மேலும்

உக்ரேன் பிரிவினைப் போராளிகளுக்கு ஆயுதங்களை விற்றதாக சிறிலங்கா தூதுவர் மீது குற்றச்சாட்டு

mahinda -Udayanga Weeratungaமகிந்த ராஜபக்சவின் உறவினரும், ரஸ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க, உக்ரேனிய பிரிவினைவாத போராளிகளுக்கு ஆயுதங்களை விற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உக்ரேனிய அரசாங்கத்தினால், சிறிலங்கா அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உக்ரேனிய பிரிவினைவாத போராளிகளுக்கு, சிறிலங்காவின் முன்னாள் தூதுவரான உதயங்க வீரதுங்க ஆயுதங்களை விற்றது தொடர்பாக,  சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிடம், உக்ரேனிய அதிபர் பெட்ரோ பொரோசென்கோவினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உறுதிப்படுத்தியுள்ளார்.

தாம் இந்த விவகாரம் தொடர்பாக முழு அளவிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் சிறிய ஆயுதங்களை உக்ரேனிய பிரிவினைவாதிகளுக்கு விற்பனை செய்த விவகாரத்தில் தொடர்புபட்டுள்ளதாக, குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் மருமகனான உதயங்க வீரதுங்க, ரஸ்யாவுக்கான தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், உக்ரேனியத் தலைநகர் கீவ்வில், கிளப் லங்கா என்ற சிறிலங்கா உணவகத்தை நடத்தி வந்தார்.

இவர் மகிந்த ராஜபக்ச பதவிக்கு வந்ததில் இருந்து, மங்கள சமரவீரவினால் திருப்பி அழைக்கப்படும் வரை- 9 ஆண்டுகளாக ரஸ்யாவுக்கான தூதுவராகப் பணியாற்றியுள்ளார்.

மங்கள சமரவீரவினால் திருப்பி அழைக்கப்பட்ட போதிலும், உதயங்க வீரதுங்க இன்னமும் சிறிலங்காவுக்குத் திரும்பவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.

இவர் ரஸ்யாவுக்கான தூதுவராகப் பதவி வகித்த போது, சிறிலங்காவுக்கான பல ஆயுதக் கொள்வனவுகளுடன் தொடர்புபட்டிருந்தார்.

அவற்றில் சில ஆயுதக் கொள்வனவுகள் தொடர்பாக, புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள, நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதில், சிறிங்கா விமானப்படைக்கு, மிக்-27 தரைத் தாக்குதல் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட விவகாரமும் அடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *