மேலும்

கண்ணீரோடு கலங்கி நிற்கிறோம் அரவிந்தன் அண்ணா…..! – நினைவுப் பகிர்வுகள்

புதினப்பலகையின்  ஆசிரியரும், புகழ்பெற்ற கவிஞரும், எழுத்தாளரும், ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடியுமான மறைந்த கி.பி.அரவிந்தன் அவர்களின் பிரிவுத்துயரை, வெளிப்படுத்தும் புதினப்பலகை குழுமத்தினரின் நினைவுப் பகிர்வுகள்…..

aravinthan annaஎங்கள் தேசம் என்றும் உங்களை நினைவில் நிறுத்திக்கொள்ளும்…

 ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகற்கு.’

என்பது வள்ளுவன் வாக்கு. அந்த வகையில் நாமும் அமரர் அரவிந்தன் அவர்கள்  தாயக விடுதலைக்கு செய்த சேவைகளை மறந்துவிட முடியாது. ஒருமனிதன் தான் எவ்வளவு காலம் வாழ்ந்தான் என்பதை விட தான் வாழ்ந்த காலத்தில் என்ன செய்தான் என்பதே முக்கியமாகும். இதற்கு உதாரணமாக வாழ்ந்து அமரராகியுள்ளார் அரவிந்தன் அவர்கள்.

மனிதன் பிறக்கும்போதே சாவும் அவனோடு சேர்ந்து பிறப்பெடுக்கிறது. அந்தச் சாவின் பிடியிலிருந்து யாரும் தப்பிவிடமுடியாது யாரும் ஓடி ஒளிந்துகொள்ளவும் முடியாது. அது வாழ்வின் ஒரு நிகழ்வாக என்றோ ஒருநாள் எதிர்கொள்ளப்பட வேண்டியதுதான். இப்படிக் கூறி அரவிந்தன் அண்ணருடைய சாவிற்கு ஆறுதல் கூறமுடியாது.

அவரது சாவு எமது விடுதலைப் பயணத்தில்  தாங்கமுடியாத ஒரு சோக நிகழ்வு. அவரது சாவு எமக்கும் விடுதலைபெறத் துடிக்கும் எமது இனத்துக்கும்  ஈடுசெய்ய முடியாத, சரித்திரம் மறக்காத சோக நிகழ்வு.

தமிழினத்தின் தேசிய ஆன்மாவை உசுப்பிவிட்ட சுவடுகளோடு ஒன்றிநிற்கும் ஒரு நிகழ்வாகவே இது அமைந்துவிட்டது.

சுதந்திர வேட்கையை கொளுந்து விட்டெரியச் செய்த மாவீரர்களின் தியாகங்களை தன் நெஞ்சில் தாங்கி களப்பணியாற்றிய ஓர் உன்னதமான  மனிதனின் சாவு எம்மை ஒருகணம் நிலைகுலைய வைத்துள்ளது.

அரவிந்தன் அண்ணரது வாழ்வுப்பாதை வித்தியாசமானது, தனித்துவமானது. மனிதர்களது இருப்பை விட மனிதர்களது செயற்பாடுதான் முக்கியமானது என வாழ்ந்து காட்டியவர். அவர் எமது தேசத்தின் களச் செயற்பாட்டாளராக அறிமுகமான  நாள் முதல் அவருக்குள் உணர்வும், தியாகமும், அர்ப்பணிப்பும், உண்மைத்தன்மையும் இருப்பதை நாம் கண்டுகொண்டோம். அது அவர் விடுதலையின் மீது கொண்டிருந்த அர்ப்பணிப்பாகவும், அனுபவத் திரட்டியாகவும் ஆளுமை வீச்சாகவும் எல்லோரையும் ஈர்ந்தது. அது எமக்கிடையே ஆழமான நட்பை வளர்த்தது. சொல்லப்போனால் எமது விடுதலை தேசம் அவரை ஆழமாகவே நேசித்தது.

எமது விடுதலை இயக்கம் களத்திலும் புலத்திலும் நெருப்பாறுகளைத் தாண்டிய வேளைகளிலும், புயல்களையும் பூகம்பங்களையும் சமாளித்த வேளைகளிலும், எரிமலைகளை எதிர்த்து நின்று எதிர்நீச்சல் போட்ட வேளைகளிலும் அவர் ஓர் களப்பணி ஆற்றும் செயற்பாட்டாளனாக எம்மோடு உறுதுணையாக நின்றார்.

ஊடகத்துறை, பரப்புரை, அலுவலகச்செயற்பாடு என எல்லா துறைகளுக்குள்ளும் பெரும்பணி முடிக்கும் பெரு விருட்சமாக எழுந்து நின்ற ஒவ்வொரு வளர்ச்சிப் பாதையிலும் அவர் உறுதியாகப் பங்கெடுத்தார்.

தனது தனித்துவத்திற்கு அப்பால் தேசத்திற்குச் சேவை புரியும் அவரது இந்த உயரிய பண்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உயரிய விழுமியங்களுள் ஒன்று.

அந்தவகையில் பல பேருதவிகளையும், மறக்கமுடியாத பல செயற்பாடுகளையும் கொண்டதாகவே அரவிந்தன் அண்ணரின் செயற்பாடு அமைந்திருந்தது.

அவர் கண்ணியமானவர், நேர்மையானவர், இரக்க சிந்தனையாளர், எல்லாவற்றிற்கும் மேலாக ஓர் சிறந்த விடுதலைப் போராளி. அந்த விடுதலைப் போராளியின் இழப்பு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு.

அந்த விடுதலைப்பற்றாளனது வழியிலேயே அவரது குடும்பமும் ஒன்றிப்போயிருந்தது. அந்தவகையில் அவரது குடும்பத்தினருக்கும் நாம் எமது  அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

அவரது எண்ணத்திலும், சிந்தனையிலும், ஆத்மாவிலும் தவழ்ந்த உணர்வுகளையும் அவரது பசுமையான நெஞ்சத்திற் பற்றியெரிந்து கொண்டிருந்த விடுதலை வேட்கையையும் நாம் அறிவோம். அவர் உண்மையில் சாவடைந்து விடவில்லை.

தம்மை முழுமையாகவே தாயக விடுதலைக்காக அர்ப்பணித்து நின்ற மனிதர்களுள் ஒருவராக,  எமது விடுதலை வரலாற்றில் உயிர்மூச்சாகத் தொடரும் நடுகற்களுக்குள் ஒளிவீசும் இலட்சிய மனிதனாக வாழ்ந்து கொண்டிருப்பார்.

இதயத்தில், இனத்தின் விடுதலைக் கரத்தில், எமது  தேசத்தின் சுதந்திர வரலாற்று வாசல் வரை அரவிந்தன் அண்ணரின் நினைவுகளும்  சுவடுகளாய் பதியப்படும்.

எங்கள் தேசம் என்றும் உங்களை நினைவில் நிறுத்திக்கொள்ளும்…

என்றும் உங்கள் நினைவுகளுடன்..

அன்புத்தோழன்

அகதித்தமிழன் கிருஸ்ணா அம்பலவாணர்

aravinthan2

தாயகத்தின் வலிகள் சுமந்த ஒரு குரல் ….

கி.பி அண்ணா, முள்ளிவாய்க்காலின் அவலம் முடிந்த பொழுதுகளில்,

‘புதினம்’ ‘புதினப்பலகையாய்’ மாற வித்திட்டீர்கள்.

உங்களை நான் அறிந்து ஐந்து ஆண்டுகள்,

ஒருபோதும் நேரில் காணாவிட்டாலும்,

எனக்கொரு நல்லாசானய் இருந்தீர்கள்,

தொடர்புகள் மூலம் எனது மொழியறிவை

விருத்தி செய்ய துணைநின்றீர்கள்.

இன்று நீங்கள் மண்ணுலகை விட்டுச்

சென்ற செய்தி என்னுள் இடியாகியது.

எமது குடும்பத்தின் இன்பங்களை விடத் துன்பங்களை

நீங்கள் அதிகம் அறிவீர்கள்.

நிதானமான, இனிமையான உங்கள் பேச்சுக்கள்

என்றும் என் காதுகளில் அறிவுரை சொல்லும்.

நீங்கள் விட்டுச் சென்றுள்ள ஊடகப்பணி

உங்களது சீடர்களால் சிறப்பாக வழிநடத்தப்படும்.

தமிழன் என்ற சிறப்பு எமது பிணைப்பின்

பிரதான அடிநாதம்.

உங்களை உயிருடன் பார்க்காவிட்டாலும் கூட

மரணித்த உங்கள் உடலைக் கூடப் பார்க்க முடியாத

வாய்ப்பற்றவளாய் உள்ளேன்.

நான் மட்டுமல்ல எனது கணவர் கூட

உங்களில் பற்றும் மதிப்பும் கொண்டுள்ளார்.

எங்கள் குடும்பத்தின் பொருளாதாரப் பலத்திற்கு

நீங்கள் ஒர் பங்காளி.

முள்ளிவாய்க்காலில் என் உற்ற சகோதரனை

சொந்தங்களைப் பறிகொடுத்து விட்டு

என் கணவரையும் பிரிந்து தனியாக என் மகனுடன்

வாழ்ந்த அந்தப் பொழுதில்

பிறிதொரு உடன் பிறவாச் சகோதரனின் தொடர்பின்

மூலம் உங்களின் இணைப்பை நான் பெற்றேன்.

அன்றிலிருந்து இன்றுவரை நீங்கள் என்னை

மொழிபெயர்ப்புப் பணியில் வார்த்தெடுத்து

வளர்த்துள்ளீர்கள் என்பது என் வாழ்நாள் முழுமையும்

மறக்க முடியாத தருணங்கள்.

ஆயிரம் ஆயிரம் கதைகள் கூறினாலும்

நீங்கள் இன்று எம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள

உயிருடனில்லை என்பது மட்டுமே உண்மை.

சாவுக்குள் வாழ்ந்த வல்லமையே !

என்றும் சாயாது உங்கள் பணி தொடரும்.

ஊடகப் போராளியாய் நீங்கள் தேடிய விடியல்

தமிழரின் அர்ப்பணிப்பால் உயர்ந்து நிற்கும்.

  -நித்தியபாரதி-

aravinthan

ஆழமாக நேசித்துப் பழகிய உன்னதமான மனிதர்

கி.பி அரவிந்தன் அண்ணை இனி எம் மத்தியில் இல்லை. நோய் பறித்துவிட்டது அவர் உயிரை. நான் ஆழமாக நேசித்துப் பழகிய உன்னதமான மனிதர்களில் ஒருவர்.

இறப்பு என்பது எப்பொழுதுமே துயரத்தை; தருவதுதான். ஆனாலும் எம்மோடு நெருங்கிப் பழகிய மனிதர்களின் இழப்பு எம்மைத் தாங்கொணாத் துன்பத்தில் ஆழ்த்திவிடுகிறது.

கருத்தியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் அவரது வகிபாகம் தொடர்பாகவும் அவரது போராட்டச் செயற்பாடுகள், இலக்கிய, இதழியல் மற்றும் ஊடகவியல் பங்களிப்புகள் சார்ந்து அறிந்திருந்தாலும் 2008ஆம் ஆண்டுதான் அவரை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது.

2008இல் கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய ”இலங்கைத் தமிழர் – முழுமையான வரலாறு” நூல் அறிமுக விழாவில் விமர்சன உரையாற்றுவதற்காகவும், 2009 ஆரம்பத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள்வாக்கெடுப்பு செயற்திட்டத்தினை மக்கள் முன் எடுத்துச் செல்வதற்குரிய கருத்துரைகளை வழங்குவதற்காகவும் நோர்வேக்கு வருகைதந்த போதே நேரடியான சந்திப்புகள் நிகழ்ந்தன.

முள்ளிவாய்க்கால் துன்பியலுக்குப் பின்னர் புலம்பெயர் அரசியலில் அராஜகப்போக்கு தலைதூக்கியதையடுத்து புதினம், தமிழ்நாதம் ஆகிய இணையத்தளங்கள் பிற்போக்கு சக்திகளால் முடக்கப்பட்டன. அந்த இணையத்தளங்களை மீள இயங்கவைப்பதில் அரவிந்தன் அண்ணை அதிக சிரத்தையெடுத்தார். அம்முயற்சி கைகூடவில்லை. வெவ்வேறு நாடுகளிலிருந்த அந்தத் தளங்களின் பங்களிப்பாளர்களை ஒருங்கிணைத்து ”புதினப்பலகை” செய்தித்தளத்தினை புதிதாக உருவாக்கும்; பணியில் முனைப்புடன் இறங்கினார்.

புதினம், தமிழ்நாதம் தளங்களில் எனது பங்களிப்பும் இருந்ததை அறிந்து என்னுடனும் தொடர்பு கொண்டார். தொடர்ச்சியாக புதினப்பலகையை வெளிக்கொணர்வதில் அவரின் நெறிப்படுத்தலின் கீழ் பங்களிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

அதிலிருந்து அவரோடு நெருக்கமாகப் பழகுகின்ற அடிக்கடி உரையாடக்கூடிய அரிய வாய்ப்புக் கிட்டியது. பன்முகப்பரிமாணம் கொண்ட பேராளுமை மிக்க அந்த மனிதருடன் பழகும் வாய்ப்பு நிறைய விடயங்களைக் கற்றுக்கொடுத்தது.

“அறி-தெளி-துணி” என்பதனைப் புதினப்பலகையின் தாரகமந்திரமாகக் கொண்டு தமிழ் அரசியல் பரப்பில் புத்தாக்க சிந்தனையை வளர்ப்பதில் உளமார உழைத்தவர். மாயைகளுக்குள்ளும், தேக்கநிலைக்குள்ளும் ஈழத்தமிழர் அரசியல் நிரந்தரமாகச் சென்றுவிடக்கூடாது என்ற பிரக்ஞையைக் கொண்டிருந்த அவர், கொடிய நோயொன்றின் பிடியில் அகப்பட்டபோதும் ஊடகப்பரப்பில் காத்திரமான பணிகளை முன்னெடுத்தார்.

2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில், முள்ளிவாய்க்கால் துன்பியலிலிருந்தும், தோல்வியிலிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். மீண்டும் இவ்வாறான சிதைவுகளைத் தமிழர்கள் சந்திக்காதிருப்பதற்கு தோல்வியின் காரணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதும், தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதும் அவசியமென்று கருதியவர். அதன் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் விடுதலை அரசியலுக்கு பலம் சேர்க்கும் வகையில் அவரது ஊடகப்பணி அமைந்தது.

இலக்கியப் படைப்பாளி, விடுதலைப் போராட்ட முன்னோடி என்ற பரிமாணங்களோடு மக்களை நேசித்த ஒரு சமூகப் போராளி என்ற அடையாளம் அவருக்கு உண்டு. அவருடைய போராட்ட வாழ்க்கை, இலக்கியப் பங்களிப்புகள் உட்பட்ட வாழ்வனுபவங்களைப் பதிவுசெய்வதனூடாக அரசியல் விடுதலையை அவாவி நிற்கும் தமிழர்களின் வரலாற்றுப் பக்கங்களையும் ஒருசேரப் பதிவுசெய்யவும் ஆவணப்படுத்தவும் முடியுமென நான் நம்புகின்றேன்.

இதற்கு சிறப்புமிக்கதொரு வகிபாகத்தினைத் தமிழ்ச் சமூக, இலக்கிய மற்றும் அரசியல் பரப்பில் கொண்டிருந்த போதும் எளிமையும் தோழமையும் அவரது முதன்மை அடையாளங்களாக இருந்தன. அவரிடமிருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ளத்தக்க பண்பியல்புகளில் இவை முக்கியமானவையென பல தடவைகள் உணர்ந்திருக்கின்றேன்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் வடிவம்கொடுத்த மூலவர்களில் ஒருவர், அதற்காகத் தனது இளமைக்காலங்களை அர்ப்பணித்தவர் என்ற வகையில் தமிழ் அரசியல் பரப்பில் அவரது வகிபாகம் முக்கியத்துவம் வாய்ந்தது. படைப்பாளியாகவும் அவரது கவிதைகளும் எழுத்துகளும் தனித்துவப்பெறுமதி மிக்கவை.

