மேலும்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பை பலவீனப்படுத்த சிறிலங்கா முயற்சி

ltte-flagநாடுகளுடனான இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்தி, விடுதலைப் புலிகளின் நிதி ஆதார வலையமைப்புகளைப் பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கையைச் சுட்டிக்காட்டி நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும் எதிர்க்கட்சியினரும் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு  சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மக்கள சமரவீர பதிலளித்துள்ளார்.

“விடுதலைப் புலிகளின் நிதி மற்றும் ஆதரவு வலையமைப்புகளை பலவீனப்படுத்துவதற்காக, சிறிலங்காவுடன் முன்னர் இணைந்து பணியாற்றிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசாங்க முகவர் அமைப்புகளும் புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்வதில், குறிப்பாக, தீவிரவாத முறியடிப்பு மற்றும்  நிதிவலையமைப்புகளுக்கு எதிரான எல்லா நிபுணர்களுடனும், நெரக்கமான ஒத்துழைப்பை பேணி வருகின்றன.

அனைத்து வடிவங்களிலுமான தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.

எப்போதும் தீவிரவாதத்துக்கு எதிரான இந்தக் கொள்கை நிலையானதாக இருக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மங்கள சமரவீர, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை குறித்து கருத்து வெளியிட்ட போது, அது 2014ஆம் ஆண்டுக்குரிய அறிக்கை என்றும், மகிந்த ராஜபக்ச அரசாங்கம், அனைத்துலக அளவில் புலிகளின் வலையமைப்பை தோற்கடிக்க தவறியுள்ளது என்பதை அது காட்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.