மேலும்

தலாய்லாமாவை அழைக்கும் பிக்குகளின் முயற்சி – சிறிலங்கா அரசாங்கம் அதிருப்தி

dalailama-meet-sl-monksதிபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவை சிறிலங்காவுக்கு அழைக்கும் பௌத்த பிக்குகளின் முயற்சி குறித்து, சிறிலங்கா அரசாங்கத் தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் நடந்த அனைத்துலக பௌத்த சம்மேளனக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்த, சிறிலங்காவின் முக்கிய பௌத்த பிக்குகள் கடந்த வியாழக்கிழமை திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.

அத்துடன், தலாய்லாமாவை சிறிலங்காவுக்கு வருவதற்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக, சிறிலங்கா மகாபோதி சமூகத்தின் தலைவர் வண.பனகல உபதிஸ்ஸ தேரர் தெரிவித்திருந்தார்.

dalailama-meet-sl-monks

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, தனது பெயரை வெளியிட விரும்பாத இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர், இதனை குளவிக்கூட்டைக் கலைக்கும் செயல் என்று வர்ணித்துள்ளார்.

“தலாய்லாமாவை சிறிலங்காவுக்கு அழைப்பது, ஒரே சீனா என்ற சிறிலங்காவின் கொள்கைக்கு எதிரானது.

தலாய்லாமாவை எந்த நாடும் வரவேற்பதை சீனா விரும்பாது என்பது இலங்கையர்கள் அனைவருக்கும் தெரியும்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரும் 26ம் நாள் சீனாவுக்குச் செல்லவுள்ள நிலையில், உபதிஸ்ஸ தேரரின் அறிவிப்பு பொருத்தமற்ற நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

யாரோ குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முனைகிறார்கள்” என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சீனாவின்  உலக பௌத்தர்கள் அமைப்பை முறியடிக்கும், பௌத்த நாடுகளுடனான இணைப்பை ஏற்படுத்தும் இந்தியாவின் முயற்சியின் பிரதிபலிப்பே இது என்று, மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான சிங்கள சமூகத்தினர், சிறிலங்காவுக்கு நெருக்கடிகள் ஏற்படும் போதெல்லாம், உதவிக்கு வருகின்ற ஒரு உறுதியான, நிலையான நண்பனாகவே சீனாவைப் பார்க்கின்றனர்.

1950களில் சிறிலங்காவில் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, இறப்பருக்கு அரிசியை பண்டமாற்றுச் செய்து கொள்ள சீனா முன்வந்தது.

பின்னர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, மேற்கு நாடுகளும், இந்தியாவும் சிறிலங்காவுக்கு ஆயுத உதவிகளை வழங்க மறுத்த போது, சீனாவே ஆயுதங்களை விற்பனை செய்தது.

போருக்குப் பிந்திய உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்கு பில்லியன் கணக்கான டொலர்களை சீனா கொட்டியுள்ளது.

இவை எல்லாவற்றையும் எந்த அரசியல் நிபந்தனைகளையும் விதிக்காமல், மனித உரிமைகள் பிரச்சினைகளை எழுப்பாமலேயே சீனா மேற்கொண்டது என்று இலங்கையர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவற்றுக்குப் பதிலாக தலாய்லாமாவை வரவேற்பதை சிறிலங்கா தவிர்த்து வந்துள்ளது.

தலாய்லாமாவை வரவேற்க பௌத்த பிக்குகள், 1999, 2006ம் ஆண்டுகளில் மேற்கொண்ட முயற்சிகள், அப்போதைய அரசாங்கங்களினால் தடுத்து நிறுத்தப்பட்டன.

கடந்த ஆண்டு பொது பலசேனா தலாய்லாமாவை அழைக்க முயன்ற போது, அதனை அனுமதிக்க வேண்டாம் என்று ராஜபக்ச அரசாங்கத்திடம் சீனா கூறியதாக, பொது பலசேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மேற்குலக நிலைப்பாடுகளை ரணில் விக்கிரமசிங்க ஆதரிக்கும், நிலையில், தலாய்லாமாவுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளிக்கக் கூடும் என்று கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, சீனாவின் திட்டங்களை இடைநிறுத்தியதன் மூலம் அந்த நாட்டை அரசாங்கம் அந்நியப்படுத்தி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.