மேலும்

வடக்கின் சீரழிவுகளுக்கு மகிந்த ஆட்சியே காரணம் – சுமந்திரன் குற்றச்சாட்டு

sumanthiranவடக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்துகளின் மூலம், அவர் இனவாத நிகழ்ச்சி நிரலின் கீழ் தான் செயற்படுகிறார் என்பது உறுதியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி தொடர்பாக, ஆறுதல் தெரிவிக்காத மகிந்த ராஜபக்ச, வடக்கில் வன்முறைகள் தலைதூக்கியிருப்பதாகவும், கடந்த காலங்களில் இவ்வாறே பயங்கரவாதம் உருவானது என்றும் கூறியிருப்பது அவர் என்ன பாதையில் பயணிக்கிறார் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் வடக்கில் இராணுவத்தினர் ஊடாக போதைப்பொருள் விநியோகம் அதிகரித்திருந்தது.

இதன் வெளிப்பாடே தற்பொழுது அங்கு இடம்பெறுகின்ற சமூக விரோதச் செயல்களாகும்.  இந்த நிலைமைக்கு மகிந்த ராஜபக்சவின் ஆட்சியே காரணம்.

இவ்வாறான நிலையில் புங்குடுதீவு மாணவியின் கொலை மற்றும் அதன் பின்னரான மக்கள் போராட்டங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் அதிபர், வடக்கில் வன்முறைகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளது எனக் கூறியுள்ளார்.

புங்குடுதீவு மாணவியின் கொலையை கண்டித்து அமைதியான போராட்டமொன்றே முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த குழுவொன்று இணைந்து அமைதிப் பேரணியை வன்முறையாக மாற்றியது.

இதில் ஈபிடிபியினரும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

இந்தச் சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது இது ஏற்கனவே திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட குழப்பும் முயற்சி என்பது புலனாகிறது.

மகிந்த ராஜபக்சவின் நிகழ்ச்சி நிரல் என்ன என்பது இதன் மூலம் பகிரங்கமாகியுள்ளது.

வடபகுதியில் அதிகரித்திருக்கும் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமூகவிரோத செயல்களை ஒரே நாளில் கட்டுப்படுத்திவிட முடியாது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு நீண்டகாலத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

வடமாகாண சபை, அரசசார்பற்ற நிறுவனங்கள், சமூக ஆர்வ நிறுவனங்கள் உள்ளிட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முதற்கட்டமாக விழிப்புணர்வு வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *