மேலும்

மகிந்தவைக் காப்பாற்ற இரவிரவாக நாடாளுமன்றத்துக்குள் தவம் கிடந்த ஆதரவாளர்கள்

parliament-mps-sleepஇலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் இருந்து சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக, அவரது ஆதரவாளர்களான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சுமார் 56 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரவிரவாக நாடாளுமன்றத்துக்குள் போராட்டம் நடத்தினர்.

நேற்று நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், சபையின் நடுவே அமர்ந்து போராட்டத்தை ஆரம்பித்த இவர்கள், இரவிரவாக அங்கேயே தங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் கைவிட வேண்டும் என்று கோரியே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்துவதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளிக்கும் வரை தாம் நாடாளுமன்றத்தை விட்டு விலகிச் செல்லப் போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

parliament-mps-sleep

நாடாளுமன்றத்துக்குள் உறுப்பினர்கள் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது இதுவே முதல் முறை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று நடத்திய பேச்சுக்கள் தோல்வியில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  இந்த விவகாரத்தில் எந்த அரசியல் தலையீடுகளும் இல்லை என்றும், மகிந்த ராஜபக்ச, விசாரணையைத் தவிர்ப்பதற்கு உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *