மேலும்

19வது திருத்தம் குறித்து கருத்து வாக்கெடுப்பு தேவையில்லை – உயர்நீதிமன்றத்தில் சட்டமா அதிபர்

Supreme Court19வது திருத்தச்சட்ட மூலம் நாட்டு மக்களின் இறைமையை உறுதிப்படுத்தும் வகையிலும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பதால், இது தொடர்பாக கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று, சிறிலங்கா சட்டமா அதிபர் யுவாஞ்சன விஜேதிலக நேற்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பாக, நேற்று உயர்நீதிமன்றத்திடம் தமது நிலைப்பாட்டை சட்டமா அதிபர் அறிவித்தார்.

அரசியலமைப்பின் அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு கருத்து வாக்கெடுப்புக்குச்  செல்லவேண்டிய தேவை இல்லையென்றும் சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

“அரசியலமைப்பின் ஆரம்பத்தில் உள்ள கட்டமைப்பை மாற்றும் வகையில் இந்த திருத்த யோசனைகள் அமைந்திருக்கவில்லை.

திருத்தங்கள் மூலம் அரசியலமைப்பின் அடிப்படையில் மாற்றம் செய்யும்போது அரசியலமைப்பின் 83வது சரத்து மீறப்படுமாயின் அதனை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதற்கு அப்பால் கருத்து  வாக்கெடுப்பொன்றுக்குச் செல்லவேண்டிய அவசியம் ஏற்படும்.

எனினும், இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு கருத்து வாக்கெடுப்புக்குச் செல்லவேண்டிய தேவை இல்லை.

திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியலமைப்பின் மூன்றாவது மற்றும் நான்காவது சரத்துக்கள் தொடர்பிலேயே கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர்.

இந்த சரத்துக்கள் நாட்டு மக்களின் இறைமை தொடர்பானவை. எனினும், உத்தேச திருத்தச்சட்டமூலம் மக்களின் இறைமையை பலவீனமடையச் செய்யும் வகையில் அமையவில்லை.

மாறாக அதனை கடைப்பிடிக்கும் முறையிலேயே மாற்றங்கள் பிரேரிக்கப்பட்டுள்ளன.

பிரதமரின் ஆலோசனையுடனேயே அதிபர் சில தீர்மானங்களை எடுக்க முடியும் என்ற விடயம், ஆரோக்கியமான ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கான சமநிலைகளைப் பேணும் வகையில் அமைந்துள்ளது.

அதிபரும், பிரதமரும் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள். அதேநேரம், அதிபர் நிறைவேற்றுத் தலைவராக நீடிப்பார்.

புதிய திருத்த யோசனையின்படி, அமைச்சரவையின் தலைவராக பிரதமர். காணப்படுவார். பிரதமர் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டும்போது அதிபரும் அதில் பங்கெடுப்பார்.

அதிபரின் பதவிக்காலத்தை அதிகரிப்பது மாத்திரமே அரசியலமைப்பில் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இறைமையை மீறுவதாக உள்ளது.

ஆனால் அதிபரின் பதவிக்காலத்தைக் குறைப்பதானது அரசியலமைப்பின் 30(2) சரத்தின் கீழ் மக்களின் இறைமையை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் குறித்த திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டிய தேவை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *