மேலும்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை பாதுகாக்க சீனா இராஜதந்திர ரீதியாக முயற்சி

Yi Xianliangசிறிலங்கா அரசாங்கத்தினால், இடைநிறுத்தப்பட்ட 1.4 பில்லியன் டொலர் பெறுமதியான கொழும்பு துறைமுக நகரத் திட்ட உடன்பாட்டைப் பாதுகாப்பதற்கு, சீனா தனது இராஜதந்திர முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.

இந்த திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த சிறிலங்கா அமைச்சரவை கடந்த புதன்கிழமை முடிவெடுத்திருந்தது.

இதையடுத்து, அண்மையில் பொறுப்பேற்ற சீனத் தூதுவர் யி ஜியான்லியாங் கடந்த வியாழக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இதையடுத்து. கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில்,   சீன- சிறிலங்கா உறவுகள் குறித்து இருதரப்பும் நட்புரீதியாக கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், சீன – சிறிலங்கா பொருளாதார, வர்த்தக ஒத்துழைப்புத் தொடர்பாக, குறிப்பாக, பிரதான திட்டங்களில் ஒத்துழைப்பது பற்றிய வெளிப்படையான கருத்துக்களை சீனத் தூதுவர் பரிமாறிக் கொண்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Yi Xianlian-ranil

Yi Xianlian- mangala

ஆனால், கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் குறித்தே இந்தச் சந்திப்புகளில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட, தனது பெயரை வெளியிட விரும்பாத சீனத் தூதரக உயர் அதிகாரி ஒருவர், தான் செய்து கொண்ட இருதரப்பு மற்றும் வர்த்தக உடன்பாடுகளை மதிக்க வேண்டியது சிறிலங்கா அரசாங்கத்தின் கடமை என்று குறிப்பிட்டுள்ளார்.

“கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தினால் சிறிலங்காவுக்கு எந்த செலவும் ஏற்படாது. ஆனால்,  நாட்டின் பொருளாதாரத்துக்கும், மக்களுக்கும் நன்மையை மட்டுமே அளிக்கும்.

வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் திட்டங்களை நிறுத்துவதன் மூலமும்,  ஆட்சிமாற்றம் ஏற்பட்டதைக் காரணம் காட்டி,  கொள்கையை மாற்றிக் கொள்வதன் மூலமும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தவறான செய்தி அனுப்பப்படுகிறது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு, ஒரு நாட்டின் கொள்கை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

முன்னைய அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்ட இருதரப்பு உடன்பாடுகள், வர்த்தக உடன்பாடுகளை  புதிய அரசாங்கம் மதித்து செயற்பட வேண்டியது, அதன் கடமை. இது ஒரு அனைத்துலக நெிறிமுறையாகும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் சட்டரீதியான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

துறைமுக நகரம் என்று பெயரிடப்பட்டுள்ளதால், சிலர் இந்த திட்டத்தை தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர். இது துறைமுகத் திட்டம் அல்ல.  இது ஒரு நகர அபிவிருத்தி திட்டம்.

இந்த திட்டம் நிறைவடையும் போது, பரந்தளவிலான பொருளாதார சமூக நன்மைகளுடன் கூடிய, சிறிய சிங்கப்பூர் போன்று இருக்கும்.” என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *