மேலும்

யேமன் மீட்பு நடவடிக்கை – சீனாவுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு

chinese-evacuationசீன மக்கள் விடுதலை கடற்படை இராணுவத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளை கோடிட்டுக்காட்டும் போது, சீனாவானது பூகோள இராணுவப் பிரசன்னம் அனைத்துலகிற்கு நலன் பயப்பதாக நியாயப்படுத்துகிறது.

இவ்வாறு The diplomat ஊடகத்தில் Shannon Tiezzi எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’.

யேமனில் போர் வலுத்துள்ள நிலையில், கடந்த வாரம் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கடற்படை யேமனில் அகப்பட்ட சீனர்களையும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களையும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

மார்ச் 29 மற்றும் 30 ஆம் நாள்களில் சீனாவின் Weifang என்ற நீர்மூழ்கிக்கப்பலும், Weishanhu  என்ற வழங்கற் கப்பலும் இணைந்து 571 சீனர்களை யேமனிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளன.

இதேபோன்று ஏப்ரல் 02 ஆம் நாள், பிறிதொரு போர்க்கப்பலான Linyi பத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் 225 பேரை (பெரும்பாலான பாகிஸ்தானியர்கள்)  யேமனின் ஏடன் துறைமுகத்திலிருந்து டிஜிபூற்றிக்கு பாதுகாப்பாகக் கொண்டு சென்றது.

போர்க் களத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான பணியில் சீனா தனது இராணுவத்தைப் பயன்படுத்துவது மிகவும் அரிதாகும். இதேபோன்று வெளிநாட்டவர்களைப் பாதுகாப்பதற்கு சீனாவின் இராணுவம் பயன்படுத்தப்படுவதில்லை.

‘யேமனின் ஆபத்தான போர் வலயத்திலிருந்து வெளிநாட்டவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதற்காக சீனாவால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான முதலாவது நடவடிக்கையாக இது காணப்படுகிறது’ என சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹூவா சுன்ஜிங்க் கடந்த வாரம் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டவர்களை யேமனிலிருந்து மீட்டெடுப்பதில் சீன இராணுவம் ஈடுபட்டதானது சீன அரசாங்கத்தால் பின்பற்றப்படும் அனைத்துலக மற்றும் மனிதாபிமானக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது என ஹூவா மேலும் குறிப்பிட்டார்.

‘சீன இராணுவத்தால் வெளிநாடுகள் மீது காண்பிக்கப்படும் மனிதாபிமான உதவிகள், சீனா தன்னால் இயலுமான வேளைகளிலும் தயாராக உள்ள வேளைகளிலும் மனிதாபிமான உதவிகளை வழங்க விரும்புவதையே சுட்டிக்காட்டுகிறது.

சீனாவின் இயலுமை மற்றும் உதவியுடன் அழிவுகள் மற்றும் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான மேலும் அதிக வளங்களை அனைத்துலக சமூகம் பெற்றுக்கொள்ளலாம்’ என, சின்குவா என்ற சீன ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யேமனில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையானது அதிகரித்து  வரும் சீனாவின் பூகோள இராணுவப் பிரசன்னத்தை அடிப்படையாகக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் அதிகரித்து வரும் தேசிய பலமானது தமக்கான அச்சுறுத்தல் என நாடுகள் கருதுகின்ற போதிலும், சீனாவின் வளம், பலம் மற்றும் சனத்தொகை போன்றன அதிகரிப்பதானது ஒருபோதும் அழிவிற்கான காரணியாக இருக்கமாட்டாது எனவும் இந்த உண்மையை இந்த உலகம் ஏற்றுக்கொண்டால் இது இழப்பதை விட அடைவதற்கு இன்னமும் அதிகம் உள்ளது என்பதை உணரும் என ‘சின்குவா’ ஊடகத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ஏடன் விரிகுடாவில் கடற்கொள்ளைகளை எதிர்கொள்வதற்காக சீனாவின் கடற்படையினர் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருக்காவிட்டால், இவர்களால் யேமனில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதிருந்திருக்கும்.

இதுவே சீனக் கடற்படையின் பிரசன்னம் வெளிநாடுகளில் அதிகரித்து வருவதற்கான சான்றாகும். சீனப் போர்க் கப்பல்கள் தயாராக இருந்ததால் இவை மிக விரைவாக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட்டன’ என சின்குவா மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

கடற்கொள்ளைக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகள் பூகோள ரீதியாக வலுப்பெற்றுள்ளதாக, சீன இராணுவ இணையத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏடன் விரிகுடாவில் தங்கி நின்ற சீன அதிரடிப்படையினர் அடிப்படை கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மேலாக சில மனிதாபிமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர் என சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கடற்படையின் உதவிக் கட்டளைத் தளபதி றியர் அட்மிரல் டூ ஜின்ஜென் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏடன் விரிகுடாவில் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கடற்படையினர் தரித்து நின்ற போது இவர்கள் லிபியா மற்றும்  யேமனிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கும், சிரியாவிலிருந்து இரசாயான ஆயுதங்களைப் பாதுகாப்பாக அகற்றுவதற்கும், மாலைதீவுக்கு அவசர நீர் வழங்களை மேற்கொள்வதற்கும் உதவியுள்ளதாக அட்மிரல் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏடன் விரிகுடாவை கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைக்கு சீனா பயன்படுத்தும் அதேவேளையில், சீனக் கடற்படையினரால் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை சீனாவுக்கான பூகோள இராணுவ நலன்கள் என்பதைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்தப்படுகிறது.

சீனா தனது மக்கள் விடுதலை இராணுவத்தின் கடற்படைக் கப்பல்களுக்கு நீண்ட தூர இலக்குகளை அடைந்து கொள்வதற்கான இருப்பிட ஆதரவை வழங்குவதற்காக அனைத்துலகக் கடற்பரப்புக்களில் தளங்களை அமைக்க விரும்புவதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த பத்தாண்டாக அமுல்படுத்தப்படும் சீனாவின் முத்துமாலை மூலோபாயமானது இந்திய மாக்கடல் முழுவதிலும் சீனா தனது இராணுவத் தளங்களை அமைப்பதற்கான வழிவகையை ஆராய்வதற்கு உதவுவதுடன் குறிப்பாக சீனா தனக்கான பொருளாதார செல்வாக்கை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் தனது இராணுவத் தளங்களை அமைக்க உதவுகிறது.

இந்த நோக்கத்திற்காகவே சிறிலங்காவில் சீன முதலீட்டில் துறைமுகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளையில், தென் அத்திலாந்திக்கில் மக்கள் விடுதலை இராணுவத்தின் கடற்படையினருக்கு பலமான இருப்பிடம் ஒன்றை நிறுவுவதற்காக வல்விஸ் விரிகுடாவில் தளம் ஒன்றை அமைப்பதற்கான வழிகளை சீன அரசாங்கம் ஆராய்வதாக நமிபியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனா இரட்டைப் பயன்பாட்டைக் கொண்ட இருப்பிட வசதிகளை அமைப்பதிலேயே அதிகம் நாட்டங் காண்பிப்பதாக தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி கிறிஸ்ரோபர் யுங் இவ்வாண்டின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான இரட்டைப் பயன்பாட்டுத் தளங்கள் மூலம் சீனா, அவசர நடவடிக்கைகள், மனிதாபிமான உதவிகள், மீட்பு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு சிறிய நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு மக்கள் விடுதலை இராணுவத்தின் கடற்படைக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக சின்குவா குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான தளங்கள் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கடற்படைக் கப்பல்கள் பயங்கரவாத எதிர்ப்புத் தாக்குதல்கள் போன்ற பாரம்பரிய இராணுவ நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கான ஆளுமையை வழங்குகிறது.

சீன மக்கள் விடுதலை கடற்படை இராணுவத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளை கோடிட்டுக்காட்டும் போது, சீனாவானது பூகோள இராணுவப் பிரசன்னம் அனைத்துலகிற்கு நலன் பயப்பதாக நியாயப்படுத்துகிறது.

சீனாவின் நேரடி இராணுவப் போட்டி நாடுகளான அமெரிக்கா, இந்தியா மற்றும் யப்பான் போன்றன சீனா தொடர்பான இவ்விவாதத்தை ஏற்றுக்கொள்ளமாட்டாது..

ஆனால் வெளிநாடுகளில் தனது தளங்களைப் பலப்படுத்துவதற்காக சீனாவால் தெரிவுசெய்யப்படும் நாடுகளுக்கு சீனாவின் இத்தகைய கருத்துக்கள் உந்துதலை வழங்குவதாக இருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *