மேலும்

மோடியின் சிறிலங்கா பயணம் – சீன ஆய்வாளரின் பார்வை

modi-mannar (1)ஒவ்வொரு சிறிய நாடுகளும் பல்வேறு சக்திகள் மத்தியில் அதிகார சமநிலையைப் பேணுவதற்காகப் போராடுகின்றன. மேலாதிக்க சக்திகளின் மத்தியில் நிலவும் போட்டித்தன்மையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சில சிறிய நாடுகள் தமது தேசிய நலன்களை இயன்றளவு அடைந்து கொள்ள முயற்சிக்கின்றன.

இவ்வாறு குளோபல் ரைம்ஸ் நாளிதழில், சீன ஆய்வாளரான Liu Zongyi எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்திய மாக்கடலிலுள்ள செசெல்ஸ், மொரிசியஸ் மற்றும் சிறிலங்கா ஆகிய மூன்று தீவுகளுக்கான ஐந்து நாள் பயணத்தை ஞாயிறன்று முடித்துக் கொண்டுள்ளார்.

செப்ரெம்பரில் சிறிலங்காவில் ஆரம்பிக்கப்பட்ட சீனாவின் 1.4 பில்லியன் டொலர் துறைமுக நகரத் திட்டத்தை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்ததன் பின்னர் பிரதமர் மோடி தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

ஆகவே, இந்திய மாக்கடலில் அதிகரித்து வரும் சீனாவின் இருப்பை முறியடிப்பதற்காகவே தனது அயல்த் தீவுகளுக்கு மோடி பயணம் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இது தொடர்பான அண்மைய சம்பவங்கள் சீனா தனது நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்த வேண்டும் எனக் கருதுவதற்குப் போதுமானவையாகும். சீனா தனது பட்டுப்பாதைத் திட்டம் மற்றும் 21ம் நூற்றாண்டுக்கான கரையோர பட்டுப்பாதைத் திட்டத்தை அமுல்படுத்தும் போது பிராந்திய சக்திகள் மற்றும் சிறிய நாடுகளின் பிரதிபலிப்புக்கள் தொடர்பாகவும் கூர்ந்து அவதானிக்க வேண்டும்.

இந்திய மாக்கடல் பிராந்தியத் தீவுகளுடன் இந்தியா வரலாற்று ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் எண்ணற்ற தொடர்புகளைக் கொண்டுள்ளது. இப்பிராந்தியத்தின் தலைமைச் சக்தியாகச் செயற்பட வேண்டும் என்பதே இந்தியாவின் குறிக்கோளாகும்.

கடந்த சில பத்தாண்டுகளாக, இந்திய மாக்கடல் பிராந்திய நாடுகளுக்கு சில இந்தியத் தலைவர்கள் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளனர். கடந்த 28 ஆண்டுகளில் முதன்முதலாக சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி ஆவார்.

இத்தீவுகளுடன் இராஜதந்திர உறவுகளை மேலும் இறுக்கமாக்கிக் கொள்ளவேண்டும் என்பதே இந்தியாவின் தற்போதைய முயற்சியாகும். இது புதுடில்லியின் நகர்வுகள் மூலம் தெளிவாகப் புலப்படுகிறது. இந்தியா தற்போது தனது பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்த வேண்டும் என முனைகிறது.

தென்னாசியாவும் இந்திய மாக்கடலும் இந்தியாவின் பிராந்தியமாகவே நோக்கப்படுகிறது. இங்கு ஏனைய நாடுகள் செல்வாக்குச் செலுத்த முடியாது.

‘ஒரு அணை ஒரு பாதை’ என்ற சீனாவின் பட்டுப்பாதைத் திட்டமானது சீன அதிபரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இதனுடன் தொடர்புபட்ட நாடுகளுடன் அமைதி வழியில் உறவைப் பலப்படுத்தி இந்த நாடுகளுடன் சீனா தனது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கட்டுமானத் துறைகளைப் பலப்படுத்துவதே நோக்கமாகும். இது இத்திட்டத்தை முழுமையான வெற்றிக்கு இட்டுச்செல்லும்.

சீனாவின் இத்திட்டமானது தென்னாசியா மற்றும் இந்திய மாக்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த சில நாடுகளால் ஆதரிக்கப்படுகிறது. ஆனால் சீனாவின் இத்தகைய திட்டத்தின் பின்னால் பிறிதொரு மறைமுகமான பூகோள அரசியல் நோக்கங்கள் காணப்படுவதாக இந்திய அரசாங்கம் கூறுகிறது.

இத்திட்டத்தில் தென்னாசிய மற்றும் இந்திய மாக்கடல் பிராந்திய நாடுகள் ஈடுபடுவதை இந்தியா விரும்பவில்லை. ஆனால் இதற்குப் பதிலாக வேறு திட்டத்தைப் பரிந்துரைப்பதற்கும் இந்தியாவால் முடியவில்லை.

பங்களாதேஸ்-சீனா-இந்தியா-மியான்மார் பொருளாதாரச் செயற்பாடுகள் ஏற்கனவே ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாகவும் மியான்மார் மற்றும் பங்களாதேசின் உள்ளகச் செயற்பாட்டுத் திட்டங்கள் எனவும் இந்தியா சுட்டிக்காட்டுகிறது.

சீனாவின் 21வது நூற்றாண்டின் கரையோர பட்டுப்பாதைத் திட்டத்தை முறியடிக்கும் நோக்குடன் செப்ரெம்பர் 2014ல் சீன அதிபர் இந்தியாவுக்கான தனது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் மோடி மிகவும் அவசர அவசரமாக Mausam என்கின்ற திட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.

தற்போது பிரதமர் மோடி இந்திய மாக்கடல் பிராந்திய நாடுகளுக்கான தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதன்மூலம் இந்தியா இப்பிராந்தியத்தில் இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை ஏனைய நாடுகளுடன் மேற்கொண்டு இதன்மூலம் அதிகார சக்தியாகத் தன்னை நிலைநிறுத்த முயற்சிக்கிறது என்பதையே மோடியின் பயணம் சுட்டிக்காட்டுகிறது.

சிறிலங்காவுக்கான மோடியின் பயணமானது சீனா உட்பட பல்வேறு நாடுகளின் ஊடகங்களில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தை கொழும்பு இடைநிறுத்திய போது இந்தியாவின் கை ஓங்கியுள்ளதாக இந்திய அரசாங்கம் நம்பியது.

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான வரலாற்று சார் முரண்பாடுகளாக சிறிலங்கா வாழ் தமிழ் மக்கள் மற்றும் மீன்வளங்களும் காணப்படுகின்றன. இவ்விரு விவகாரங்களும் சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான சுமூகமான உறவைக் கட்டியெழுப்புவதற்குத் தடையாக இருந்து வருகிறது.

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணத்திற்கு பிரதமர் மோடி பயணம் செய்ததானது சிறிலங்காவின் உள்விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்வதை உறுதிப்படுத்துகிறது.

சீனா-சிறிலங்கா உறவானது நீண்டதாக உள்ளது. சிறிலங்காவில் 26 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் இடம்பெற்ற போது சீனா இராணுவ சார் உதவிகளை சிறிலங்காவுக்கு வழங்கியது. சிறிலங்காவில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் எந்தவொரு நாடும் சிறிலங்காவுக்கு தமது உதவிகளை வழங்க விரும்பவில்லை.

சிறிலங்கா தனது நாட்டில் மனித உரிமைகளை மதிக்கத் தவறியதால் சில நாடுகள் தமது உதவிகளை சிறிலங்காவுக்கு வழங்க முன்வராத அதேவேளையில் போருக்குப் பின்னரும் சீனா தனது உதவிகளை சிறிலங்காவுக்கு வழங்கியது.

சிறிலங்கா அரசாங்கமானது சீனாவின் நல்லெண்ணத்துடன் கூடிய உதவிகளை சில சக்திகளின் பேரம்பேசலுக்காக அசட்டை செய்தால் அனைத்துலக சமூகத்திடமிருந்து இது தனக்கான மதிப்பைப் பெறுவது கடினமாகவே இருக்கும்.

ஒவ்வொரு சிறிய நாடுகளும் பல்வேறு சக்திகள் மத்தியில் அதிகார சமநிலையைப் பேணுவதற்காகப் போராடுகின்றன. மேலாதிக்க சக்திகளின் மத்தியில் நிலவும் போட்டித்தன்மையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சில சிறிய நாடுகள் தமது தேசிய நலன்களை இயன்றளவு அடைந்து கொள்ள முயற்சிக்கின்றன.

சீனா நாடுகளுடன் மோதல்களை ஏற்படுத்துவதைத் தவிர்த்து, பிராந்தியப் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தியில் ஏற்படும் முரண்பாடுகள் மற்றும் மோதல்களைத் தீர்ப்பதற்காக ‘ஒரு அணை மற்றும் ஒரு பாதை’ என்ற பட்டுப்பாதைத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

குறித்த சில திட்டங்களின் சாத்தியப்பாடுகள் மற்றும் நியாயப்பாடுகள் தொடர்பாக சீனா தொடர்புபட்ட நாடுகளுடன் கலந்துரையாடி இந்நாடுகளுடன் மேலும் சமரசத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் இவற்றின் மனப்பாங்குகளை மதித்து நடக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *