத் தேர்வு ஓகஸ்ட் 13ஆம் நாள் வரை இடம்பெறும். அதையடுத்து நாடாளுமன்றத் தேர்தலுக்காக இடைவேளை விடப்படும்.

மீண்டும், இரண்டாம் கட்டமாக ஓகஸ்ட் 24ஆம் நாள் தேர்வு ஆரம்பமாகி செப்ரெம்பர் 08ஆம் நாள் நிறைவடையும்.

எனினும். 5ஆம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் தேர்வு  ஏற்கனவே திட்டமிட்டபடி, ஓகஸ்ட் 23ஆம் நாள் நடைபெறும்.என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, க.பொ.த உயர்தரத் தேர்வை இரண்டு கட்டங்களாக நடத்த எடுக்கப்பட்டுள்ள முடிவு குறித்து ஆசிரியர் சங்கங்கள் கடும் அதிருப்தியும் கவலையும் வெளியிட்டுள்ளன.

இது மாணவர்களுக்கு உளரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அவர்களின் வாழ்க்கையுடன் அரசாங்கம் விளையாடுவதாகவும், இலங்கை ஆசிரியர் சேவை  தொழிற்சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலினும், தேர்தல் பரப்புரைகளால் மாணவர்கள் இயல்பான சூழலில் தேர்வுக்கு படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *