உள்நாட்டு விசாரணையில் ஐ.நா தேவையில்லை – பிபிசி செவ்வியில் மைத்திரி
ஐ.நா அதிகாரிகளின் தலையீடு இல்லாத உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை அடுத்த மாதத்துக்குள் நிறுவப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அவர், பிபிசி சிங்கள சேவையான சந்தேசயவுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை இன்னும் ஒரு மாதத்துக்குள் நிறுவ்முடியும் என்று நம்புகிறேன்.
அனைத்துலக அழுத்தங்கள் இருந்தாலும், ஐ.நா விசாரணையாளர்கள் இதில் தொடர்புபடமாட்டார்கள்.
மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்கும் இந்த உள்நாட்டு விசாரணைக் குழு, காத்திரமாகவும், சமமாகவும், சட்டரீதியாகவும், நடுநிலையாகவும், விசாரணைகளை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன்.
ஐ.நாவின் ஆலோசனைகள் பெறப்படும். ஆனால், இந்த விசாரணையில் அவர்களின் தலையீடுகள் தேவையற்றது.
இந்த விவகாரங்களில் அனைத்துலக கருத்தை வெற்றி கொள்வதற்கு, சிறிலங்கா மக்களிடையே, நல்லிணக்கம், சகோதரத்துவம், கூட்டுவாழ்க்கை, மற்றும் நட்புறவை ஊக்குவிக்கும் புதிய பயணம் ஒன்றை தொடங்க நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.