மேலும்

தமிழ்நாட்டில் நாடற்றவர்களாக வாழும் ஈழத்தமிழர்கள்

Sri-Lankan-Tamil-refugeesசிறிலங்காவுக்கான இந்தியப் பிரதமர் மோடியின் சுற்றுப்பயணமானது ‘திருப்புமுனையாக’ உள்ள போதிலும் உறுதியாக எதையும் சாதிக்கவில்லை. சிறிலங்காவில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் வெற்று வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன. இவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இவ்வாறு புதுடெல்லியில் இருந்து வெளியாகும் the statesman நாளிதழில், சாம் ராஜப்பா எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

இன்னமும் சூழல் மாறவில்லை. தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள அரசலூர் அகதி முகாமிலேயே நந்தினி பிறந்தார். இவரது பெற்றோர்கள் சிறிலங்காத் தீவின் வடக்கு மாகாணத்தில் போர் மேகம் சூழப்பட்ட 1990 இல் அங்கிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர்.

நந்தினி உயர்நிலைப் பரீட்சையில் 1200 மொத்தப் புள்ளிகளுக்கு 1170 புள்ளிகளைப் பெற்று சிறப்புச் சித்தி பெற்றார். இதன் பின்னர் இவர் சென்னையிலுள்ள கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் கல்வி கற்பதற்காக விண்ணப்பித்திருந்தார்.

இவர் இக்கல்லூரியில் மருத்துவக் கற்கையைத் தொடர்வதற்கான போதிய தகைமை கொண்டிருந்த போதிலும் அகதி என்ற காரணத்திற்காக இவருக்கு அக்கல்லூரியில் இடமளிக்கப்படவில்லை.

சிறிலங்கா உட்பட பல்வேறு நட்பு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள் தமக்கான மருத்துவக் கற்கையைத் தொடர்வதற்கு மனித வள அபிவிருத்தி அமைச்சு அனுமதி வழங்கவுள்ளதாக இந்திய மத்திய உள்விவகார அமைச்சிற்கு வெளியுறவுச் செயலகம் மே 08, 2015 அன்று அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், அகதிகள் என அடையாளங்காணப்பட்ட மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்படவில்லை. நந்தினி பதிவு செய்யப்பட்ட ஈழத்தமிழ் மாணவி அல்ல. இவர் தமிழ் நாட்டிலேயே பிறந்து தமிழ்நாட்டிலேயே கல்வி கற்ற ஒருவராவார்.

சிறிலங்காவில் மோதல் ஆரம்பித்த பின்னர் 1983லிருந்து இந்தியாவில் தமிழ் மக்கள் அகதித் தஞ்சம் கோரத் தொடங்கினர். இவர்களுக்கு இந்தியா புகலிடம் வழங்கியது.

தமிழ்நாட்டிலுள்ள ஈழத்தமிழ் பெற்றோருக்கு 20,000 இற்கும் மேற்பட்ட பிள்ளைகள் தமிழ்நாட்டில் பிறந்தவர்களாவர். இவர்கள் ‘நாடிழந்தவர்கள்’ என்பதன் காரணமாக இவர்களது பிறப்பானது சிறிலங்கா குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 5 (2) இன் கீழ் பதியப்பட வேண்டும். அல்லது இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படவேண்டும்.

ஆனால் இவர்கள் ‘நாடிழந்தவர்கள்’ என்கின்ற வகையின் கீழ் பதிவு செய்யப்படுவதற்கு பெற்றோர்கள் தமது திருமணச் சான்றிதழ்களை சென்னை, சிறிலங்கா துணைத் தூதரகத்திடம் கையளிக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் இந்தியாவிற்கு அகதியாகச் செல்லும் போது இவ்வாறான ஆவணங்களைத் தம்முடன் கொண்டு செல்வதற்கான நிலையிலிருக்கவில்லை.

‘இந்தியாவில் வாழும் 100,000 வரையான ஈழத்தமிழ் அகதிகள் சிறிலங்காவுக்குத் திரும்பிச் செல்வது தொடர்பாக இந்திய-சிறிலங்கா கூட்டு ஆணைக்குழுவின் அடுத்த ஆண்டுச் சந்திப்பின் போது முன்னுரிமை அளிக்கப்படும்’ என செப்ரெம்பர் 09, 2013 இன் பின்னர் சிறிலங்கா மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்திருந்தது.

தமிழ்நாட்டிலுள்ள ஈழத்தமிழ் அகதிகள் தாம் தமது சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கான நாட்களை 2014 ஆரம்பத்திலிருந்து ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

ஈழத்தமிழ் அகதிகளின் நலனிற்காக இயங்கும் ‘ஈழ அகதிகள் புனர்வாழ்விற்கான அமைப்பு’ 2014லிருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகுப்பயணங்களை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டாம் என மக்களுக்கு ஆலோசனை வழங்க ஆரம்பித்தது. இதற்குப் பதிலாக சிறிலங்காவுக்குச் செல்லுமாறும் கோரத் தொடங்கியது.

இந்த நிறுவனம் மிகத் திட்டமிட்ட முறையில் சிறிலங்காவுக்கு ஈழ அகதிகள் திரும்பிச் செல்வது தொடர்பான நிகழ்ச்சித் திட்டத்தை மேற்கொண்டது. இதற்காக ஈழத்தமிழ் அகதிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதில் அகதிகள் நலன் பேண் அமைப்பு முக்கிய பங்காற்றியது.

தமிழ்நாட்டில் பிறந்த ஈழத்தமிழ் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு சிறிலங்கா குடியுரிமையைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் இதில் ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனாலும் இச்செயற்பாடானது மிக மெதுவானதாகக் காணப்படுகிறது.

இதேவேளையில், நந்தினி ஈழத்தமிழ் அகதி மாணவி என்ற ஒரேயொரு காரணத்தை முன்வைத்து சென்னை உச்சநீதிமன்றத்தில் அங்கம் வகிக்கும் பிரதம நீதியரசர் சன்ஜய் கிசான் கோல் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் உட்பட்ட குழுவினர் நந்தினி மருத்துவக் கற்கையைத் தொடர்வதற்கான அனுமதியை வழங்க முடியாது என இந்திய மத்திய அரசாங்கத்திற்கு எழுதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

நந்தினி போன்ற ஈழத்தமிழ் அகதி மாணவர்கள் தமது தொழிற்கல்வியைத் தொடர்வதற்கு வேறேதாவது சிறப்புச் சட்டவரைபுகள் உள்ளனவா என்பதைத் தெளிவுபடுத்துமாறு மத்திய உள்விவகார அமைச்சிடம் இந்திய மேலதிக பிரதம வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் கோரியிருந்தார்.

1983ல், சிறிலங்காவில் இனப்பிரச்சினை தீவிரம் பெற்றதன் பின்னர், 334,797 வரையான ஈழத்தமிழர்கள் இந்தியாவில் அகதித்தஞ்சம் கோரியிருந்தனர். இவர்களுள் 212,000 வரையானவர்கள் சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் தமது சொந்த நாட்டிற்குத் திரும்பியுள்ளவர்கள் அல்லது வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.

தற்போது எஞ்சியுள்ள 102,000 அகதிகளுள் 65,218 பேர் தமிழ்நாட்டிலுள்ள 25 மாவட்டங்களைச் சேர்ந்த 110 வரையான அகதி முகாங்களில் வாழ்கின்றனர்.

19வது நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து சிறிலங்காவுக்கு பிரித்தானியர்களால் கொண்டு செல்லப்பட்ட மலையகத் தமிழர்களில் சில ஆயிரம் வரையானவர்கள் மீண்டும் இந்திய அகதி முகாங்களில் தங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டு அகதி முகாங்களில் வாழும் பெரும்பாலான ஈழத்தமிழ் அகதிகள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் தமது நாட்டிற்குத் திரும்பிச் செல்வதற்காகக் காத்திருக்கின்றனர்.

இந்திய அரசியல் யாப்பின் எட்டாவது பத்தியில், மலையகத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் சிறிலங்கா அகதிகள் என்பதால் இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை மறுக்கப்படக்கூடாது.

தமது நாட்டில் நிலவிய மத வன்முறைகளால் இந்தியாவில் அகதித் தஞ்சம் கோரிய பங்களாதேஸ் இந்துக்களுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்குவதென பா.ஜ.க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதே வசதி வாய்ப்புக்கள் ஈழத்தமிழ் அகதிகளுக்கு வழங்கப்பட வேண்டும். இவர்களுள் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களாவர்.

சிறிலங்காவில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் முடிவுற்றாலும் கூட, வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்னமும் இயல்புநிலை முற்றாகத் திரும்பவில்லை.

சிறிலங்கா இராணுவத்தினர் இங்கு பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் ஐந்து பொதுமக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்ற விகிதாசாரத்தில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினரில் பெரும்பாலானவர்கள் பௌத்தர்களாவர். தமிழ் மக்கள் வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டு அவற்றுக்குப் பதிலாக பௌத்த விகாரைகள் கட்டப்படுகின்றன.

இந்தியா மற்றும் சிறிலங்கா ஆகிய இரண்டு நாடுகளிலும் கடந்த 12 மாதங்களில் ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்விரு நாடுகளிலும் வாழும் மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளன. ஆனால் நடைமுறையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. சில இடங்களில் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.

பெப்ரவரி மாதத்தில் இந்தியாவுக்கான தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, 1987 இந்திய-சிறிலங்கா உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள 13வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் வாக்குறுதி வழங்கியிருந்தார்.

இதேபோன்று இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள தனியார் நிலங்களை மீளவும் உரிமையாளர்களிடம் வழங்குவதற்கான நடவடிக்கையை எடுப்பதாகவும் உறுதியளித்திருந்தார். சிறிலங்கா இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டிருந்த காவற்துறை அதிகாரத்தை நீக்குவது தொடர்பாகவும் இந்தியப் பிரதமர், சிறிலங்கா அதிபரிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதேபோன்று சிறிலங்கா இராணுவத்தினர் மக்களின் நிர்வாகங்களில் தலையீடு செய்யக்கூடாது எனவும் கோரப்பட்டது. இது தவிர உள்ளுர் மக்கள் காவற்துறையில் இணைக்கப்பட வேண்டும் எனவும் வடக்கு-கிழக்கிலுள்ள இராணுவ முகாங்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இவ்வாறான நகர்வுகள் நாட்டில் மீளிணக்கப்பாட்டைக் கட்டியெழுப்ப உதவுவதுடன், தாம் தமது நாட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியும் என்கின்ற நம்பிக்கையை தமிழ்நாட்டு வாழ் ஈழத்தமிழ் அகதிகள் மத்தியிரும் உருவாக்கும்.

போர் முடிவடைந்த பின்னர் 8,155 அகதிகள் மட்டுமே சிறிலங்காவுக்குத் திரும்பிச் சென்றுள்ளதானது சிறிலங்காவில் தமிழ் மக்கள் வதியும் இடங்களில் இயல்புநிலை திரும்புவதற்கு இன்னமும் காலம் எடுக்கும் என்பதைப் பிரதிபலிக்கிறது.

இந்திய மற்றும் சிறிலங்கா அரசாங்கங்கள் இணைந்து முழுமையான திட்டங்களை முன்னெடுக்கும் போது ஈழத்தமிழ் அகதிகள் சிறிலங்காவுக்குத் திரும்பிச் செல்வது அதிகரிக்கப்படும்.

அகதி முகாங்களில் வாழும் மக்களுக்கு ஆதரவளிப்பதென்பது இந்தியாவைப் பொறுத்தளவில் சுமைமிக்க ஒன்றாகும். ஆகவே இந்தச் சுமையை நீக்குவதற்கு பொருத்தமான அரசியல் நகர்வை முன்னெடுப்பதுடன் நன்கு ஆராயப்பட்ட பொருளாதார திட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும்.

இதன்மூலம் இந்தியாவின் சிறிலங்கா தொடர்பான கோட்பாடு மீது மேலும் தெளிவான நிலை காணப்படும். சிறிலங்காவுக்கான இந்தியப் பிரதமர் மோடியின் சுற்றுப்பயணமானது ‘திருப்புமுனையாக’ உள்ள போதிலும் உறுதியான எதையும் சாதிக்கவில்லை. சிறிலங்காவில் பிரதமரால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் வெற்று வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன. இவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளின் பிரச்சினைகள் தொடர்பில் தி.மு.க தலைவர் மு.கருணாநிதி தொடக்கம் அ.இ.அ.தி.மு.க தலைவி ஜெ.ஜெயலலிதா வரை எந்தவொரு அரசியல்வாதிகளும் பயனுள்ள தீர்வுகளை எட்டவில்லை. ஈழத்தமிழ் அகதிகளின் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன.

இவர்கள் நாடிழந்தவர்களாவும் வீடிழந்தவர்களாகவும் வாழ்கின்ற நிலையை மாற்றுவதற்கு மனிதாபிமான அணுகுமுறை மிகவும் தேவைப்பாடான ஒன்றாக விளங்குகிறது.

2 கருத்துகள் “தமிழ்நாட்டில் நாடற்றவர்களாக வாழும் ஈழத்தமிழர்கள்”

  1. Pingback: தமிழ்நாட்டில் நாடற்றவர்களாக வாழும் ஈழத்தமிழர்கள் | Indian News | SriLankan Tamil News | Articles |
  2. Trackback: தமிழ்நாட்டில் நாடற்றவர்களாக வாழும் ஈழத்தமிழர்கள் | Indian News | SriLankan Tamil News | Articles |
  3. Pingback: தமிழ்நாட்டில் நாடற்றவர்களாக வாழும் ஈழத்தமிழர்கள் - Top Batti NewsTop Batti News
  4. Trackback: தமிழ்நாட்டில் நாடற்றவர்களாக வாழும் ஈழத்தமிழர்கள் - Top Batti NewsTop Batti News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *