13வது திருத்தம் இறுதித் தீர்வல்ல என்பதை மோடியிடம் வலியுறுத்துவோம் – விக்னேஸ்வரன்
13வது திருத்தச்சட்டத்துக்குப் பதிலீடாக, கூடுதல் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தி ஹிந்து நாளிதழுக்கு, மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“13வது திருத்தச்சட்டம் தமிழர்களின் பிரச்சினைக்கு இறுதியான தீர்வாக இருக்க முடியாது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நாம் வரவேற்கிறோம். அவர் ஒரு நண்பர். வடக்கிற்கு வரும் அவரது, எம்மைப் பற்றிய கரிசனைகளை மதிக்கிறோம்.
அவரிடம் நாம், 1987ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய- சிறிலங்கா உடன்பாட்டுக்கு அமைய உருவாக்கப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டிய தருணம் இதுவென்று பரிந்துரைப்போம்.
இதற்குப் பதிலாக, வடக்கு,கிழக்கிற்கு கூடுதல் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
அதிகாரப்பகிர்வுக்காக வாதிடுபவர் என்ற வகையில், மோடி சிறிலங்காவின் நிலைமையை ஏற்றுக் கொள்வார்.
குறிப்பாக, 13வது திருத்தச்சட்டத்தின் குறைபாடுகளை அவரால் புரிந்து கொள்ள முடியும் என்பதில் சந்தேகமில்லை.
அவரது பயணமும், புரிதலும், எமது அரசியலமைப்பு பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவதற்கு மிகவும் முக்கியமானது.
இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளுக்கிடையில் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும், அரசியலமைப்பினால், தான் மோடியின் சிறந்த தலைமைத்துவத்தின் மூலம், குஜராத்தை மாற்றியமைப்பது சாத்தியமானது.
ஆனால், சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பில் அது சாத்தியமற்றது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அணுகுமுறைகள் வித்தியாசமானவை. ஆனால், புதிய அரசாங்கத்தின் சில பிரிவுகள் பொறுப்பின்றிச் செயற்படுகின்றன.
இத்துபோன்ற நீண்டகால அரசியல் தந்திரோபாயமே இனப்பிரச்சினையை மோசமானதாக்கியது. ஆட்சிமாற்றம் இந்த நிலைமைக்கு முடிவுகட்டவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.