இவருடைய கவிதைகளின் தனித்துவத்தையும் வீரியத்தையும் உணர்த்துவதற்கு பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் இவரது ”கனவின் மீதி” கவிதைத் தொகுப்பிற்கு வழங்கிய அணிந்துரையிலிருந்து சில வார்த்தைகளை இங்கு குறிப்பிடலாம்:

“கி.பி.அரவிந்தனுக்கு மாத்திரம் நல்லதொரு மொழிபெயர்ப்பாளர் கிடைப்பாரேயானால் அவருடைய வாசகர் வட்டம் விரியும். ஒரு நாட்டில் வாழுகின்ற – ஒரு அகதியின் அவலத்தை, இனத்தின் அவலமாக, நாட்டின் அவலமாக, உலகின் அவலமாகக் காட்டுகின்ற திறமை அரவிந்தனுக்குக் கைவந்துள்ளது என்றே கருதுகிறேன்” என்பது பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களது கூற்று.

பேராசிரியரின் இந்தக்கூற்றே இவருடைய கவிதைகளை பிரெஞ்சில் மொழியாக்கம் செய்கின்ற உந்துதலை மொழியியல் ஆய்வாளரும் விரிவுரையாளருமான அப்பாசாமி முருகையனுக்கு வழங்கியிருந்தது என அரவிந்தன் அண்ணை கூறியிருக்கின்றார். அவருடைய ”முகம்கொள்”  ”இனியொரு வைகறை” ”கனவின் மீதி” ஆகிய கவிதைத் தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் பிரெஞ்சில் “ஒரு உறைபனிக்கால கட்டியக்காரன் – “Le messager de l’hiver” எனும் தலைப்பில் மொழியாக்க நூலாக்கப்பட்டு கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் வெளியீடு செய்யப்பட்டது.

தமிழகத்தில் 1978 முதல் 1988 வரையான பத்தாண்டுகள் தங்கியிருந்தவாறு ஈழவிடுதலைப் போராட்டத்திற்கான அரசியல், இலக்கிய ஊடகப்பணிகளை மேற்கொண்டவர். தமிழகத்துடனான அவரது உறவும் தோழமையும் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழக அரசியல், இலக்கிய, ஊடக மட்டங்களில் பலராலும் வெகுவாக மதிக்கப்பட்ட ஒரு ஆளுமையாகத் திகழ்கின்றார். இன்னொரு வகையில் சொல்வதானால் தமிழகத்திற்கும், ஈழத்திற்கும், புலம்பெயர் சமூகத்திற்குமிடையிலானதொரு பாலமாக விளங்கினார் என்பது மிகையன்று.

90களின் ஆரம்பத்தில் பிரான்ஸ் நாட்டிற்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்த காலத்தில் புலம்பெயர் சமூக வாழ்வியலை மேம்படுத்தவல்ல பல்வேறு செயற்பாடுகளுக்கு உந்துதலாகவும் அறிவுசார் பங்களிப்பாளராகவும் விளங்கியதைப் பலரும் அறிவோம். ‘அப்பால் தமிழ்’ எனும் கலை இலக்கியப் படைப்புகளுக்கான இணைய இதழை நெறிப்படுத்தியதோடு, தமிழகத்திலிருந்து வெளிவரும் கலை, இலக்கிய, சமூக அரசியல் இதழான “காக்கைச் சிறகினிலே மாத இதழின் நெறியாளர்களில் ஒருவராக இயங்கியவர்.

எவ்வித பாரபட்சமுமின்றி ஈழத்து கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலரை குறிப்பாக இளையவர்களை எழுத்துலகத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். எழுதத் தூண்டியுள்ளார். படைப்பாளிகளுக்கான களங்களை அமைத்துக் கொடுத்து வந்துள்ளார் என்பதை நான் நன்கறிவேன். என்னையும் ஊக்குவித்து எழுதவைத்தவர். மறையும் வரை அத்தகு ஊக்குவிப்புகளை வழங்கி, உறுதுணையாக இருந்து வந்துள்ளார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முகநூலில் கருத்துகளைப் பகிர்ந்துள்ள எழுத்தாளர்கள் பலர் தாம் கி.பி.அரவிந்தன் அவர்களால் எழுத்துலகிற்குக் அறிமுகப்படுத்தப்பட்டதை நினைவுகூர்ந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

முள்ளிவாய்க்கால் சம்பவம் அவரை அதிகமாகத் தாக்கியிருந்தது. 1970களின் ஆரம்பத்திலிருந்து பௌத்த சிங்கள மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட முன்னோடி, ஆயுதப்போராட்டத்தை முன்மொழிந்த முன்னோடிகளில் ஒருவர் என்ற வகையில் இந்தப்போராட்டம் வெல்லப்பட வேண்டுமென்ற வேணவாவைத் தாங்கியிருந்த அவருக்கு முள்ளிவாய்க்கால் நிகழ்வு சொல்லொணாத்துயரத்தைக் கொடுத்தது.

அவருடன் கடந்த ஆண்டு நடுப்பகுதியில் நோர்வே தமிழ்3 வானொலிக்காக ஒரு உரையாடலை மேற்கொண்டிருந்தேன். அவருடைய பிரெஞ் மொழியாக்கக் கவிதைத்தொகுப்பு நூல்வெளியீட்டினை முன்வைத்து தொடங்கிய அந்த  உரையாடல், அவருடைய ஆரம்பகால போராட்டச் செயற்பாடுகள், தியாகி பொன் சிவகுமாரனோடு இயங்கிய காலம் மீதான நினைவுத் தெறிப்புகள், அவருடைய இளமைக்கால இலக்கிய ஈடுபாடு, இலக்கியவாதியாக உருவாகிய புறச்சூழல், தமிழகத்திலிருந்து அரசியல், ஊடகப்பணி ஆற்றிய காலங்கள், ஈழ விடுதலைக்கான போராட்டச் செயற்பாடுகள், புலம்பெயர் வாழ்வியல், புலம்பெயர் இளைய சமூகம், மொழி, பண்பாடு சார்ந்த செயற்பாடுகளில் கைக்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் என நீண்டு சென்றது. இவை அனைத்திற்குமான தனது பார்வையையும் அனுபவங்களையும் விரிவாகவும் ஆழமாகவும் பகிர்ந்து கொண்டார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்கூட ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ அவர்களுக்கான தமிழ்3 இன் நினைவுப்பகிர்வு நிகழ்ச்சியிலும், எஸ்..பொ அவர்களின் இலக்கிய வீரியம் பற்றிய தனது கருத்துக்களை பகிர்ந்திருந்தார். அப்பொழுது நினைத்திருக்கவில்லை இத்தனை விரைவில் அவர் எம்மைவிட்டுப் பிரிவார் என்று.

இலக்கியப் படைப்பாளி என்ற பரிமாணத்தோடு விடுதலைப்போராட்ட முன்னோடிகளில் ஒருவர், சமூக அரசியல் செயற்பாட்டாளர் என்ற பரிமாணங்களும்; அவருக்கு உண்டு.

அரவிந்தன் அண்ணையின் மறைவு, தமிழ் ஊடகப்பரப்பிற்கும், இலக்கியத்திற்கும், அரசியலுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவால் துயருற்றிருக்கும் சுமத்திரி அக்கா, அங்கதன், மானினி உட்பட்ட குடும்பத்தினர் உறவினர்கள், நண்பர்களின் உணர்வுகளோடு நானும் இணைந்து கொள்கின்றேன்.

ரூபன் சிவராஜா

நோர்வே.

kipi

இனி எப்போது கேட்போம் அந்தக் குரலை….?

“வணக்கம் …..” என்று உரிமையோடும் உறுதியோடும் தினந்தோறும் தொலைபேசி வழியாகவும், ஸ்கைப் வழியாகவும் ஒலித்த அரவிந்தன் அண்ணாவின் குரல் ஓய்ந்து விட்டது.

அவர் மறைந்த சில நிமிடங்களில் தொலைபேசி மூலம் அந்தச் செய்தி செவியை எட்டிய போது, அதனை நம்ப முடியவில்லை.

இவ்வளவு விரைவாக அவர் எமைவிட்டுப் பிரிந்து செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை.

2015 மார்ச் 08ம் நாள் – அரவிந்தன் அண்ணாவின் பிரிவுச் செய்தி தான் புதினப்பலகையில் முதலிடத்தில் இருக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

சில நாட்களுக்கு முன்னர், தொலைபேசி வாயிலாக கேட்ட அவரது குரல் தான், என் காதுகளுக்கு இறுதியானதாகி விட்டது.

ஐந்து ஆண்டுகளாக, புற்றுநோயுடன் போராடிய போதிலும் கூட, அவரது குரலில் எப்போதும் உறுதியை உணர முடியும்.

ஐந்து ஆண்டுகளில் அவர் வேதனையின் விளிம்புகளில் இருந்த பல சமயங்களில் கூட, தனது மனவுறுதியை கைவிட்டவரில்லை.

அந்த உறுதி தான், அவரை, இந்த நோயுடனும், அவரை இந்தளவு காலமும் வாழவும் வைத்தது, புதினப்பலகையையும் வழிநடத்த வைத்தது.

ஈழப்போராட்டத்தின் ஆரம்ப நாட்களில், இன விடுதலைக்காக சிறைகளிலும், கட்டாந்தரைகளிலும், பட்ட துன்பங்கள், அவரைக் கடைசி நாட்களில், நோயுடன் போராடும் வைராக்கியத்தைக் கொடுத்திருந்தது போலும்.

மரணத்தின் வாசலை தொட்டுக் கொண்டு நின்ற போது கூட அவர், புதினப்பலகையில் தன்னால் ஒன்றும் செய்ய முடியாதிருக்கிறதே என்று தான் வருந்தினார்.

ஈழத்தமிழரின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற கேள்வியே அவருள் எங்கும் வியாபித்திருந்தது.

ஆறு பத்தாண்டுகளாக இவ்வுலகில் வாழ்ந்த அவருடன் கடைசி ஆறாண்டுகளில், அதிகம் உரையாடியவர்களில்- தொடர்பில் இருந்தவர்களில் ஒருவன் என்ற வகையில் அதனை உணர முடிந்தது.

அந்த ஏக்கத்தை தீர்ப்பதற்கான ஒரு கருவியாக அவர் ஊடகத்தைப் பயன்படுத்தினார்.

எழுத்தின் ஊடாக, தமிழினத்தை அறிவூட்டுவதன் மூலம், எதிர்காலம் குறித்த தெளிவையும், துணிவையும் அவர் தமிழ்மக்களுக்குக் கொடுக்க விரும்பினார்.

அதற்காக, அவர் இயலாமையின் உச்சத்தில் இருந்த போதும் கூட, புதினப்பலகைக்காக ஆய்வுகளையும், கட்டுரைகளையும் இணையத்தில் தேடிக் கொண்டேயிருந்தவர்.

புதினப்பலகைக்காக அவருடன் பணியாற்றிய இந்த ஆறு ஆண்டுகளும் மறக்க முடியாத ஏராளம் அனுபவங்களை அள்ளித் தந்துள்ளன.

அவை என்றைக்கும் எமக்கு வழிகாட்டியாய் நிற்கும்.

வரலாறு கோடானுகோடி மனிதர்களை உருவாக்கினாலும், வரலாற்றை சில மனிதர்கள் தான் படைப்பார்கள்.

அத்தகைய தனக்கென ஒரு வரலாற்றைப் படைத்த மனிதராகவே மறைந்து விட்டார் அரவிந்தன் அண்ணா.

அவரது நினைவுகளும், வழிகாட்டுதலும் என்றைக்கும் எமக்கு புதிய உறுதியையும் உத்வேகத்தையும் தான் கொடுக்கும்.

எதற்கும் கலங்காத அவரது கம்பீரமான குரலே, என்றைக்கும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும்.

அந்த ரீங்காரமே எம்மை வழிநடத்தும்.

– கார்வண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *