மேலும்

சர்ச்சைக்குரிய ஏப்ரல் 23இல் சிறிலங்காவில் இருக்கமாட்டார் மைத்திரி

Maithripala_Sirisenaசிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் 100 நாள் செயற்திட்டம் முடிவுறும் நாளான வரும் ஏப்ரல் 23ம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாட்டில் இருக்கமாட்டார் என்றும், அவர் இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான அரசாங்கம் 100 நாள் செயற்திட்டத்தின் முடிவில், நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்துவதாக ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்தது.

இதன்படி, வரும் ஏப்ரல் 23ம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும்.

இதற்கான உத்தரவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவே சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் வெளியிட வேண்டும்.

அதேவேளை, 100 நாள் செயற்திட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பலவற்றை தற்போதைய அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றாத நிலையில், ஏப்ரல் 23ம் நாள் நாடாளுமன்றத்தைக் கலைப்பதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 23ம் நாள் நாடாளுமன்றத்தைக் கலைப்பது பற்றிய முடிவுக்கு எதிர்ப்பும், ஆதரவும் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், சிறிலங்கா அரசியலில் மிகுந்த சர்ச்சைக்குரிய அந்த நாளில், அதிபர் மைத்திரிபால சிறிசேன நாட்டில் இருக்கமாட்டார் என்றும், வெளிநாடு செல்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் ஏப்ரல் 22ம் நாள் தொடக்கம், 24ம் நாள் வரை இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில், ஆசிய – ஆபிரிக்க மாநாட்டின் 60ஆவது ஆண்டு நிறைவையும், புதிய ஆசிய ஆபிரிக்க மூலோபாய ஒத்துழைப்பு அமைப்பின் 10வது ஆண்டு நிறைவையும், கொண்டாடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் ஆரம்பகால உறுப்பு நாடான சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு இந்தோனேசிய அரசாங்கத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தோனேசிய பிரதி வெளிவிவகார அமைச்சர், ஏ.எம்.பசீர், கடந்த 16ம் நாள் கொழும்பில் சிறிலங்கா அதிபரை சந்தித்து, இந்த அழைப்பிதழைக் கையளித்திருந்தார்.

இந்தோனேசிய அதிபரின் சிறப்பு தூதுவராக வந்திருந்த, இந்தோனேசிய பிரதி வெளிவிவகார அமைச்சரிடம், தாம் இந்த மாநாட்டில் பங்கேற்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்துள்ளதாக, இந்தோனேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஏப்ரல் 22ம் நாள் தொடக்கம், 24ம் நாள் வரையும், இந்தோனேசியாவில் நடைபெறும் மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்றால், வரும் ஏப்ரல் 23ம் நாள் நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்பது உறுதியாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *