நாளை கொழும்பு வரும் மோடிக்கு 2 விமானந்தாங்கிக் கப்பல்கள், 7 போர்க்கப்பல்கள் பாதுகாப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீஷெல்ஸ், மொறிசியஸ், சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவரது பாதுகாப்புக்காக தனது இரண்டு விமானந்தாங்கிப் போர்க்கப்பல்கள் மற்றும், 7 போர்க்கப்பல்களை இந்தியக் கடற்படை, இந்தியப் பெருங்கடலில் நிறுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் சீஷெல்ஸ் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து மொறிசியஸ் சென்றுள்ளார்.
அங்கிருந்து இன்றிரவு புறப்படும் அவர், நாளை அதிகாலை 5.30 மணியளவில் சிறிலங்காவின் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளார். சிறிலங்காவில் அவர், இரண்டு நாட்கள் தங்கியிருப்பார்.
இந்தநிலையில், அவரது பாதுகாப்புக்காக இந்தியக் கடற்படை, ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா, ஐஎன்எஸ் விராட் ஆகிய விமானந்தாங்கிக் கப்பல்களையும், ஏழு போர்க்கப்பல்களையும், இந்தியப் பெருங்கடலில் நிறுத்தி, உன்னிப்பான கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது.
மோடியின் பாதுகாப்புக்காக மேற்கு கப்பற்படையின், போர்க்கப்பல்களுடன் இணைந்து, போர் விமானங்கள், உலங்குவானூர்திகள், கண்காணிப்பு விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஏனைய ஆயுதங்கள் ஏற்கனவே கொச்சிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு இந்தியக் கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா என்ற விமானந்தாங்கி போர்க்கப்பல், கொச்சிக்கு பயணம் மேற்கொண்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.