மேலும்

லண்டனில் புலம்பெயர் தமிழருடன் மங்கள முக்கிய சந்திப்பு – சுமந்திரன், சொல்ஹெய்மும் பங்கேற்பு?

mangala-samaraweeraசிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர லண்டனில் புலம்பெயர் தமிழர் அமைப்பு ஒன்றுடன் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளதாகவும், இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோரும் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று, மங்கள சமரவீர, எரிக் சொல்ஹெய்ம், சுமந்திரன் ஆகியோர் நேற்றிரவு லண்டன் வந்தடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இவர்கள் புலம்பெயர் அமைப்பான உலகத் தமிழர் பேரவையுடன் இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, மற்றொரு கொழும்பு ஆங்கில வாரஇதழ், உலகத் தமிழர் பேரவைக்கும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் நாளை பேச்சுக்கள் நடக்கவுள்ளதாக கூறியுள்ளது.

இது சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிக்கும் முன்னணி புலம்பெயர் தமிழ் அமைப்பு ஒன்றின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடக்கும் முதல் சந்திப்பாக இது அமையும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நல்லிணக்கம்,  பரஸ்பர  புரிந்துணர்வை அபிவிருத்தி செய்தல் ஆகிய அடிப்படைகளில் இந்தப் பேச்சுக்கள் அமையும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தப் பேச்சுக்களுக்கு தென்னாபிரிக்காவின் அமைதியை உருவாக்குதல் மற்றும் மோதலுக்குத் தீர்வு காணுதல் தொடர்பாக பணியாற்றும் அரச சார்பற்ற நிறுவனமே ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் ஜொப் டொட்ஜ், இந்தச் சந்திப்பு தென்னாபிரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் நல்லிணக்க விவகாரம் தொடர்பாக  மேற்கொள்ளப்படும் அரசாங்கங்களுக்கு இடையிலான திட்டத்தின் ஒரு அங்கம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

“இது தென்னாபிரிக்க அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் தனியான முயற்சி.  இந்த சந்திப்பில் தென்னாபிரிக்க அரசாங்கமோ, கொழும்பில் உள்ள தென்னாபிரிக்க தூதரகமோ தொடர்புபடவில்லை. எனினும் சந்திப்புத் தொடர்பாக நாம் அறிந்துள்ளோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *