மேலும்

எதிர்க்கட்சித் தலைவர் சர்ச்சைக்கு இன்று முடிவு – சபாநாயகர் அறிவிப்பார்

chamal-rajapakshaசிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்படப் போவது யார் என்பது குறித்து, இன்று சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று அறிவிக்கவுள்ளார்.

அத்துடன், 19வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானமும், இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று கூடும் போது, சபாநாயகர் சமல் ராஜபக்ச இந்த இரண்டு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றதையடுத்து, அந்தக் கட்சியைச் சேர்ந்த நிமால் சிறிபால  டி சில்வா தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க முடியாது என்ற சர்ச்சை கிளப்பப்பட்டது.

அத்துடன் தினேஸ் குணவர்த்தனவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு தரப்பினர் கோரி வருகின்றனர்.

அதேவேளை, நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே பிரதான எதிர்க்கட்சி என்ற தகைமை அளிக்கப்பட வேண்டும் என்று சிறுபான்மைக் கட்சிகளும், ஜேவிபியும் வலியுறுத்தி வருகின்றன.

இந்தநிலையில், இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் பொறுப்பு சபாநாயகருக்கு வழங்கப்பட்ட நிலையில், அவர் இதுதொடர்பான அறிவிப்பை இன்று வெளியிடுவார்.

அதேவேளை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, 19வது அரசியலமைப்புத் திருத்த யோசனை தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் நேற்று சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

19வது திருத்தச்சட்டத்தை சாதாரணமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்ற முடியுமா, அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன், கருத்து வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டுமா என்பது தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் கருத்து இந்த வியாயக்கியானத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *