மேலும்

தடுப்புக்காவலில் அரசியல் கைதிகள் எவருமில்லை – கைவிரிக்கிறார் சிறிலங்கா நீதி அமைச்சர்

Wijeyadasa Rajapaksheசிறிலங்கா சிறைச்சாலைகளில் தடுப்புக்காவலில் இருப்பவர்கள் கடுமையான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களும், தண்டனை நிலுவையில் உள்ளவர்களுமே தவிர, அரசியல் கைதிகள் அல்ல என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள அவர், இந்த நிலையில் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோருவது முறையற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருவது குறித்தும், அண்மையில் சிறிலங்கா வந்திருந்த அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஜோன் கெரி, எஞ்சியிரக்கும் அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு அரசாங்கத்தை கோரியுள்ளது குறித்தும் கருத்து வெளியிட்டுள்ள விஜேதாச ராஜபக்ச-

“அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எனக்கும் இடையில்  பேச்சுக்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் அடிப்படையற்றவை.

அத்தகைய பேச்சுக்களுக்கான  ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை.

இது போருக்குப் பிந்திய நல்லிணக்க முயற்சிகளைக் குழிதோண்டிப் புதைக்கின்ற செயலாகும்.

ஜனவரி 8ம் நாள் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற போது, சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளது.

இவர்களில், தீவிரவாத குற்றச்சாட்டுகளுக்காக 54 பேர் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர். 85 பேருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

134 பேருக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 8 பேருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.  மேலும் 45 கைதிகள் புனர்வாழ்வுக்குப் பின்னர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆயுத மோதல் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், இரகசியத் தடுப்பு முகாம்கள் இயங்கி வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவையாகும்.

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களுக்கு அவர்கள் எங்குள்ளனர் என்பது தெரியும்.

வெளி நடைமுறைகளின் ஊடாக இவர்களை விடுவிக்க முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *