மேலும்

இளவாலையில் மோடியின் பாதுகாப்பு வளையம் ஊடறுப்பு – இந்திய அரசு உயர்மட்ட விசாரணை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணம் சென்றிருந்த போது, அவருக்கான பாதுகாப்பு வளையத்தை மீறி இளைஞர் ஒருவர் உள்நுழைந்த சம்பவம் தொடர்பாக, இந்திய அரசாங்கம் உயர்மட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில், நரேந்திர மோடி யாழ்ப்பாணத்தில் பயணத்தை முடித்துக் கொண்டு, வாகனத்தில் ஏற முற்பட்ட போது, அவரை நெருங்கிய இளைஞர் ஒருவர், கைகுலுக்க முயன்றிருந்தார்.

இளவாலையில் வீடுகளைக் கையளித்து விட்டு புறப்படத் தயாரான போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

அந்த இளைஞர் இந்தியப் பிரதமருக்கு மிக அருகில் கணிசமானளவு தூரத்துக்குச் சென்றிருந்தார்.

எனினும், அவரை இந்தியப் பிரதமருடன் கைகுலுக்க விடாமல், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்துவிட்டனர்.

அவரைப் பிடித்த இந்திய பாதுகாப்பு அதிகாரிகள், சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைத்திருந்தனர்.

தாம் இந்தியப் பிரதமருடன் கைகுலுக்கி, ஒரு ஒளிப்படம் எடுத்துக் கொள்ளவே முயன்றதாக, 20 வயதுகளில் உள்ள அந்த இளைஞர், இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை மோசமான பாதுகாப்புக் குறைபாடாக எடுத்துக் கொண்டுள்ள, பிரதமர் செயலகம், உடனடியாக உயர் மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் செயலகத்தின் மேற்பார்வையின் கீழ் நடைபெறும் இந்த விசாரணையில், இந்திய புலனாய்வுப் பிரிவான றோ, வெளிவிவகார அமைச்சு, உள்துறை அமைச்சு ஆகியன இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *